வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

மதவெறியன் வருண்காந்தி மீதான வழக்குகள் ரத்து : முலயம் சிங்கின் முகத்திரை கிழிந்தது !

“இது கை அல்ல. தாமரையின் சக்தி. முசுலிம்களின் தலைகளை வெட்டி எறியும்” என்றும், “இந்துவுக்கு எதிராக எவனாவது கையை உயர்த்தினால், கீதை மீது ஆணையாக அந்தக் கையை வருண் வெட்டுவான்” என்றும் 2009 மக்களவைத் தேர்தலில் உ.பி.யின் பிலிபித் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராகப் போட்டியிட்ட வருண்காந்தி மேடை தோறும் பேசியதை நாடெங்கும் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின. கோடிக்கணக்கான மக்கள் அதனைப் பார்த்தார்கள். அந்தத் தேர்தலில் வருண்காந்தி வெற்றியும் பெற்றார இம்மதவெறிப் பேச்சுக்காக அன்றைய உ.பி. அரசு வருண் காந்தி மீது இரண்டு வழக்குகளைப் பதிவு செய்தது. தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி வருண்காந்தி தாக்கல் செய்த மனுவையும் அலகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உடனே பர்க்கரோ நீதிமன்றத்தில் சரணடையப் போவதாகக் கூறி, மதவெறிக் காலிகளின் படையைத் திரட்டிக் கொண்டு வருண் காந்தி நடத்திய பேரணி, தீவைப்பிலும் கல்வீச்சிலும் முடிந்தது. 25 பேர் படுகாயமடைந்தனர். இந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக மற்றுமொரு வழக்கும் பதிவானது.
நாடறிய இழைக்கப்பட்ட இந்தக் குற்றங்கள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை என்று வருண் காந்தி பிலிபித் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.
சட்டத்தின் ஆட்சியைப் பற்றியும், நீதித்துறையின் சுயேச்சைத் தன்மையைப் பற்றியும் பேசுவோர் இவ்வழக்கின் விசாரணை எப்படி நடைபெற்றது என்பதைத் தெரிந்து கொள்வது அவசியம்.
நீதித்துறை வரலாற்றிலேயே முதன்முறையாக அனைத்து சாட்சியங்களும் ஒரே நாளில் பதிவு செய்யப்பட்டன. சிலரது வாக்குமூலங்களை வருணுக்குச் சாதகமாக அரசு வழக்குரைஞர்களே மாற்றி எழுதினார்கள். நீதிபதி நீதிமன்றத்தில் இல்லாத நிலையிலும் சில சாட்சியங்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன. நீதிபதிகள் இரண்டே நாட்களில் பதினெட்டு சாட்சியங்களை ஆய்வு செய்திருக்கின்றனர். சில சாட்சிகள் மாற்றுக் கருத்துகளைச் சொன்னபோதும் அரசு வழக்குரைஞரோ, நீதிமன்றமோ அவற்றைப் பொருட்படுத்தவேயில்லை.
வருணின் பாதுகாப்புக்குத் தலைமை வகித்த போலீசு அதிகாரி, வருண் பேசியதாகக் கூறப்படும் பேச்சு எதையும் தாம் கேட்கவில்லை என்று கூறினார்.போலீசும் அரசு வழக்குரைஞர்களும் மிரட்டியிருந்ததால், சாட்சிகள் அனைவருமே விசாரணையின்போது பிறழ்சாட்சியம் அளித்தனர். ஒரு வழக்கில் சாட்சிகள் அனைவருமே பிறழ்சாட்சியம் தந்தால் அவ்வழக்கை மறுபடியும் விசாரித்தாக வேண்டும் என நூற்றுக்கணக்கான முன்னுதாரணத் தீர்ப்புகள் இருந்த போதிலும், இவ்வழக்கை மீண்டும் விசாரித்திட நீதிபதி உத்தரவிடவில்லை.
வருண் பேச்சின் ஒலிப்பதிவை ஆவு செய்த அதிகாரி நீதிமன்றம் வந்து சாட்சி சோல்லத் தேவையில்லை என்று வழக்கை நடத்திய அரசுத் தரப்பே கோரியது. வழக்கின் முக்கிய ஆதாரமான குரல்மாதிரியைக் கொடுக்க முடியாது என்று வருண் காந்தி மறுத்தார். அனைத்தையும் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
இந்த வழக்கில் பிறழ் சாட்சியம் அளித்தவர்களை “தெகல்கா” பத்திரிகை பேட்டி எடுத்திருக்கிறது. சாட்சியங்களை மாற்றிச் சொல்லும்படி பிலிபித் போலீசு அதிகாரி அமித் வர்மாவாலும் பிற அதிகாரிகளாலும் தாங்கள் மிரட்டப்பட்டதையும் தங்களுக்கு இலஞ்சம் தரப்பட்டதையும் பெரும்பான்மையான சாட்சிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். இவையனைத்தையும் தெகல்கா ரகசிய கேமிராக்களில் பதிவு செய்திருக்கிறது.
பாரதிய ஜனதா ஆட்சியில் இருந்தால் செய்யக்கூடிய எல்லா விதமான கிரிமினல் வேலைகளையும் செய்து வருண் காந்திக்கு விடுதலை பெற்றுத் தரும் சாதனையைச் செய்திருப்பது முஸ்லிம்களின் காவலனாகத் தன்னைச் சித்தரித்துக் கொள்ளும் சமாஜ்வாதி கட்சியின் அரசுதான். 2012-இல் ஆட்சிக்கு வந்தவுடனேயே, இவ்வழக்கைத் திரும்பப் பெறுவதற்கு சமாஜ்வாதி அரசு முயன்றிருக்கிறது. முஸ்லிம் அமைப்புகள் கடுமையாக எதிர்த்ததால், வழக்கை நடத்துவதாகப் போக்குக் காட்டி ஊத்தி மூடியிருக்கிறது.
மதச்சார்பின்மை சவடாலை வைத்து முஸ்லிம்களை ஏத்து வரும் ஒரு கட்சி, நீதித்துறை, போலீசு, அதிகாரிகள் உள்ளிட்ட அரசமைப்பு முழுவதையும் வருண்காந்தி என்ற ஒரு தரங்கெட்ட பொறுக்கியாலேயே விலை பேச முடியும் போது, கொலைகாரன் மோடி பிரதமர் நாற்காலியை நம்பிக்கையுடன் குறி வைப்பதில் வியப்பென்ன இருக்கிறது?
- அன்பு vinavu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக