வியாழன், 22 ஆகஸ்ட், 2013

இந்திய பாகிஸ்தானிய கலைஞர்கள் மதவெறிக்கு எதிராக நடத்தும் ஓவியகண்காட்சி சூறை

கலை தாக்குதல்கடந்த 16.08.2013 அன்று வெள்ளிக்கிழமை மாலை 4.15 மணிக்கு அகமதாபாத் நகரில் அமைந்துள்ள அம்தவாத் நீ குபா என்ற கலைக் காட்சியகம் மீது விசுவ இந்து பரிஷத்தைச் (விஎச்பி) சேர்ந்த குண்டர்கள் 20 பேர் தாக்குதல் நடத்தினர். அங்கிருந்த சுவர்களில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த 30 ஓவியங்களை கீழே பிடித்து இழுத்து உடைத்ததால் அவை அனைத்தும் சேதமடைந்தன. அவற்றை வரைந்தவர்களில் 11 ஓவியர்கள் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள், ஆறு பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள். ஓவியக் கண்காட்சியின் அமைப்பாளர் ரவீந்திர மராடியா புகாரின் பேரில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் வன்முறையில் ஈடுபட்ட இந்துமத வெறியர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.



பாகிஸ்தான் மற்றும் இந்தியாவை சேர்ந்த ஓவியர்களின் கூட்டு முயற்சியால் கடந்த ஆகஸ்டு 13 முதல் இங்கு நடைபெற்று வரும் இக்கண்காட்சியினை முதலில் இருந்தே குஜராத்தின் இந்து மதவெறி அமைப்புகள் எதிர்த்து வந்தன. குறிப்பாக பஜ்ரங் தள் மற்றும் விஎச்பி வானரங்கள் இணைந்து ஓவிய கண்காட்சியை சீர்குலைக்க முடிவு செய்து, அதனடிப்படையில் இந்த சூறையாடலை நிகழ்த்தியுள்ளனர். சேதமடைந்த ஓவியங்களின் மதிப்பு சுமார் ரூ 10 லட்சம் இருக்கும் எனத் தெரிகிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை (ஆகஸ்டு 20) அதிகாலை 2.30 மணிக்கு விஎச்பியின் நகர இணைச் செயலாளர் ஜுவாலித் மேத்தா உள்ளிட்ட 9 பேரை ஓவிய காட்சியகத்தை சேதப்படுத்திய குற்றத்திற்காக காவல்துறை கைது செய்து, பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தது. அவர்களது கைதை கண்டித்துள்ள விசுவ இந்து பரிஷத்தின் பொதுச் செயலாளர் பிரவீண் தொக்காடியா, ”எல்லைப்புறத்தில் நமது வீர்ர்களை பாகிஸ்தான் கொன்று குவித்துக் கொண்டிருக்கையில் இங்கே நடைபெறும் பாகிஸ்தானிய ஓவியர்களது கண்காட்சியை எதிர்ப்பது குற்றமா? வாக்கு வங்கி அரசியலுக்காக எங்களது தொண்டர்களை கைது செய்துள்ளார்கள்” எனச் சொல்லி, மறைமுகமாக குஜராத் முதல்வர் மோடியை சாடியிருக்கிறார்.
இந்த சாடலை பாஜக-வின் தலைவர் ராஜ்நாத் சிங்கிற்கு ட்விட்டரில் போட்டும் விட்டிருக்கிறார். விஎச்பி யின் செயலாளர் ரஞ்சோத் பர்வத், ”நாங்கள் கைதையெல்லாம் எதிர்க்கவில்லை. இந்துக்களின் பண்டிகையான ரக்ஷா பந்தனை கொண்டாட விடாமல் கைது செய்து விட்டார்களே!” என்று தனது கவலையை வெளியிட்டிருந்தார்.
நாச வேலை
படம் : நன்றி dawn.com
மேலும், நமது வீரர்கள் காசுமீரத்திலும், எல்லைப்புறங்களிலும் பாகிஸ்தானிய படைகளால் சுட்டுக் கொல்லப்படும்போது இதெல்லாம் தேவையா என்றும், பாகிஸ்தானிய ஓவியர்களின் ஓவியங்களை கண்காட்சிக்கு வைக்கவும், விற்பனை செய்யவும் ஏன் அனுமதிக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். பாகிஸ்தானில் ரசிகர்களின் பெருத்த ஆதரவோடு இந்தி திரைப்படமான சென்னை எக்ஸ்பிரஸ் ஓடுவதும், இந்துமத வெறியர்கள் இங்கு பாகிஸ்தானிய ஓவியர்களின் படைப்புகளை நுழைய விடாமல் தடுப்பதும் இந்துமத வெறியர்களின் பாசிச நடத்தைக்கு நல்ல சான்று.
கண்காட்சி நடக்கும் அம்தவாத் நீ குபா கலையரங்கு, புகழ்பெற்ற ஓவியர் எம்.எஃப். உசேன் மற்றும் கட்டிடக்கலை நிபுணர் பிவி தோஷி ஆகியோரின் கூட்டு முயற்சியால் உருவானது. உசேனுக்கு நிகராக பாகிஸ்தானில் மதிக்கப்படும் மன்சூர் ராஹி என்ற ஓவியரின் படைப்புகளும் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன. கண்காட்சி மீதான தாக்குதலால் கவலையடைந்தாலும், இதுபோன்ற சம்பவங்களெல்லாம் இரு நாடுகளுக்கிடையிலான கலைஞர்களது பகிர்தலை தடை செய்ய முடியாது என ராஹி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
நாச வேலை
படம் : நன்றி dawn.com
இன்னொருவர் இர்ஃபான் குல் தாஹ்ரி, இந்த பாகிஸ்தான் ஓவியரது படைப்புகள் தற்போது அழிக்கப்பட்டுள்ளன. இது போன்ற தாக்குதல்கள் முன்னரும் நடந்துள்ளன, வருங்காலத்திலும் நடக்கும் என்றும், என்னைப் போலவே அனைத்து ஓவியர்களும் கலாச்சார பரிமாற்றத்துக்காக இக்கண்காட்சியில் இதற்கு பின்னரும் கலந்து கொள்வோம் என்றும், இதுவெல்லாம் சிறு பிரச்சினை தான் என்றும் கூறியுள்ளார். மதவெறி அமைப்புகளை எதிர்த்து போராடுவதில் இரு நாட்டு கலைஞர்களும் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் அவர்களால் இப்படி பேச முடிகிறது.
கண்காட்சி அமைப்பாளரான ரவீந்திர மராடியா சம்பவம் பற்றி குறிப்பிடுகையில், ”சில பேர் வந்து கண்காட்சியை சூறையாடினார்கள், அவற்றில் இந்திய ஓவியர்களின் ஓவியங்களும் கூட இருந்தன, அவர்கள் பஜ்ரங் தள் ஆ அல்லது விஎச்பியா எனத் தெரியாது, ஆனால் அவர்கள் சமூகவிரோத சக்திகள்” என்று சொல்லியிருக்கிறார். உண்மைதான், இந்துமதவெறியர்கள் இப்படித்தான் இயங்க முடியும் என்பதை அவர்களே நிரூபித்து இருக்கிறார்கள்.
போலீஸ் - விஎச்பி
போலீசுடன் மோதும் விஎச்பியினர் (படம் : நன்றி என்டிடிவி)
இதற்கிடையில் செவ்வாய்க்கிழமை மாலை நகர போலீசு கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விஎச்பி அமைப்பினர், தங்களது அமைப்பினரை சட்டவிரோதமாக கைது செய்திருப்பதாக கோஷமிட்டுக் கொண்டே அதிகாரிகளை முற்றுகையிட்டனர். தள்ளுமுள்ளு நிகழவே சிறிய அளவில் தடியடிக்கு உத்திரவிடப்பட்டது. 5 விஎச்பி அமைப்பினர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை மாலையே காலையில் கைதான 9 பேரும் பிணையில் வெளி வந்து விட்டனர். இந்துமத வெறியின் கோட்டையான குஜராத்தில் அப்படித்தான் நடக்கும். இரு நாட்டு நட்புறவை வளர்ப்பதற்காக இரு நாட்டின் கலைஞர்களும் இணைந்து நடத்தும் ஒரு ஓவியக் கண்காட்சிக்கு போதிய போலீசு பாதுகாப்பை வழங்காமல் வேண்டுமென்றே வேடிக்கை பார்த்திருக்கிறது மோடியின் குஜராத் மாநில அரசு. கூடவே ரவுடித்தனம் செய்த இந்து மதவெறிக் காலிகளை தண்டிப்பதாக நாடகமும் ஆடுகிறது.
பாகிஸ்தான் மற்றும் இசுலாமியர் மீதான வெறுப்பை அடிப்படையாக வைத்து இந்துமதவெறியையும், தேசபக்தியையும் கிளப்ப சங்க பரிவாரங்கள் எப்போதும் முயன்று வருகின்றன. ஆகவே நரேந்திர மோடியின் குஜராத்திலேயே இதுதான் கதி என்றால் அவர் பிரதமரானால் என்ன நடக்கும் என்பதை விளக்கத் தேவையில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக