புதன், 28 ஆகஸ்ட், 2013

குழந்தைகள் வீட்டிலும், பள்ளியிலும் சித்திரவதை

கற்றது தமிழ் திரைப்படத்தின் இயக்குனர் ராம்’ என்று இயக்குனர் ராம் அவர்களை இனி அறிமுகப்படுத்தத் தேவையிராது. தங்க மீன்கள் திரைப்படத்தின் டிரெய்லர் ரிலீஸானதிலிருந்தே ரசிகர்களால் தங்க மீன்கள் ராம் என்று அழைக்கப்படுகிறார். ஆகஸ்டு 30-ஆம் தேதி பல நெருக்கடிகளை நீந்திக் கடந்து ரிலீஸாகவிருக்கிறது தங்க மீன்கள். அப்பா-மகள் உறவுக்கிடையேயுள்ள பாசப்போராட்டத்தை அழுத்தமாக இத்திரைப்படத்தில் பதிவு செய்திருக்கும் இயக்குனர் ராம், நக்கீரன் இணையதளத்திற்கு அளித்த பேட்டியில், அப்பா-மகள் உணர்ச்சிப் போராட்டத்தைத் தவிர தங்க மீன்கள் எந்தெந்த பிரச்சனைகளை நீந்திச் செல்கிறது என்று கூறியுள்ளார்.பேட்டியில் பேசிய ராம் “ தங்க மீன்கள் மற்றுமொரு உண்மையை பதிவு செய்திருக்கிறது. இந்தியா 1992-ல் காட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு, கல்வித்துறையை தனியார் வசம் ஒப்படைக்கவேண்டும் என முடிவு செய்யப்பட்டது.அதனால் இப்போது பன்னி குட்டி போட்டது மாதிரி எங்கு பார்த்தாலும் தனியார் பள்ளிகள் இருக்கின்றன. அத்தனை பள்ளிகளிலும் வேலை செய்ய தகுதியான ஆசிரியர்கள் இல்லை.
அந்த பள்ளிகளில் குழந்தைகளுக்கு போதுமான வசதிகள் இல்லை. ஆனால் கட்டணம் மட்டும் தவறாமல் வசூலிக்கப்படுகின்றது.இதுபோன்று சரியான ஆசிரியர்களும், போதுமான வசதிகளும் இல்லாத பள்ளிக்கூடங்களில் குழந்தைகள் அதிக சித்திரவதைக்கு ஆளாகின்றனர். அதைவிட முக்கியமானது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் அரசு பள்ளிகளில் படிப்பது கௌரவக் குறைவாக எண்ணி அதிக கட்டணத்திற்கு தனியார் பள்ளிகளில் சேர்த்து விடுகின்றனர்.அந்த தனியார் பள்ளிகளோ கட்டணம், வீட்டுப் பாடம், ரேங்க் கார்ட் ஆகியவற்றை கொடுத்து பெற்றோர்களை சித்திரவதை செய்கின்றனர். இதனால் பெற்றோர்கள் குழந்தைகளை படி படி என சித்திரவதை செய்கின்றனர்.

எனவே தங்க மீன்கள் திரைப்படத்தில் குழந்தைகள் வீட்டிலும், பள்ளியிலும் சித்திரவதைப்படுவதையும் பதிவு செய்திருக்கிறோம் என்றும் கூறலாம். இந்த உண்மையை சமூகம் எப்படி ஏற்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்” என்று கூறினார்.

கற்றது தமிழ் திரைப்படம் போல் ஒரு திரைப்படத்திற்கான அங்கீகாரம் தாமதாக கிடைக்காமல், ’தங்க மீன்கள்’ திரைப்படத்தை ரசிகர்கள் தியேட்டரில் பார்த்து ஆதரவளிக்க வேண்டும் என்பதே இயக்குனரின் கோரிக்கை. ஆகஸ்ட் 30-ஆம் தேதி திரைக்கடலில் குதிக்கும் தங்க மீன்கள் ரசிகர்கள் ஆதரவினால் மின்னுகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக