திங்கள், 5 ஆகஸ்ட், 2013

காஷ்மீர் எல்லையில் இந்திய ரோந்தை தடுத்தது சீனா ! புதிய பிரச்னை?

காஷ்மீரின் லடாக் பகுதியில் இந்திய ராணுவத்தினரின் ரோந்துப் பணியை சீன ராணுவம் தடுத்து வருகிறது. இதனால் அப்பகுதியில் புதிய பிரச்னை உருவாகி பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்திய , சீன எல்லையில் வடக்கு லடாக் பகுதியில் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே உள்ள வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த 2 சோதனைச் சாவடிகள் இடையே இந்திய ராணுவத்தினர் ''திரங்கா'' என்ற பெயரில் ரோந்துப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த ரோந்துப் பணியில் இந்திய வீரர்கள் ஈடுபட்டனர். ஆனால், சீனா அந்த வழியில் ஒரு கண்காணிப்பு கோபுரத்தை அமைத்துள்ளது. இந்திய ராணுவத்தினர் ரோந்து வரும்போது அவர்களை சீன ராணுவத்தினர் இடைமறித்து, அது தங்களுடைய பகுதி என்று கூறி திருப்பி அனுப்பி விடுகின்றனர். கடந்த ஏப்ரல் முதல் இதுவரை 21 முறை ரோந்து சென்றதில் 2 முறை மட்டுமே ரோந்து பணி நிறைவடைந்துள்ளது.

இந்தியா எதிர்ப்பு: இந்தியா , சீனா இடையே எல்லை பிரச்னை தொடர்பாக அவ்வப்போது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக, கடந்த ஜூலை 27ம் தேதி இரு நாடுகளின் எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் சந்தித்து பேசினர். சீனா தரப்புக்கு கலோனல் வாங் ஜுன் ஜியான் தலைமை வகித்தார். எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே டெம்சோக் , புக்சி பகுதியில் கண்காணிப்பு கோபுரத்தை சீனா கட்டியுள்ளது. இதற்கு இந்திய ராணுவ அதிகாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கண்காணிப்பு கோபுரம் கட்டுவது கடந்த 1993ம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே செய்து கொண்டு ஒப்பந்தத்துக்கு முரணானது என்று இந்திய தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

அந்த ஒப்பந்த்தின்படி, எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இரு நாடுகளும் தங்களது தரப்புகளில் எந்தவித கட்டுமானப் பணிகளும் மேற்கொள்ளக் கூடாது என்று ஒப்புக் கொள்ளப்பட்டது. ஆனால், தங்களது பகுதி மக்களுக்கு வானிலை பற்றி தகவல் தெரிவிக்கவே அந்த கோபுரம் கட்டப்பட்டுள்ளது என்று சீனா தெரிவித்தது.

இந்திய தரப்புக்கு தலைமை வகித்த பிரிகேடியர் சஞ்சீவ் ராய் சீன அதிகாரிகளிடம் கூறுகையில், இந்திய எல்லைப் பகுதியில் சீன எல்லை பாதுகாப்பு படையினர் தொடர்ந்து ஊடுருவி வருவதாக குற்றஞ்சாட்டினார். ஜூலை 16, 19 ஆகிய தேதிகளில் சீன ராணுவத்தினர் இந்திய பகுதிக்குள் 1.2 கி.மீ. தூரம் ஊடுருவியுள்ளனர். மேலும் ஜூலை 17ம் தேதி 2.5 கி.மீ தூரமும், ஜூலை 20ம் தேதி 200 மீட்டர் தூரத்திற்குள் நுழைந்து ராணுவ ஒத்திகை நடத்தியுள்ளனர்.

அதேபோல், ஜூலை 25,26ம் தேதி இரவில் 3.5 கி.மீ தொலைவுக்கு ஊடுருவியுள்ளனர் என்று சீனாவின் அத்துமீறல்களை பட்டியலிட்டார். லேக்கிலிருந்து 300 கி.மீ. தொலைவில் உள்ள ஷுமார், டெம்சோக் ஆகிய பகுதிகளில் தான் இந்த ஊடுருவல்கள் பிரதானமாக நடந்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.dinakaran.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக