ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

Delhi 43 வெடிகுண்டு வழக்குகளில் தேடப்பட்ட பயங்கரவாதி சையத் அப்துல் கரீம் கைது


Describing Tunda as a major catch, the security agencies say he would be able to throw some light on Lashkar-e-Toiba's operations in India.
 புதுடெல்லி,
நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்ற 40க்கும் மேற்பட்ட குண்டுவெடிப்புகளில் மூளையாக செயல்பட்ட அதிபயங்கர தீவிரவாதி, சையத் அப்துல் கரீம் என்ற துண்டா.மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ந் தேதி நடைபெற்ற தீவிரவாத தாக்குதல்களுக்கு பின்னர், இந்தியாவிடம் பாகிஸ்தான் ஒப்படைக்க வேண்டும் என்று கோரப்பட்ட 20 தீவிரவாதிகளை கொண்ட பட்டியலில் முதல் இடம் பிடித்தவர்.
வெடிகுண்டு வல்லுனர்
பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிற லஸ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தின் முன்னணி வெடிகுண்டு தயாரிப்பு வல்லுனராக திகழ்ந்து வந்த துண்டாவை நேற்று முன்தினம் பகல் 3 மணிக்கு இந்தியநேபாள எல்லையில் (பன்வாசாமகேந்தர்நகர் எல்லைப்பகுதி) டெல்லி போலீசார் கைது செய்தனர்.

முதற்கட்ட விசாரணைக்கு பின்னர் டெல்லியில் மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.
முக்கிய சதிகாரன்
இது தொடர்பாக டெல்லி போலீஸ் (சிறப்பு பிரிவு) கமிஷனர் எஸ்.என். ஸ்ரீவஸ்தவா, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் துண்டா கைது தொடர்பாக பல்வேறு முக்கிய தகவல்களை வெளியிட்டார்.இந்தியா தேடிவரும் 20 அதிபயங்கர தீவிரவாதிகள் பட்டியலில் இடம் பிடித்த, 70 வயதான துண்டா. வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டபோது நடந்த விபத்தில் இடது கை துண்டானது. இதனால்தான் அவர் ஒரு கை துண்டிக்கப்பட்டவர் என்ற அர்த்தப்படுகிற வகையில் துண்டா என்று அழைக்கப்பட்டார்.

பாகிஸ்தான் பாஸ்போர்ட்
துண்டாவை கைது செய்தபோது, அப்துல் குடோஸ் என்ற பெயரில் அவருக்கு பாகிஸ்தான் கடந்த ஜனவரி மாதம் 23ந் தேதி வழங்கிய ஏ.சி. 4413161 எண் கொண்ட பாஸ்போர்ட் கைப்பற்றப்பட்டது.ஜம்முகாஷ்மீர் மாநிலத்துக்கு வெளியே மும்பை, ஐதராபாத், டெல்லி, ரோட்டக், ஜலந்தர், பானிப்பட், சோனிப்பட், லூதியானா, கான்பூர், வாரணாசி, குல்பர்கா, சூரத், லக்னோ என பல்வேறு இடங்களில் நடந்த 43 வெடிகுண்டு வெடிப்புகளில் துண்டாவுக்கு தொடர்பு உண்டு. மும்பையில் 1993ம் ஆண்டு ரெயில்களில் நடந்த குண்டுவெடிப்பு, 19971998 ஆண்டுகளில் டெல்லியில் நடந்த குண்டுவெடிப்புகளிலும் துண்டா மிக முக்கிய பங்கு வகித்தார். இந்த குண்டுவெடிப்புகளில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 400க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
யார் இந்த துண்டா?
1943ம் ஆண்டு டெல்லியில் ஒரு பழைய இரும்பு வியாபாரிக்கு மகனாக பிறந்த துண்டா, தந்தையின் மரணத்துக்கு பின்னர் உத்தரபிரதேச மாநிலம் பிலாகுவாவுக்கு குடிபெயர்ந்தார். கார்பெண்டராக, இரும்பு வியாபாரியாக, துணி வியாபாரியாக வாழ்க்கை நடத்தி வந்தார். 40 வயதை கடந்தபோது அவர், தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்தார்.முதலில் வங்காளதேசம் சென்ற அவர் பின்னர் பாகிஸ்தானுக்கு போனார். அங்கு அவருக்கு தீவிரவாத கொள்கைகளை உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. புகட்டியது. அதிநவீன வெடிகுண்டுகள் தயாரிப்பிலும் துண்டாவுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. வங்காளதேசத்துக்கு சென்றபோது முதலில் துண்டா, லஸ்கர் இ தொய்பா இயக்கத்தின் தலைவன் ஜாகி உர் ரகுமான் லக்வியின் நேரடி கண்காணிப்பில் வைக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து அவர் லஸ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்துக்காக வெடிகுண்டு தயாரிப்பில் முன்னணி நிலை வகித்தார்.
சர்வதேச போலீஸ் நோட்டீசு
துண்டா தீவிரவாத தாக்குதல்களில் ஈடுபட்டு வந்தபோது அவரை கைது செய்ய சர்வதேச போலீஸ் (இன்டர்போல்) அவருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீசு பிறப்பித்தது.
1998ம் ஆண்டு துண்டாவின் மாணவர்கள் மாதோ உர் ரகுமான், அக்பர் என்ற ஆரூண் டெல்லியில் கைது செய்யப்பட்டது நினைவுகூரத்தகுந்தது.
கொல்லப்பட்டதாக அறிவிப்பு
2000ம் ஆண்டில் துண்டா, வங்காளதேசத்தில் நடந்த குண்டுவெடிப்பு ஒன்றில் கொல்லப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகின. இதை மத்திய உளவுத்துறை அப்படியே நம்பியது. அத்துடன் தேடுதல் வேட்டையும் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.ஆனால் 2005ம் ஆண்டு துபாயில் லஸ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வந்த அப்துல் ரசாக் மசூது, டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர், துண்டா சாகவில்லை. 2003ம் ஆண்டு நான் அவரை பாகிஸ்தானில் உள்ள லாகூர் நகரில் சந்தித்தேன் என திடுக்கிடும் வாக்குமூலம் அளித்தார். அதன்பின்னர் துண்டாவை தேடும் வேட்டை மீண்டும் முடுக்கி விடப்பட்டது.
சுற்றி வளைத்து பிடித்தது எப்படி?
இந்த நிலையில்தான், துண்டா 10 நாட்களுக்கு முன்னர் கராச்சியில் இருந்து, காத்மாண்டு வழியாக துபாய் சென்றதாகவும், அங்கு துண்டா இருப்பதை மத்திய உளவுத்துறை துப்பறிந்து, டெல்லி போலீசுக்கு தகவல் கொடுத்தது. டெல்லி போலீசாரின் கண்காணிப்பு வளையத்தில் துண்டா சிக்கினார். நேற்று முன்தினம் மாலை கண்காணிக்க தொடங்கினர். நேற்று முன்தினம் இந்தியநேபாள எல்லையில் சுற்றி வளைத்து கைது செய்தனர்.அவர் வளைகுடா நாடு ஒன்றில் இருந்து நாடு கடத்திக்கொண்டு வரப்பட்டு, கைது செய்யப்பட்டதாகவும் மற்றொரு தகவல் கூறுகிறது.
இளைஞர்களுக்கு பயிற்சி
டெல்லியில் மட்டுமே துண்டாவுக்கு எதிராக 21 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் குறிப்பிட்ட இனத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு துண்டா வெடிகுண்டு தயாரிப்பு பயிற்சி அளித்ததாக டெல்லி போலீசார் தெரிவித்தனர்.துண்டாவின் அறிவுரையின் பேரில், பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்தை சேர்ந்த லஸ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் டெல்லியில் 23, அரியானாவில் 5, உத்தரபிரதேசத்தில் 3 குண்டுவெடிப்புகளை அரங்கேற்றியதாக போலீசார் தெரிவித்தனர்.
மும்பையில் தனி இயக்கம்
டெல்லி போலீஸ் (சிறப்பு பிரிவு) இணை கமிஷனர் எம்.எம்.ஓபராயும் நிருபர்களிடம் பேசினார். அவர் வெளியிட்ட முக்கிய தகவல்கள்:
* மும்பையில் 1985ம் ஆண்டு துண்டா இருந்தபோது, பிவண்டியில் இனக்கலவரங்கள் நடந்தன.
* மும்பையில் டாக்டர் ஜலீஸ் அன்சாரி என்பவருடன் சேர்ந்து துண்டா, தான்ஜீம் இஸ்லா உல் முஸ்லிமான் என்ற இயக்கத்தை ஆரம்பித்தார். லஸ்கர் இ தொய்பா தீவிரவாதியான அஜாம் காவ்ரியும் இந்த இயக்கத்தில் இணைந்தார்.
* 1993ம் ஆண்டு துண்டாவும், அன்சாரியும் இணைந்து மும்பை, ஐதராபாத் நகரங்களில் நாசவேலைகளை அரங்கேற்றியதுடன், 7 ரெயில் குண்டுவெடிப்புகளையும் நடத்தினர்.
* 1994ல் அன்சாரி கைது செய்யப்பட்ட பின்னர் வங்காளதேசத்துக்கு தப்பி ஓடிவிட்ட துண்டா, அங்கு டாக்காவில் இளம்தீவிரவாதிகளுக்கு வெடிகுண்டு தயாரிப்பு பயிற்சி அளித்தார்.
ரகசிய இடத்தில் விசாரணை
டெல்லியில் 2010ம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்றபோது, அங்கு நாசவேலைகளில் ஈடுபட துண்டா சதி செய்ததும், அதில் ஈடுபடவிருந்த ஆசாமிகளை டெல்லி போலீசார் கைது செய்ததும் பெரும் உயிரிழப்புகளை தவிர்த்துள்ளது.தற்போது டெல்லி போலீசார் துண்டாவை ஒரு ரகசிய இடத்தில் வைத்து துருவி துருவி விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணை முடிவில் இந்தியாவில் லஸ்கர் இ தொய்பா நடத்திய நாசவேலைகள், அவற்றில் தொடர்புடைய தீவிரவாதிகள், அவர்களின் மறைவிடங்கள், துண்டாவுக்கும், தாவூத் இப்ராகிமுக்கும் இடையேயான தொடர்புகள் பற்றிய பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராணுவ ஆராய்ச்சியாளர் கருத்து
தீவிரவாதி துண்டா கைது செய்யப்பட்டிருப்பது குறித்து ராணுவ ஆராய்ச்சி வல்லுனர் கேப்டன் (ஓய்வு) பரத்வர்மா கருத்து தெரிவிக்கையில், தாவூத் இப்ராகிமின் வலது கரமாக செயல்பட்ட இக்பால் மிர்ச்சி லண்டனில் இறந்து விட்டதும், துண்டா கைது செய்யப்பட்டிருப்பதும், தாவூத் இப்ராகிமுக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது. இது தீவிரவாத அமைப்புகளுக்கும் பெருத்த பின்னடைவுதான். துண்டா, பென்சில் பேட்டரி குண்டுகளை தயாரிப்பதில் வல்லவன். இந்தியாவுக்கு எதிராக இயங்குகிறவர்களுக்கு நெருக்கமானவன் என்றார்.அவர் மேலும் தெரிவிக்கையில், தாவூத் இப்ராகிம், ஹபீஸ் சையத் (மும்பை தாக்குதல் சம்பவத்தின் மூளையாக செயல்பட்டவன்; ஜமாத்உத்தவா தீவிரவாத அமைப்பின் தலைவன்) ஆகியோரை கைது செய்வதற்கான ரகசிய நடவடிக்கைகளை முடுக்கி விட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. தாவூத் இப்ராகிமையும் விரைவில் பிடித்துவிட முடியும் என நம்புகிறேன் என்று கூறினார்.
துண்டா கடந்து வந்த பாதை
* டெல்லியில் 1943ம் ஆண்டு பிறப்பு.
* தந்தையின் மரணத்துக்கு பின்னர் உத்தரபிரதேசத்தில் குடியேற்றம்.
* 40 வயதான நிலையில் தீவிரவாத இயக்கத்தில் சேருதல்
* முதலில் வங்காள தேசம், பின்னர் பாகிஸ்தானிலும் தீவிரவாத பயிற்சி.
* வெடிகுண்டு தயாரிப்பில் நிபுணத்துவம்.
* இளம் தீவிரவாதிகளுக்கு வெடிகுண்டு தயாரிப்பில் பயிற்சி அளித்தல்.
* அதிபயங்கர தீவிரவாதிகள் ஜாகி உர் ரகுமான் லக்வி, ஹபீஸ் சையத், தாவூத் இப்ராகிம் ஆகியோருடன் நெருக்கம்.
* இந்தியாவில் நடந்த 43 குண்டுவெடிப்புகளில் மூளையாக செயல்படல்.
* 2000ம் ஆண்டில் வங்காளதேசத்தில் கொல்லப்பட்டதாக அறிவிப்பு
* கடைசியில் துபாயில் பதுங்கல்
* மத்திய உளவுத்துறை கண்காணிப்பு வலையில் துண்டா
* டெல்லி போலீசுக்கு உளவுத்துறை தகவல்
* இந்தியநேபாள எல்லையில் 16ந் தேதி கைது
* டெல்லி கோர்ட்டில் 17ந் தேதி ஆஜர்
* 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து ரகசிய விசாரணை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக