திங்கள், 12 ஆகஸ்ட், 2013

விஜய் அதிர்ச்சியில் ! கேளிக்கை வரி விலக்கை நம்பிய சினிமா உலகம் படிக்கிறது அம்மாவிடம் பாடம்

நடிகர் விஜயின், "தலைவா' படத்தினால், தயாரிப்பாளருடன், சென்சார் போர்டு அதிகாரிகளுக்கும் சிக்கல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இந்த படத்திற்கு, "யு' சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள், குழப்பத்தில் உள்ளனர். அதே நேரத்தில், நடிகர் விஜய் இன்று, முதல்வரை சந்திக்க ஏற்பாடு நடப்பதாகவும், தகவல் வெளியாகி உள்ளது.நடிகர் விஜயின், "தலைவா' படம், திட்டமிட்டபடி, கடந்த, 9ம் தேதி வெளியாகவில்லை. சென்னையில் இப்படத்தை வெளியிட இருந்த தியேட்டர்களுக்கு, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், பாதுகாப்பு கருதி, படம் வெளியிடப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. "படத்திற்கு, "யு' சான்றிதழ் கிடைத்திருக்கிறது; நிச்சயம் கேளிக்கை வரி விலக்கு கிடைக்கும்' என, படத்தின் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் கூறினார்.விலை பேசி வாங்கியுள்ள நிலையில், கேளிக்கை வரியும் செலுத்த வேண்டும் என்றால், கூடுதல் சுமை ஏற்படும். எனவே, "கேளிக்கை வரி விலக்கு கிடைத்த பிறகு, படத்தை வெளியிடலாம்' என, தியேட்டர் உரிமையாளர்கள் கூறினர். இதனால், சென்னை உட்பட, தமிழகம் முழுவதும் படம் வெளியிடப்படவில்லை.எப்படியாவது படத்திற்கு கேளிக்கை வரி விலக்கு பெற்று விடவேண்டும் என, நடிகர் விஜய்யும், இயக்குனர் விஜய்யும், முதல்வரை சந்திக்க கொடநாடு சென்றனர். ஆனால், அவரை சந்திக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.


சமூகத்தை பாதிக்கும்:

இந்நிலையில், கேளிக்கை வரி விலக்கு பரிந்துரை குழுவினருக்கு, கடந்த, 8ம் தேதி மாலை, "தலைவா' படம் போட்டு காட்டப்பட்டது. ஆனால் முடிவு அறிவிக்கப்படவில்லை. வியாபார ரீதியான பேச்சு வார்த்தை முடியாததால், படம் வெளியாவது எப்போது, என்ற சந்தேகம் எழுந்தது.

இந்த சூழ்நிலையில், கேளிக்கை வரி விலக்கு பரிந்துரை குழுவில் இருந்தவர்கள் அளித்த பரிந்துரையில் கூறியிருப்பதாவது:இப்படத்தின் தலைப்பு தமிழில் இருந்தாலும், "யு' சான்றிதழ் பெற்றிருந்தாலும், தமிழ் மொழி பண்பாட்டு வளர்ச்சிக்கு ஏற்ற படமாக அமையவில்லை. சமுதாயத்தை திசை திருப்பும் வண்ணம், சட்டத்தை கையில் எடுக்கும் கதாநாயகனின் செயல், சமூகத்தை பாதிக்கும் வகையில் உள்ளது.ஆங்கிலம், இந்தி வார்த்தைகள் அதிகம் உள்ளன. இளைஞர்களை பாதிக்கும் வகையில், வன்முறை காட்சிகள் அதிகம் உள்ளன. இப்படம் வரி விலக்கு அளிக்க தகுதியானது அல்ல.இவ்வாறு, பரிந்துரை குழுவினர் தெரிவித்து இருந்தனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும், "தலைவா' படத்திற்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்க மறுத்துவிட்டனர்.

அதிகாரிகளுக்கு சிக்கல்:

கேளிக்கை வரி விலக்கு பரிந்துரை குழுவின் அறிக்கை குறித்த தகவல் வெளியில் கசிந்துள்ளதால், "இப்படிப்பட்ட படத்திற்கு, எப்படி, "யு' சான்றிதழ் வழங்கப்பட்டது; பின்னணியில் என்ன நடந்தது?' என, டில்லியில் உள்ள சென்சார் போர்டு தலைமை அலுவலகத்திற்கு, புகார் அனுப்பப்பட்டு உள்ளது.பிரச்னை குறித்து, டில்லியில் உள்ள சென்சார் போர்டு தலைமை நடவடிக்கை எடுத்தால் பிரச்னையாகி விடுமோ என, தமிழக சென்சார் போர்டு அதிகாரிகள் கலக்கமடைந்து உள்ளனர் எனவும் கூறப்படுகிறது.

தயக்கம்:

படத்திற்கு கேளிக்கை வரி விலக்கு கிடைக்காது என்பதால், தியேட்டர் உரிமையாளர்களும், வினியோகஸ்தர்களும் படத்தை வெளியிட தயங்குகின்றனர்."தலைவா' படத்திற்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி, திடீர் வக்காலத்து வாங்கியதாலும், சேலத்தில் படத்தின் திருட்டு வி.சி.டி., வெளியானதாலும், அண்டை மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் படம் வெளியாகி அது குறித்து, இணையதளத்தில் வந்துள்ள விமர்சனங்களாலும், பட வியாபாரம் பாதிக்கப்பட்டுவிடும் என, நடிகர் விஜய் அதிர்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.

முதல்வரை சந்திப்பாரா?

ஒன்றன்பின் ஒன்றாக சிக்கல்கள் அணிவகுப்பதால், பிரச்னைக்கு முடிவு காண, தயாரிப்பாளர் மற்றும் நடிகர் விஜய் தரப்பினர் முயன்று வருகின்றனர். கொடநாட்டில் இருந்து, இன்று சென்னை வரும் முதல்வரை சந்திக்க, ஏற்பாடு நடக்கிறது என்று கூறப்படுகிறது.

முதல்வர் தலையிடுவார்: நடிகர் விஜய் நம்பிக்கை:

இது குறித்து நடிகர் விஜய் பேசியதாவது: முதல்வர் ஜெயலலிதா, தமிழகத்தில் சிறப்பான ஆட்சி ஆட்சி நடத்தி வருகிறார். என்.எல்.சி., பிரச்னை, காவிரி நீர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு நல்ல முறையில் தீர்வு கண்டுள்ளார். அம்மா உணவகம், ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி, இப்படி எத்தனையோ நல்ல திட்டங்களை திறம்பட செயல்படுத்தி வருகிறார்.எல்லோருக்கும் நல்லது செய்யும் நமது முதல்வர், "தலைவா' திரைப்படம் வெளியாவதில் உள்ள பிரச்சினையிலும் தலையிட்டு, விரைவில் தமிழகமெங்கும் திரைப்படம் வெளிவர நடவடிக்கை எடுப்பார். அதுவரை, என்னை நேசிக்கும் ரசிகர்கள் பொறுமையோடு காத்திருக்குமாறு கேட்டுகொள்கிறேன்.இவ்வாறு நடிகர் விஜய் கூறினார்.

- நமது நிருபர் - dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக