வியாழன், 29 ஆகஸ்ட், 2013

பெண்களை கடவுளாக போற்றும் பின்னணியில் பெண் அடிமைத்தனம் ஒழிந்திருக்கிறது

மிகேலா கிராஸ்நீங்கள் ஒரு போதும் கேட்க விரும்பாத பாரதக் கதை !
நான் ஒரு பயணியின் சொர்க்கத்தில், ஆனால் ஒரு பெண்ணின் நரகத்தில் வாழ்ந்திருக்கிறேன். நான் பின் தொடரப்பட்டேன், தடவப்பட்டேன், சுய இன்பத்துக்கான பாலியல் பொருளாக பயன்படுத்தப்பட்டேன்.
சிகாகோ பல்கலைக் கழகத்தின் தெற்கு ஆசிய ஆய்வுத் துறையில் படிக்கும் மிகேலா கிராஸ் என்ற அமெரிக்க மாணவி சென்ற ஆண்டு தனது படிப்பின் ஒரு பகுதியாக இந்தியா வந்த போது ஏற்பட்ட அனுபவங்களை குறித்து எழுதியிருக்கிறார்.

மிகேலா கிராஸ்
பெண்கள் அனைவரையும் தாயாக, நதியாக, தாய் மண்ணாக பார்க்கும் பாரத கலாச்சாரத்திற்கு ஈடு இணையில்லைஎன்று சங்க பரிவாரங்களால் விதந்தோதப்படுகிறது. நீலி வழிபாட்டிற்கும் தேசபக்திக்கும் உள்ளொளி இணைப்புள்ளதாக இந்து ஞான மரபின் உபன்னியாசர்கள் கதை விடுகிறார்கள்.  பொய்யான இந்த போற்றுதல்கள் மற்றும் வருணணைகளின் பின்னே பெண்ணடிமைத்தனத்தின் ஆதாயம் ஒளிந்து கொண்டிருக்கிறது
என்பதை எவரும் சுலபமாக கண்டுபிடிக்க முடியும்.
இப்படி நம் நாட்டின் பார்ப்பனிய இந்து மதத்தின் பிற்போக்கு கலாச்சாரமும், பின்னர் வந்த மேற்கத்திய நுகர்வுக் கலாச்சாரம் வளர்த்து விட்டிருக்கும் பாலியல் வக்கிரங்களும் இந்தியச் சூழலை பெண்களுக்கு நரகமாக மாற்றியிருப்பதை மிகேலா கிராஸ் அதிர்ச்சியுடன் தெரிவிக்கிறார். ஆரம்பத்தில் அவரும் கூட இந்தியாவை மாபெரும் ‘ஞானிகளின்’ நாடு என்று அசட்டுத்தனமாக நினைத்திருப்பாரோ தெரியவில்லை.
இந்திய பெண்கள் பிறந்ததிலிருந்தே இந்த சூழலில் வாழ்வதால் அதை சமாளித்து வாழப் பழகிக் கொள்வதோடு, மனதளவிலான பாலியல் துன்புறுத்தல்களை பெரும்பாலும் புறக்கணித்தும் போகிறார்கள். வெளியிலிருந்து வந்த மிகேலா கிராஸ் இந்த நச்சுச் சூழலால் பாதிக்கப்பட்டு மனவியல் சிகிச்சை தேவைப்படும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். அதே நேரம் பாரதமாதாவின் கருணையற்ற முகத்தை உலகு அறியவேண்டும் என்று அதை அனைவருக்கும் அறியத் தருகிறார். எனினும் இதை ஒரு காலனியாதிக்க அடிமைத்தனத்தின் சதி என்று சங்க பரிவார அம்பிகள் புறக்கணிக்கலாம். அதனால் உண்மை சுடாமல் போய்விடுமா என்ன? இதோ ‘பெருமை’ வாய்ந்த இந்து ஞான மரபின் இழை அறுபடாத பாரதத்தை தரிசியுங்கள் !
- வினவு
————–
ந்தியாவிற்குப் போன எனது அனுபவத்தைக் குறித்து யாராவது கேட்கும் போது எப்போதுமே குழப்பத்துக்குள் சிக்கிக் கொள்கிறேன். கடந்த சில மாதங்களாக என் வாழ்க்கையை குதறிக் கொண்டிருக்கும் ஒரு முரண்பாட்டை சுருக்கமாக ஒரு வரியில் எப்படி விளக்குவது?
“இந்தியா அற்புதமானது,” என்று ஆரம்பித்து, “ஆனால் பெண்களுக்கு மிகவும் அபாயகரமானது” என்று முடிக்கிறேன். இது குறித்து மேலும் கேள்விகள் வருமோ என்று என் மனதின் ஒரு பக்கம் நடுங்குகிறது, இன்னொரு பக்கம் மேலும் கேள்விகள் வர வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. உண்மையின் சக்தியில் நம்பிக்கை வைத்து நான் சொல்ல விரும்புவற்றுக்கும், கேட்பவர்கள் எவ்வளவு தாங்குவார்கள் என்பதை முடிவு செய்வதற்கும் இடையே நான் திணறுகிறேன்.
ஒரு பாதி இனிய கனவாகவும், மறு பாதி கொடூர சொப்பனமாகவும் இருந்த எனது மூன்று மாத இந்திய பயணத்தை எப்படி விவரிப்பது. எந்தப் பாதியை நான் சொல்ல வேண்டும்?
மிகேலா கிராஸ்
பூனே கணேசா திருவிழாவிற்கு பிறகு எடுக்கப்பட்ட புகைப்படம்.
இந்தியாவிற்கு போய்ச் சேர்ந்த முதல் நாள் பூனேவின் விநாயகர் திருவிழாவில் நாங்கள் நடனம் ஆடியதை சொல்லி விட்டு அத்தோடு விட முடியுமா? அல்லது அமெரிக்க பெண்கள் ஆட ஆரம்பித்ததும் திருவிழாவே நின்று போய் விட, ஒரு பெரிய ஆண்கள் கூட்டமே எங்கள் ஒவ்வொரு அசைவையும் படம் பிடித்துக் கொண்டிருப்பதை உணர்ந்தோம் என்பதையும் சொல்ல வேண்டும் அல்லவா?
ஒரு சில டாலர்கள் விலையிலான அழகான புடவைகளை பேரம் பேசி வாங்குவதற்கான  கடைகளைப் பற்றி குறிப்பிடும் அதே நேரம், எங்களை வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றிருந்த ஆண்கள், எங்களை இடித்துக் கொண்டு, மார்பையும் அடி வயிற்றையும் தொட்டும் தாக்கியும் சென்றதை சொல்லாமல் விட முடியுமா?
என்னுடைய அழகிய இந்திய செருப்புகளை புகழும் ஒருவரிடம், அவற்றை நான் வாங்கிய பிறகு 45 நிமிடங்களுக்கு என்னைப் பின் தொடர்ந்து வந்த மனிதனைப் பற்றிச் சொல்லி பெரும் கூட்டத்தின் மத்தியில் அவனை முகத்துக்கு நேராக திட்டி துரத்திய பிறகுதான் விலகினான் என்பதையும் பேச வேண்டும் அல்லவா?
கோவாவில் நாங்கள் தங்கியிருந்த ஹோட்டல் குறித்த எனது ஆழமான நினைவு, என் அறை தோழியை பாலியல் வல்லுறவு செய்ய முயற்சித்த ஹோட்டல் ஊழியர், அறை தொலைபேசியில் மீண்டும் மீண்டும் மூச்சிரைக்க அழைத்துக் கொண்டிருந்த போது அவன் கதவை உடைத்துக் கொண்டு அறைக்குள் வந்து விடக் கூடாது என்ற பயத்தில் கதவை தாழிட்டு விட்டு, கைகளில் ஒரு கத்தரிக்கோலை இறுகப் பற்றிக் கொண்டு, பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்ததாக இருக்கும் போது அந்த ஹோட்டலின் அழகைப் பற்றி நான் எப்படி விவரிக்க முடியும்?
மிகேரா கிராஸ்
இவற்றை எல்லாம் ஒரு கிறிஸ்துமஸ் விருந்தில் எப்படி பேச முடியும்? ஆனால், எனது நண்பர்கள், உறவினர்கள், கிறிஸ்துமஸ் மரம் இவை அனைத்தையும் விட பேருந்தில் என்னைப் பார்த்து சுய இன்பம் கண்ட ஒரு மனிதனின் பிம்பம் வலுவாக மனதை ஆக்கிரமித்திருக்கும் போது நான் வேறு எதைப் பற்றி பேச முடியும்? தங்கள் கேள்விகளுக்கான உண்மையான பதில்களை தங்களால் தாங்கிக் கொள்ள முடியாது என்று தெரியாமல் என்னிடம் கேள்வி கேட்கிறார்கள் அந்த நல்ல மனிதர்கள்.
ஒரு ஆண்டுக்கு முன்பு நான் இந்தியாவுக்கு போன போது அந்தச் சூழலில் வாழ நான் தயார் செய்து கொண்டதாகத்தான் நினைத்தேன். நான் இதற்கு முன்பே இந்தியாவுக்கு போயிருக்கிறேன்; தெற்கு ஆசிய துறையில் படிக்கிறேன்; ஓரளவு இந்தி பேசுவேன். ஒரு வெள்ளை இனப் பெண்ணான நான் பாலியல் வெறி பிடித்தவளாக பார்க்கப்படுவேன் என்றும், பாலியல் ரீதியாக வென்றெடுக்கப்பட வேண்டிய பொருளாக கருதப்படுவேன் என்றும் நான் அறிந்திருந்தேன். சிகாகோ பல்கலைக் கழகத்தின் அறிவுறுத்தலின் படி, கவனத்தை ஈர்க்காத உடைகள் அணியவும், பொது இடங்களில் அன்னியர்களை பார்த்து புன்னகை செய்யாமலும் இருக்க மனதளவில் தயாராக இருந்தேன். என் செந்நிற கேசமும், வெண்ணிற சருமமும், நீல நிற கண்களும் தூண்டக் கூடிய குறுகுறுப்பை எதிர் கொள்ள என்னை தயாரித்துக் கொண்டிருந்தேன்.
ஆனால், இவ்வளவுக்கும் பிறகும் அந்த சூழலுக்கு நான் தயாராகியிருக்கவில்லை.
அந்தக் கண்களை எதிர் கொள்வதற்கு யாராலும் தயார் படுத்திக் கொள்ள முடியாது. எனது உடலை தமக்கு சொந்தமாக பார்க்கும் கண்கள்; நான் அவர்களது பார்வையை சந்திக்கிறேனா இல்லையா என்பதை பற்றிக் கவலைப் படாமல் என் உடலை சொந்தம் கொண்டாடும் கண்களை எதிர் கொள்வதற்கு எப்படி தயாரித்துக் கொள்வது? பழக் கடைக்கோ, தையல் கடைக்கோ போகும் வழியில் குத்திக் கிழித்த பார்வைகள் என்னை செதில் செதிலாக செதுக்கி சிதைத்தன. என்னுடைய நடை, உடைகள் பாலியல் சைகைகளாக புரிந்து கொள்ளப்படலாம் என்பதை உணர்ந்து எச்சரிக்கையாக இருக்க தயாரித்திருந்தேன். ஆனால் அந்த நாட்டில் பாலியல் சைகைகள் என்ற விஷயமே இல்லை,  பெண்களின் உடல்கள் அனைத்துமே ஆண்களால் சொந்தமாக்கிக் கொள்ளப்பட வேண்டியவை அல்லது ஆண்களால் மறைத்து பாதுகாக்கப்பட வேண்டியவை என்பதை ஏற்றுக் கொள்ள நான் தயாராகியிருக்கவில்லை.
நான் என் உடலை போர்த்திக் கொண்டேன், ஆனால் மறைத்துக் கொள்ளவில்லை. எனவே, ஒவ்வொரு கண்ணாக, ஒவ்வொரு படமாக நான் சொந்தமாக்கிக் கொள்ளப்பட்டேன். நான் நடக்கும், திட்டும், துரத்தும் எத்தனை புகைப்படங்கள் இந்தியாவிலும் இணையத்திலும்  உலா வருகின்றன என்று யாருக்குத் தெரியும். என்னுடைய, என் தோழிகளுடைய உருவத்தை எத்தனை அன்னியர்கள் பாலியல் பிம்பங்களாக பயன்படுத்தினார்கள் என்று யாருக்குத் தெரியும்? என்னால் முடிந்த அளவுக்கு நான் பலவற்றை அழித்தேன், ஆனால் நான் அழித்தது அந்த பெருங்கடலில் ஒரு துளி மட்டும்தான். அவர்கள் எடுத்துக் கொண்ட ஒவ்வொன்றையும் திரும்பி பெறுவதற்கு  வாய்ப்பே இல்லை.
மிகேலா கிராஸ்மூன்று மாதங்களாக நான் ஒரு பயணியின் சொர்க்கத்தில், ஆனால் ஒரு பெண்ணின் நரகத்தில் வாழ்ந்திருக்கிறேன். நான் பின் தொடரப்பட்டேன், தடவப்பட்டேன், சுய இன்பத்துக்கான பாலியல் பொருளாக பயன்படுத்தப்பட்டேன். இருந்தும் நான் நினைத்துப் பார்த்திராத பல நல்ல அனுபவங்களை பெற்றேன். என்னுடைய அந்த கெட்ட கனவு வீடு திரும்பும் போது விமான நிலைய ஓடுகளத்தில் முடிவுக்கு வரும் என்று நம்பினேன். ஆனால் உண்மையில் அங்குதான் வதை ஆரம்பமானது.
ஊருக்குத் திரும்பிய பிறகு, குங்குமத்தின் ரத்தச் சிவப்புக்கு பழகிய கண்களுக்கு கிறிஸ்துமசின் சிவப்பு நிறம் வெளிறியிருந்தது. உணவு காரசாரமற்று சப் என்று இருந்தது. எனது வலியும், மற்ற அனைத்து சத்தங்களையும் மூழ்கடிக்கும்படி ஓலமிட்டுக் கொண்டு என் ரத்தத்தில் ஓடிக் கொண்டிருந்த கோபமும் நண்பர்கள், குடும்பத்தினர், கல்லூரி வகுப்புகள், மருத்துவர் ஆலோசனைகள் எதையும் விட நிஜமாக இருந்தன. சுதந்திரமான வாழ்க்கைக்கு திரும்பி விட்டது குறித்த உற்சாக உணர்வை தாண்டிய சில மாதங்களுக்குப் பிறகு, என்னைத் துரத்தும் நினைவுகளிலிருந்து நகர்ந்து விட்டதாக நினைத்த போது ஏப்ரல் முட்டாள்கள் தினத்தன்று காலையில் செத்து விடும் ஆசையோடு கண் விழித்தேன்.
கல்லூரியின் மனோதத்துவ ஆலோசகர்கள் எனக்கு “ஆளுமை முறைகேடு” ஏற்பட்டிருப்பதாக முடிவு செய்து பரிந்துரைத்த மாத்திரைகளை நான் சாப்பிட மறுத்தேன். பொது இடத்தில் நடந்த ஒரு கலாட்டாவுக்குப் பிறகு என் விருப்பத்துக்கு எதிராக ஒரு மனநோய் இல்லத்தில் பிடித்து அடைக்கப்பட்டேன். கல்லூரியிலிருந்து “மன நோய்க்கான விடுமுறை” எடுத்துக் கொண்டு போய் விட வேண்டும் என்ற நிபந்தனையோடு விடுவிக்கப்பட்டு சில நாட்கள் அம்மாவுடன் போய் வாழ்ந்தேன். என் சித்தம் கலங்கி விட்டது என்று நினைத்தேன்.
மிகேலா கிராஸ்இது எதையும் நான் இந்திய அனுபவங்களுடன் தொடர்புபடுத்தவில்லை – அந்த அனுபவங்களிலிருந்து நான் நகர்ந்து விட்டதாக நினைத்தேன். ஆனால் ஒரு மனவியல் நிபுணர் எனக்கு பிடிஎஸ்டி (கடும் பாதிப்புக்குப் பிறகான மன அழுத்த முறைகேடு) இருப்பதாக கண்டறிந்த போதுதான் நான் அந்த அனுபவங்களிலிருந்து சிறிதளவு கூட விடுபட்டிருக்கவில்லை என்பதை உணர்ந்தேன். நான் அந்த காலகட்டத்தில் உறைந்து போயிருக்கிறேன்; விழுந்து விட்டிருக்கிறேன்; சிதறி விட்டிருக்கிறேன்.
ஆனால், நான் மட்டும் தனி இல்லை. பிடிஎஸ்டி வந்து மனநோய் இல்லத்தில் அடைக்கப்பட்ட, செத்துப் போக நினைத்த நபர் நான் மட்டும் இல்லை. சிகாகோ பல்கலைக் கழகத்திலிருந்து என்னுடன் பயணம் செய்தவர்களில் மனநோய்க்கான விடுப்பு எடுத்துக் கொண்டு, வகுப்புகளை விட்டுச் சென்ற பெண் நான் மட்டும் இல்லை.
எனது வலியை புரிந்து கொண்டது, அதை போக்க உதவா விட்டாலும் ஏற்றுக் கொள்ள உதவியது. “மன அழுத்த முறைகேடு” என்பது பொருத்தமற்ற சொல்லாக எனக்குத் தோன்றுகிறது. ஒரு முறைகேடு என்றால் அதை சரி செய்ய முடிய வேண்டும். ஆனால், நிதர்சனத்தை நேருக்கு நேர் சந்தித்ததற்கான, ஒருவரது மனிதம் பறிக்கப்படுவதை மூன்று மாதங்களாக உணர்ந்ததற்கு என்ன தீர்வு? இந்தியாவில் நான் பெற்ற அனுபவங்களுக்கும் எனக்குக் கிடைத்த ஏமாற்றங்களுக்கும் கடவுளுக்கு நன்றி சொல்கிறேன். உண்மை ஒரு பரிசு, ஒரு சுமை, ஒரு பொறுப்பு. அதை நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
இந்தியாவைப் பற்றி என்னிடம் கேட்ட நீங்கள் கேட்க விரும்பாத கதை இது. ஆனால், உங்களுக்குத் தேவையானது இந்தக் கதைதான்.
தமிழாக்கம் : அப்துல்  vinavu.com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக