புதன், 7 ஆகஸ்ட், 2013

சமாஜ்வாதி எம்.பி.,யை அடிக்க பாய்ந்த மணிசங்கர் அய்யர்

நீ ஒரு பாகிஸ்தான் ஏஜென்ட்,'' என, சமாஜ்வாதி எம்.பி., நரேஷ் அகர்வால் விமர்சனம் செய்ததால், ஆவேசம் அடைந்த, காங்கிரஸ் எம்.பி., மணிசங்கர் அய்யர், கைகளை முறுக்கியபடி, அவரை நோக்கி பாய்ந்தார். இதனால், ராஜ்யசபாவில், கைகலப்பு ஏற்படும் சூழ்நிலை உருவானது. சக எம்.பி.,க்கள் தலையிட்டு, விலக்கி விட்டதால், நிகழவிருந்த கைகலப்பு தவிர்க்கப்பட்டது.
கடும் அமளி:ராஜ்யசபா நேற்று காலை கூடியதும், ஜம்மு - காஷ்மீரில், ராணுவ வீரர்கள் ஐந்து பேர், பாக்., ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், பெரிய அளவில் வெடித்தது. "இந்தப் பிரச்னை குறித்து, உடனே விவாதம் நடத்த வேண்டும்' என, பா.ஜ., உட்பட, எதிர்க்கட்சிகள் பலவும் கோரிக்கை விடுத்தன; அத்துடன், அமளியிலும் ஈடுபட்டன. இந்த அமளிக்கு இடையே, பா.ஜ.,வைச் சேர்ந்த, ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜெட்லி பேசியதாவது: ஐந்து ராணுவ வீரர்களை, இந்தியா பறிகொடுத்திருக்கிறது.
இதை, சாதாரண உயிரிழப்பு என, எடுத்துக் கொள்ள முடியாது. ராணுவ வீரர்கள், சுட்டுக் கொல்லப்பட்ட விஷயத்தை, மத்திய அரசு தீவிரமாக கவனத்தில் கொள்ள வேண்டும். தொடர்ச்சியாக ஊடுருவல் சம்பவங்களையும், இதுபோன்ற உயிர்பலி சம்பவங்களையும், பாகிஸ்தான் நடத்தி வருகிறது. ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து, பார்லிமென்டில், முழு அளவிலான விவாதம் நடத்தப்பட வேண்டும். இவ்வாறு அருண்ஜெட்லி பேசினார். ஜெட்லியின் இந்தக் கோரிக்கைக்கு, அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர். அப்போது, பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர் ராஜிவ் சுக்லா,""எல்லையில் நடந்த சம்பவம் குறித்து, முழுமையான தகவல்கள் பெறப்பட்டு வருகின்றன. இதுகுறித்து, ராணுவ அமைச்சர், ஏ.கே.அந்தோணி, சபையில் விளக்கம் அளித்து, அறிக்கை சமர்பிப்பார்,'' என்றார்.

இதை ஏற்க மறுத்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூறியதாவது: நடந்துள்ள சம்பவத்தை, ராணுவம் மட்டுமே தொடர்புடையதாகப் பார்க்கக் கூடாது; வெளியுறவு கொள்கையும், இவ்விஷயத்தில் உள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை, பாகிஸ்தான் மீறியுள்ளது. எனவே, இதற்கு பொறுப்புள்ள பதிலை, பிரதமர்தான் அளிக்க முடியும். ராணுவ அமைச்சர் விளக்கம் அளிப்பதை காட்டிலும், பிரதமர் மன்மோகன் சிங், பதில் அளிக்க முன்வர வேண்டும். இவ்வாறு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூறினர்.

கேள்வி நேரம் ரத்து:

இதையடுத்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள், ஆளும் கட்சி உறுப்பினர்கள் இடையே கடும் வாக்குவாதம் நிகழ்ந்தது. அதே நேரத்தில், மற்றொருபுறம், தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆந்திர மாநில, எம்.பி.,க்கள் இருவர், சபையின் மையப்பகுதிக்கு சென்று, கோஷம் போட்டபடி இருந்தனர். இதனால், சபை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு, வேறு வழியின்றி, கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டது. மீண்டும் சபை கூடி, பூஜ்ஜிய நேரம் ஆரம்பமான போதும், ராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தை, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தீவிரமாக எழுப்பினர். ஒரு கட்டத்தில், முலாயம் சிங்கின், சமாஜ்வாதி கட்சி எம்.பி., நரேஷ் அகர்வால், தன்னுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த, காங்கிரஸ் எம்.பி., மணிசங்கர் அய்யரைப் பார்த்து, ""நீ ஒரு பாகிஸ்தான் ஏஜென்ட்,'' என, விமர்சித்தார். இதை, சற்றும் எதிர்பாராத மணிசங்கர் அய்யர், முகம் சிவந்தார். கைகளை முறுக்கியபடி, ""என்னைப் பார்த்து இப்படி சொல்ல, உனக்கு என்ன தைரியம்,'' என, நரேஷ் அகர்வாலை நோக்கி வேகமாக சென்றார். இதனால், கைகலப்பு உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டது. உடன், மற்ற எம்.பி.,க்கள் தலையிட்டு, இருவரையும் பிரித்து விட்டனர். இதன் மூலம், சபையில் நடக்கவிருந்த விரும்பத் தகாத சம்பவம், தவிர்க்கப்பட்டது. இந்த திடீர் களேபரத்தால், சபையில், அதிர்ச்சியும், பரபரப்பும் உருவானது. உடன், சபை நடவடிக்கைகளை, சபை தலைவர், ஹமீது அன்சாரி ஒத்திவைத்தார். உணவு இடைவேளைக்கு பிறகு, சபை அலுவல்கள் தொடர்ந்து நடைபெற்றன. dinamalar,com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக