வியாழன், 1 ஆகஸ்ட், 2013

யாருக்கு வேண்டும் பிரித்தானிய அரச பைத்தியங்கள் ? ஏற்றத்தாழ்வை மறைக்க காதில் பூ சுற்றுகிறார்கள் ?

வில்லியம், கேத்தரீன்அரச குடும்பம் பெரும்பாலும் மக்களிடம் செல்வாக்கை இழந்து விட்ட நிலையில், இங்கிலாந்து ஊடகங்களோ, அவர்களை புனிதப் படுத்துவதையும், அவர்களை பற்றிய கிசுகிசுக்களை தலைப்பு செய்திகளாக்குவதையும் தொடர்ந்து செய்தபடி தான் உள்ளன.கடந்த திங்கட்கிழமை ஜூலை 22-ம் தேதி இங்கிலாந்து நேரப்படி மாலை 04:24 மணிக்கு (இந்திய நேரப்படி இரவு 09:54 மணி) இங்கிலாந்து அரச குடும்பத்திற்கு புது வாரிசு பிறந்தது. இனி இந்த நேரத்தை வைத்து இந்தியாவின் பிரபல ஜோதிட ஏமாற்றுக்காரர்கள் ஜாதகம் எழுதி அனுப்பி வைத்து அக்னாலட்ஜ்மெண்ட் வந்தால் அதை பிரேம் செய்து மாட்டி வைப்பது உறுதி. அதையும் அடுத்த ஆண்டில் ராஜ் டிவியிலோ, விஜய் டிவியிலோ பார்க்கலாம்.

20 சதவீதம் முதல் 40 சதவீத மக்கள் இந்த அரச குடும்பம் இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என கருதுகிறார்கள்
எடின்பர்க் இளவரசர் ஃபிலிப் மற்றும் இப்போதைய இங்கிலாந்து ராணி எலிசெபத்தின் கொள்ளு பேரன், இளவரசர் சார்லஸ், டயனா தம்பதிக்கு பேரன், இளவரசர் வில்லியமின் முதல் மகன். அடுத்த பட்டம் சூடும் வரிசையில் நேரடியாக மூன்றாவதாக இருக்கும் இளவரசர். இப்படி ஏகப்பட்ட அடையாளங்கள். இதைப் பார்த்தால் அடையாளங்களின் மொத்த விற்பனையாளர்களான பின் நவீனத்துவவாதிகளே தற்கொலை செய்து கொள்வார்கள்.

இங்கிலாந்து அரச குடும்பத்தைப் பற்றி நமக்கு அறிமுகம் தேவையில்லை, ஜனநாயகம் தழைத்தோங்கும் இங்கிலாந்து என மார்தட்டிக் கொண்டாலும், ஆளும் வர்க்கங்கள் அரச குடும்பத்தை முதன்மைப்படுத்தியும், அதற்கு விசுவாசமாக இருப்பதை வலியுறுத்தியும் தான் மக்களை ஏமாற்றுகின்றன. ஜனநாயக இங்கிலாந்தின் தேசிய கீதம் இன்னும் ராணியை (ராஜா) காப்பாற்று என கடவுளை கோருகிறது.
சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த கருத்துக்கணிப்பில் சுமார் 20 சதவீதம் முதல் 40 சதவீத மக்கள் இந்த அரச குடும்பம் இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என கருதுகிறார்கள். இங்கிலாந்தின் அரச குடும்பம் என்பது மக்கள் வரிப்பணத்தை வீணாகவும், போலி ஆடம்பரத்திற்கும் செலவு செய்யும் மிக மோசமான அமைப்பாக உள்ளது.
அரச குடும்பம் பெரும்பாலும் மக்களிடம் செல்வாக்கை இழந்து விட்ட நிலையில், இங்கிலாந்து ஊடகங்களோ, அவர்களை புனிதப் படுத்துவதையும், அவர்களை பற்றிய கிசுகிசுக்களை தலைப்பு செய்திகளாக்குவதையும் தொடர்ந்து செய்தபடி தான் உள்ளன. அந்த வகையில் அரச குடும்பத்தின் செல்வாக்கு கிசுகிசு ஆவல் வழியாக நிலைநாட்டப்படுகிறது. இதன்படி ராயல் விக்டோரியன் ராஜதர்மம் அந்தப்புரத்து ஜன்னல் வழியாக தழைத்தோங்குகிறது.
முன்பு ஊடகங்களுக்கு பெரும் தீனி போட்ட இளவரசி டயானா பத்திரிகையாளர்களின் செய்தி வேட்டையிலேயே உயிரிழந்தார். அவர் உயிரோடு இருந்த போது கண்ணிவெடி, பசி-பட்டினி போக்க வந்த தேவதையாக ஆளும் வர்க்கத்திறத்கு பயன்பட்டார். மேலும் அரச குடும்பத்தில் ஒரு சாதாரண மக்கள் பிரதிநிதி என்பதாகவும் டயானா போற்றப்பட்டார். அரச குடும்பத்தின் புகழ் பாடுவதற்கு இப்படி ஒரு உத்தி. இது போதாதென்று முர்டோக்கின் பத்திரிகைகள் அரச குடும்பத்தின் அறைகளில் ஒட்டுக் கேட்கும் கருவிகளை வைத்து அவர்களின் ரகசியங்களை தலைப்பு செய்தியாக்கி பணம் சம்பாதித்தன என்பது அம்பலமாகி பெரும் சர்ச்சையானது.
ஆனால் ஹாலிவுட் படமான “பேங்க் ஜாப்” படத்தை பார்த்தீர்களென்றால் 70-களிலேயே இவர்களது கிசுகிசு, புகைப்படங்களாக எடுக்கப்பட்டு கட்டைப் பஞ்சாயத்து பேர்வழிகளுக்கு எப்படி பயன்பட்டது என அறியலாம். அன்று அரச குடும்பத்தின் மானத்தைக் காப்பாற்ற நீதிபதிகள் கூட குற்றவாளிகளை விடுவித்தார்களாம். ஆக தனது சுரண்டலை மறைக்க உதவும் அரச குடும்பத்தின் கௌரவத்தைக் காப்பாற்ற இங்கிலாந்து ஆளும் வர்க்கம் எதையும் செய்யும்.
கிரீடம்
அதிக அளவு ஊடங்களால் தொல்லைப் படுத்தப்பட போகும் குழந்தையாக இந்த குழந்தை இருக்கும் என பத்திரிகைகள் கவலைப்பட்டன.
கடந்த சில வருடங்களாக இங்கிலாந்து கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் நிலையில் அங்கு மக்கள் போராட்டங்கள் பெருகி வருகின்றன. ஆனால் முதலாளிகளோ, அரசாங்கமோ மக்கள் போராட்டங்களை கண்டு கொள்ளாமல் தலைப்பு செய்திகளாக்க ஏதேனும் கிசுகிசு கிடைக்காதா என்ற நிலையில் ஏங்கித் தவிக்க, அவர்களின் வாய்க்கு கிடைத்த அவல் தான் இந்த அரச குடும்பத்தின் புது வாரிசு.
இளவரசர் வில்லியமின் மனைவி கேதரின், தான் கருவுற்றிருப்பதாக கடந்த ஆண்டு டிசம்பரில் அறிவித்தார், அதைத் தொடர்ந்து குழந்தை பிறப்பு ஜூலை மாதத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அவ்வளவுதான் ஊடகங்கள் தம் அருவருப்பான ஆட்டத்தை தொடங்கின. சிஎன்என் முதல் பிபிசி வரை பல்வேறு உலகத் தொலைக்காட்சிகளிலும், செய்தி சானல்களிலும், அரச குடும்பத்தின் புது வரவான “ராயல் பேபி”யை பற்றி சிறப்பு செய்திகள், பேட்டிகள் வர தொடங்கின.
கேதரினுக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவர் முதல், அவருக்கு பணிவிடை செய்யும் நர்சுகள் வரை, ஏற்கனவே பக்கிங்காம் அரண்மனையில் தாதிகளாக இருந்தவர்கள் முதல் சாதாரண மக்கள் வரை பேட்டிகள், கருத்துகள், கருத்துக்கணிப்புகள், பிறக்கப் போகும் குழந்தைக்கு நட்சத்திர பலன் பார்ப்பது, குழந்தை எந்த தேதியில் பிறக்கும், ஆணா பெண்ணா? போன்ற பந்தயங்கள், போட்டிகள் என ஊடகங்களில் நிகழ்ச்சிகள் களை கட்டின. இதில் ஆஸ்திரேலிய வானொலியின் அருவெருப்பான நடத்தை காரணமாக ஒரு செவிலியர் தற்கொலையே செய்து கொண்டார்.
இந்த செய்திகளை வைத்து எவ்வளவு காசு பார்க்க முடியுமோ அவ்வளவு காசு பார்க்கப்பட்டது. ”ரஜினி எப்பொழுது முதலமைச்சர் ஆவார்” என டெம்ப்ளேட் கவர் ஸ்டோரியை குமுதம், விகடன் வெளியிடுவது போல், சில டெம்ப்ளேட்டுகளை பாரம்பரிய பத்திரிகைகள் வெளியிட்டன.
ஜூலை இரண்டாவது வாரத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டிருந்த நிலையில், கேதரின் இடுப்பு வலி வந்து மருத்துமனைக்கு சென்ற செய்தி வெளியானது. அவ்வளவு தான் பிபிசி முதல் பல லைவ் சேனல்களின் காமிராக்கள் லண்டனில் உள்ள செயிண்ட் மேரி மருத்துவமனை வாசலில் குவிந்து விட்டன.
எந்நேரமும் குழந்தை பிறக்கலாம் என்ற நிலையில் யார் முதலில் அந்தச் செய்தியை சொல்லப் போவது? என ஒரே பரபரப்பு. குழந்தை பிறந்த செய்தியை முதலில் சொல்வதோடு அது ஆணா, பெண்ணா? என்ற செய்தியை முதலில் சொல்ல ஊடகங்கள் நடுவில் பெரும் போட்டி நிலவியது.
பல சீரியசான செய்திகளை வெளியிடும் பத்திரிக்கையான கார்டியன் கூட முதல் பக்கத்தில் பாதியளவை ராயல் பேபிக்காக ஒதுக்கியது. அரச குழந்தை பிறந்தவுடன், கார்டியனில் இது வரை அரச பரம்பரை வாரிசு வரவுகளை எப்படியெல்லாம் மக்களுக்கு அறிவித்துள்ளது என ஒரு சிறப்பு கட்டுரையை வெளியிட்டது.
கேட், வில்லியம்
அரச குழந்தை தன் முதல் நாப்பியை மாற்றி விட்டது என ஒரு செய்தி
இதில் நகை முரணாக அதிக அளவு ஊடங்களால் தொல்லைப் படுத்தப்பட போகும் குழந்தையாக இந்த குழந்தை இருக்கும் என பத்திரிகைகள் கவலைப்பட்டன. அரச பரம்பரையோ இந்த பிரபலத்தை ரசித்துக் கொண்டே வழக்கமாக சொல்லும் “எங்களுக்கு தனிமை வேண்டும் “ என்ற பல்லவியை பாடியது.
கடும் விலை வாசி உயர்வு, கல்விக் கட்டண உயர்வு, பொருளாதார நெருக்கடி, மக்கள் நலத் திட்டங்களில் வெட்டு, தேசிய மருத்துவ சேவையின் தடுமாற்றம் என இங்கிலாந்து எரிந்து கொண்டிருக்க ஜூலை 22 அன்று எல்லா ஊடகங்களிலும் அந்த குழந்தை பிறப்பை பற்றி கிசுகிசு, மொறுமொறு செய்திகள். ஒரே ஆறுதல், கார்டியன்; தன் தளத்தில் “நான் அரச பரம்பரையின் ஆதரவாளனில்லை” என்ற ஒரு சுட்டியை கொடுத்தது. அதை க்ளிக்கினால் அரச குடும்பத்து குழந்தையை பற்றிய செய்திகள் வடிகட்டப்பட்டன.
குழந்தையைப் பற்றிய செய்தியில் முன்னணியில் இல்லையென்றாலும், வேதாளத்தை துரத்தும் விக்கிரமாதித்தியனாக விடா முயற்சியுடன் பல ஊடகங்கள் புது விதமான செய்திகள், கட்டுரைகள் மூலம் இதை காசாக்கி கொண்டுதான் இருக்கின்றன.  வில்லியமின் குழந்தை பேறுக்கான தந்தை விடுமுறை, அது எத்தனை நாட்கள், இது வரை கொள்ளுப் பேரன் பேத்தியை பார்த்த அரசர்கள் யார்? என்று கட்டுரைகள். இதை சார்ந்த கேள்வி பதில் போட்டிகள், இங்கிலாந்து அரசர்களின் வரலாறு என அல்லோலப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது.
இதனுடைய உச்சம், பல நூறாண்டு கால அரச பரம்பரை வரலாற்றில், “நாப்கின் போடும் முதல் குழந்தை இது தான் என ஒரு செய்தி, (வில்லியம் நாப்கின் போடவில்லியாம்), அரச குழந்தை தன் முதல் நாப்பியை மாற்றி விட்டது என ஒரு செய்தி. முதல் பால், முதல் அழுகை, முதல் ஆய், முதல் சிறுநீர் என செய்தியின் பட்டியல் நீளலாம்.
ஊடகங்கள் இப்படி கிசுகிசு, மொக்கைச் செய்திகளுக்கு மக்களின் ரசனையை தாழ்த்துவது உலகம் முழுவதும் நடக்கும் ஒன்று தான். ரஜினிக்கு முறுக்கு பிடிக்கும், ரம்பாவுக்கு வாழைப்பழம் பிடிக்கும், தனுஷின் குழந்தைக்கு விஜய் பிடிக்கும், அஜித் மகள் பருப்பு சாதம் சாப்பிடும், கல்யாண கவரேஜ், கருமாதி கவரேஜ், என கிசு கிசு டிட்பிட்ஸ்களில் தான் இதழியல் இயங்கி கொண்டிருக்கிறது.
இந்த ஊடகங்கள் உண்மையான மக்களை புறக்கணிப்பதும், அவர்களது வாழ்க்கை போராட்டங்களை புறக்கணிப்பதும், அவர்களின் ரசனையை தாழ்த்துவதும் மூலமாக அவர்களை ஒடுக்கப்படும் பாமரர்களாகவே வைத்திருக்க விரும்புகின்றன, இது அவர்கள் ஆளும் வர்க்கத்தினருக்கும் செய்கின்ற சேவை.
அரச பரம்பரை, ஆளும் வர்க்கம் ஆகிய பாஸிஸ்டுகளை விட அவர்களுக்கு விளக்கு பிடித்து வெளிச்சம் போட்டு காட்டும் இந்த ஊடகங்கள் தான் உழைக்கும் மக்களின் முதல் விரோதி. ஏழை நாடுகளின் ஆயிரக்கணக்கான குழந்தைகள் அன்றாடம் இறக்கும் காலத்தில்தான் இங்கிலாந்து அரச குடும்பத்தின் குழந்தை குறித்த கொண்டாட்டங்கள் அருவெருப்புடன் முன்வைக்கப்படுகின்றன. ஊர், சேரியைக் கொளுத்தி வாழும் பண்ணையார் தனக்கு பேரன் பிறந்தால் கொஞ்சமாட்டானா என்ன? vinavu.com
- ஆதவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக