வியாழன், 22 ஆகஸ்ட், 2013

செம்மொழியை வெறுக்கும் ஜெயலலிதாவின் அதிமுக அரசு !

இன்றைய ஆட்சியாளர்களுக்கு விடை அளிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை! கலைஞர் அறிக்கை! திமுக தலைவர் கலைஞர் 22.08.2013 வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,<"உலகில் 6 ஆயிரத்து 800 மொழிகள் உள்ளன எனக் கூறப்படுகிறது. எனினும், இன்றுள்ள மொழிகளில் 2,000 மொழிகள் மட்டுமே உலக அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளன. அவற்றுள் கிரேக்கம், இலத்தீனம், அரேபியம், பாரசீகம், சீனம், ஈப்ரு, சமஸ்கிருதம் ஆகிய ஏழு மொழிகள் மட்டுமே, “செம்மொழி” எனும் தகுதியைப் பெற்றிருந்தன.
தமிழ் மற்ற செம்மொழிகளை விடவும் மேலானதாகும். இதற்குப் பல சான்றுகள் உள்ளன. செம்மொழிகளில் இலத்தீன், ஈப்ரு ஆகிய மொழிகள் இன்று பயன்பாட்டில் இல்லை. கிரீக் மொழி இடையில் நசிந்துவிட்ட போதிலும், தற்பொழுதுதான் மேலும் வளமடைந்து வருகிறது.
சமஸ்கிருதம் இன்று பேச்சு வழக்கில் இல்லை; சீனமொழி பட எழுத்து முறையில் உள்ளதால், அம்மொழியால் உள்ளத்து உணர்வுகளைத் தெளிவாக வெளிப்படுத்த இயலாது என மொழியியலார் கூறுகின்றனர். அரேபிய மொழி காலத்தால் மிகவும் பிந்தியது; பாரசீகம், அரேபிய வரி வடிவத்தில் எழுதப்படுகிறது;
இந்தச் செம்மொழிகள் அனைத்தையும் பார்க்கும்போது, தமிழ் மொழி - மற்ற செம்மொழிகள் எல்லாவற்றையும்விட உயர் தனிச் சிறப்பு வாய்ந்தது என்பது தெளிவாகிறது. இலக்கிய வளத்தைப்பொறுத்தவரை 2,500 ஆண்டு காலமாக இடையறவு படாத - தொடர்ச்சியான இலக்கியங்களைக்கொண்டுள்ளது தமிழ்!
தமிழ்மொழி எந்த ஒரு மொழியையும் சார்ந்திருக்கவில்லை; இது, தனித்தன்மை வாய்ந்த மொழி. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு முதலிய பல மொழிகள் திராவிட மொழிகள் எனக்கூறப்படுகின்றன. இந்தத் திராவிட மொழிகளுக்கெல்லாம் - மூலமொழியாக தமிடிந விளங்குகிறது.
இதனை நமக்கும் உலகத்திற்கும் எடுத்துச் சொன்னவர் டாக்டர் கால்டுவெல். அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உட்பட 12 திராவிட மொழிகளை ஆராய்ந்து எழுதியுள்ள, “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” என்னும் நூல் இந்த உண்மையை நமக்கு உரைக்கிறது.

இந்த வரிசையில் தமிழ்மொழி “செம்மொழி” எனும் சிறப்பைப் பெற்று; நம் அனைவருக்கும் மகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் தந்துள்ளது என்றால் அதற்குக் காரணம் தி.மு.கழகம் அல்லவா?
தமிழ் மொழிக்கு செம்மொழித் தகுதி வேண்டுமென்று பரிதிமாற்கலைஞர் போன்றவர்களும் ஏனைய தமிழ்ச் சான்றோர்களும், நூறாண்டுகளுக்கு மேலாக கண்ட கனவு, தி.மு. கழகம் பங்கு பெற்றிருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மத்தியில் ஆட்சியில் இருந்த காரணத்தால் சோனியா காந்தி அவர்கள் வாயிலாக வலியுறுத்திக் கேட்டுக் கிடைக்கப் பெற்ற ஒன்றாகும். பின்னர், தமிழ்ச் செம்மொழி ஆய்வு நிறுவனம் கர்நாடக மாநிலத்திலே இருந்த நிலையில், அதனை தமிழகத்திற்கே மாற்றித் தரவேண்டுமென்ற கோரிக்கையை மீண்டும் தொடர்ந்து எழுப்பி, அதுவும் தி.மு. கழக ஆட்சியில்தான்கிடைத்தது. அந்த நிறுவனத்திற்காக தி.மு. கழக ஆட்சியில் தனியே தேவையான நிலம் ஒதுக்கப் பெற்று அங்கே எழில்மிகு கட்டிடங்கள் கட்டப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதற்கிடையில் தற்காலிகமாக தமிழ்ச் செம்மொழி ஆய்வு நிறுவனம் தமிழக அரசுக்குச் சொந்தமான “பாலாறு” இல்லத்திலே நடந்து வந்தது. அந்த நிறுவனத்திற்குச் சொந்தமான நூலகத்தில் ஏராளமான அரிய ஆய்வு நூல்களும், பழம் பெரும் ஓலைச் சுவடிகளும் உள்ளன. கழக ஆட்சிக் காலத்தில் அந்த நூலகத்திற்கு இடம் இல்லை என்றதும், செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இருந்த தமிழகச் சட்டப்பேரவை, ஓமந்தூரார் வளாகத்தில் புதிதாகக் கட்டப்பட்ட இடத்திற்கு மாற்றப்பட்ட காரணத்தால், அந்த இடத்திலே செம்மொழி ஆய்வு நிறுவனத்தின் நூலகம் “பாவேந்தர்” பெயரால் அமையப் பெற்றது.
ஆனால் அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும், தமிழுக்குச் செம்மொழித் தகுதி கிடைத்தது; கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் என்பதால் அதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் செம்மொழி ஆய்வு நிறுவன நூலகத்திற்கு குறிப்பிட்டு வேறு எந்த இடத்தையும் ஒதுக்காமல் இரவோடு இரவாக அந்த இடத்தையே காலி செய்து விட்டார்கள். அந்த நூலகத்தில் இருந்த நூல்கள் எல்லாம் மூன்று அறைகளில் குவித்து வைக்கப்பட்டுள்ளன என்றும், இடப்பிரச்சினை தொடர்பாக செம்மொழி ஆய்வு நிறுவனத்தினர் எழுதிய பல்வேறு கடிதங்களுக்கும் தமிழக அரசு பதில் அளிக்கவில்லை என்றும், ஆய்வு மாணவர்கள், தமிழறிஞர்கள் பயன்படுத்தி வந்த நூலகத்தையும், செம்மொழி ஆய்வு நிறுவனத்தையும் மீண்டும் செயல்படச் செய்ய வைக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர் என்றும் ஏடுகளில் செய்தி வந்தன.
தமிழுக்கு செம்மொழித் தகுதி வேண்டுமென்று முதலில் குரல் கொடுத்த பரிதிமாற்கலைஞர் என்ற பெயரில் “கலைஞர்” என்ற பெயர் இடம் பெற்ற காரணத்தாலோ, அந்த நிறுவனம் கழக ஆட்சியில் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டது என்பதாலோ “காடிநப்புணர்ச்சி”யின் உச்சி முகடு வரை சென்று அ.தி.மு.க. ஆட்சியினர் அதனைப் படாதபாடு படுத்தி வருகின்றனர்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் வழிகாட்டும் தலைவர் சோனியா காந்தி 8.11.2005 அன்று எனக்கு எழுதிய கடிதத்தில், “I am glad that all the formalities for declaring Tamil as a Classical Language have now been completed. This is an achievement for all the constituents of the UPA Govt., but particular credit goes to you and your party.”“தமிழ் செம்மொழி எனப் பிரகடனம் செய்வதற்கான நடைமுறைகள் அனைத்தும் தற்பொழுது முடிந்துள்ளன என்பதனைத் தெரிவிப்பதில் மகிடிநச்சியடைகிறேன். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் பங்குபெற்றுள்ள அனைவருக்கும், இது சாதனையாகும்; ஆனால், இதன் பெருமை முழுவதும் உங்களையும், உங்கள் கட்சியையுமே சாரும்.”- என்று எழுதினார்கள்.
தமிழ் மொழியைச் செம்மொழி என அறிவித்துப் பெருமைப்படுத்திய மத்திய அரசு, செம்மொழித் தமிழ் குறித்த ஆய்வுப் பணிகளையும், மேம்பாட்டுப் பணிகளையும் தமிழ்மொழியைப் பரப்பும் பணிகளையும் மைசூரில் உள்ள இந்திய மொழிகளுக்கான மத்திய நிறுவனத்திடம் ஒப்படைத்தது.
அதுகுறித்து, 28.11.2006 அன்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்களுக்கு நான் எழுதிய கடிதத்தில்,  “மைசூரில் உள்ள மத்திய மொழிகள் நிறுவனத்தின் நோக்கங்கள் செம்மொழி என்னும் கண்ணோட்டத்தில் அமைந்தது அல்ல; இந்தியாவின் அனைத்து மொழிகளின் மூலமும் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் ஒருமைப்பாடு உணர்வு ஆகியவற்றை வளர்த்திடும் நோக்கத்துடன், அந்நிறுவனம் செயல்படுகிறது. எனவே, தமிழ்மொழியின் சிறப்புகளை மேம்படுத்துதல் என்பதையே நோக்கமாகக் கொண்டு, `மத்திய அரசின் செம்மொழித் தமிழாழ்வு மையம்’ சென்னையில் அமைக்கப்பட வேண்டும்”- என்று மத்திய அமைச்சர் அர்ஜுன்சிங் அவர்களுக்குக் கடிதம் எழுதினேன்.
இந்தக் கடிதம் கிடைத்த அடுத்த நாளே அதாவது, 29.11.2006 அன்று, மாண்புமிகு மத்திய அமைச்சர் அர்ஜுன்சிங் எழுதிய கடிதத்தின் முடிவில், “I am asking the Ministry to include a suitable proposal for an Institute for Classical Tamil in the Ministry’s XI th plan proposals”. “எனது அமைச்சத்தின் 11வதுதிட்ட அறிக்கையில் செம்மொழித் தமிழ் நிறுவனம் அமைப்பதற்காகப் பொருத்தமான கருத்துருவைச் சேர்க்குமாறு அறிவுரை கள் வழங்கியுள்ளேன்” - என்று எழுதியிருந்தார்.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு, பழைய மாமல்லபுரம் சாலையில் அதாவது, தற்போதைய ராஜீவ் காந்தி சாலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சோழிங்கநல்லூருக்கு அருகில் பெரும்பாக்கம் கிராமத்தில் 17 ஏக்கர் நிலம் தமிழக கழக அரசினால் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
30.1.2008 அன்று பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், சென்னையில் 17 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் எழுப்பப்படும் கட்டடத்தில் 76 கோடியே 32 இலட்ச ரூபாய் செலவில் தமிழகத்தில், “செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்”அமைத்திடவும், இந்த ஆய்வு நிறுவனத்தின் தலைவராகத் தமிழக முதலமைச்சர் பொறுப்பு வகிப்பார் எனவும் முடிவெடுக்கப்பட்டது. அந்த முடிவின்படி, செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் தலைவராகப் பொறுப்பேற்பதற்கு என்னிடம் ஒப்புதல் கோரப்பட்டு, அதற்கு ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது. செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்திற்கான நிரந்தரக் கட்டிடங்கள் கட்டுவதற்கு மத்திய அரசு ஒப்புதலும் நிதி ஒதுக்கீடும் செய்திருந்த நிலையில் அதற்கான பணிகள் தொடங்கப்பட்டன.
ஆனால் தற்போது செம்மொழியின் நிலை இந்த அ.தி.மு.க. ஆட்சியிலே என்ன என்பதைப் பற்றி கடந்த வாரம் இதழ் ஒன்றுக்கு பல்கலைக் கழகத் தமிழ்நப் பேராசிரியர் ஒருவர் தெரிவித்திருக்கும் செய்தி என்ன தெரியுமா?
“மிக ஆரவாரத்துடனும், கோலாகலத்துடனும், நம்பிக்கையோடும் தொடங்கப்பட்ட செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் திக்குத் தெரியாத காட்டில் இருக்கிறது. தொடர்ந்து மாநில, மத்திய அரசுகள் அதன் செயல்பாட்டில் அலட்சியம் காட்டி வந்தால், ஒரு கட்டத்தில் நிறுவனத்தை இழுத்து மூட வேண்டிய நிலை கூட வரலாம். செம்மொழி நிறுவனத்தால் கொடுக்கப் படும் விருதுகளும் இரண்டு வருடங்களாக நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கின்றன. மத்திய அரசால் ஒதுக்கப்படும் நிதி குறைந்து கொண்டே வருகிறது. கொடுக்கப்படும் நிதியும் செலவழிக்கப்படாமல் திருப்பி ஒப்படைக்கப்படுகிறது. நிறுவனத்தை நடத்தும் ஆட்சி மன்றக் குழு திருத்தி அமைக்கப்படவில்லை. ஆட்சிக் குழு இல்லாததால் கல்விக் குழு மற்றும் நிதிக் குழுக்களும் அமைக்கப்படவில்லை. நிறுவனத்துக்கு முழு நேர இயக்குனர் இல்லை. தலைமை மற்றும் ஆட்சிக் குழு இல்லாததால் நிறுவனத்தின் செயல்பாடுகளின் சுணக்கம்; தேக்கம். புறநகரான பெரும்பாக்கத்தில் ஒதுக்கப்பட்ட நிலத்தில் செம்மொழி நிறுவனக் கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், பல ஆய்வுப் பணிகள் பாதிக்கப்பட்டுக் கிடக்கின்றன. 120 ஊழியர்கள் பணியாற்றிய இந் நிறுவனத்தில் இப்போது 72 பேர்தான். அவர்களுக்கும் சம்பளப் பிரச்சினைகள்; பணிகளில் உற்சாகம் இல்லை. அரசியல் சகதியில் சிக்கித் தவிக்கிறது செம்மொழி” என்றெல்லாம் அந்தத் தமிழ்ப் பேராசிரியர் தெரிவித்திருக்கிறார்.
செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்திற்காக என்னுடைய சொந்த நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாயை அளித்து, அதிலே கிடைக்கும் வட்டியைக் கொண்டு ஆண்டுக்கொருமுறை பத்து இலட்ச ரூபாய் மதிப்பில் விருது ஒன்றினை வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டு, கழக ஆட்சியில் கோவையில் செம்மொழி மாநாடு நடைபெற்ற போது, திரு. அஸ்கோ பர்போலா அவர்களுக்கு அந்த விருது வழங்கப்பட்டது. அதன் பிறகு இரண்டாண்டுகள் ஆகியும் அந்த விருது இன்று வரை வழங்கப்படவில்லை. அதற்கான முயற்சியிலும் அ.தி.மு.க. அரசோ, முதலமைச்சர் ஜெயலலிதாவோ ஈடுபடவில்லை. அந்த அளவிற்கு செம்மொழியின் மீதும், தமிழின் மீதும் அம்மையாருக்கு அன்பு!
கழக ஆட்சியின் போது அரசின் முழு ஆதரவு இந்த நிறுவனத்துக்கு இருந்ததால், கி.பி. ஆறாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட 41 செவ்வியல் நூல்களின் செம்பதிப்பு போடுவதற்கான பணிகள் தொடங்கியது. இறையனார் களவியல், ஐங்குறுநூறு, மருதத் தினை செம்பதிப்பு தவிர, டிஜிட்டல் செவ்வியல் சுவடிகள் அட்டவணைப் பணிகள் முடிக்கப்பட்டன. மணிப்பூர், பஞ்சாபி மொழியில் திருக்குறள் மொழியாக்கம் செய்யப்பட்டது. பல சங்க இலக்கியங்கள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டன. ஐராவதம் மகாதேவன் எழுதிய “சிந்துவெளிப் பண்பாடும் சங்க இலக்கியமும்” என்ற நூல் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டது. “செம்மொழி வரலாற்றில் சில செப்பேடுகள்” என்ற என்னுடைய நூல் பதிப்பிக்கப்பட்டது. பழந்தமிழ் இலக்கியங்கள், இலக்கணம், கல்வெட்டு, நாணயம் தொடர்பான குறுந்தகடுகள், காட்சிப் படங்கள் என்ற நவீனத் தகவல் தொடர்புத் தளத்துக்கு தமிழ் எடுத்துச் செல்லப்பட்டது. அகராதியில் இடம் பெறாத பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட சொற்கள் ஆவணப்படுத்தப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வாளர்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டது.
செம்மொழித் தமிழ் விருதுகளுக்கு 23 தமிழறிஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, குடியரசுத் தலைவர் விருதுகளை வழங்கினார். 300க்கும் மேற்பட்ட ஆய்வுக் கூட்டங்கள், கருத்தரங்குகள் நடத்தப்பட்டன.
40 ஆயிரம் நூல்கள், ஓலைச் சுவடிகள், குறுந்தகடுகள் கொண்ட நூலகம் உருவாக்கப்பட்டது. ஆனால் இவ்வளவும் தி.மு. கழகம் ஆட்சிப் பொறுப்பிலே இருந்தபோதுதான்! 2011இல் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்தும் நின்றுபோயின. ஆட்சி மன்றக் குழுவுக்கு முதலமைச்சர்தான் தலைவர் என்பதால், பல விஷயங்களுக்கு அவரை அணுக முயன்ற முயற்சிகளே தோற்றுப்போயின. அவ்வளவு அரும்பாடுபட்டு தமிழைச் செம்மொழியாக்கவும், செம்மொழி ஆய்வு நிறுவனம் தமிழகத்தின் தலைநகரத்திலே அமையவும், அதன் சார்பில் பல்வேறு பணிகள் தமிழ் மொழிக்காக நடைபெறவும் பாடுபட்டவன் என்ற முறையில், இன்று அதன் கதியை நினைத்துக் கண்ணீர் சிந்தாமல் இருக்க முடியவில்லை.
சென்னை நகரின் இதயம் போன்ற இடத்திலே தனியார் அனுபவித்து வந்த அரசு நிலத்தைக்கைப்பற்றி, செம்மொழியின் பெயரால் கழக ஆட்சியில் “செம்மொழிப் பூங்கா” ஒன்றினைஏற்படுத்தினோம். அதன் நிலை என்ன என்பதை தயவுசெய்து அங்கே ஒருமுறை சென்று பாருங்கள்!
தமிழ்நாட்டு மக்கள் இவ்வளவையும் பார்த்துக் கொண்டு அமைதியாகத்தான் இருக்கிறார்கள். தமிழைச் செம்மொழியாக அறிவிக்கவும், சேது சமுத்திரம் திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வரவும், மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டம் போன்ற அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பல திட்டங்களைச் செயற்படுத்தவும், தலைமைச் செயலகத்திற்காகவும் - சட்டப்பேரவை நடைபெறவும் ஓமந்தூரார் வளாகத்தில் அழகான கட்டிடத்தைக் கட்டக் காரணமாக இருந்த என்னையே ஆட்சிப் பொறுப்பிலிருந்து அகற்றிய தமிடிநநாட்டு மக்கள், இந்தத் திட்டங்களுக்கெல்லாம் மூடு விழா நடத்திய இன்றைய ஆட்சியாளர்களுக்கு விடை அளிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக