புதன், 14 ஆகஸ்ட், 2013

ராஜ்யசபா தி.மு.க., தலைவராக கனிமொழியை நியமிக்க பரிந்துரை

ராஜ்யசபா தி.மு.க., தலைவர் பதவிக்கு, தி.மு.க., கலை, இலக்கிய பகுத்தறிவு
பேரவையின் மாநில செயலர் கனிமொழியை பரிந்துரை செய்வதாக, ராஜ்யசபா தலைவர் அமீது அன்சாரிக்கு, தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகன், கடிதம் எழுதியுள்ளார்.ஜூன் மாதம், ராஜ்யசபா தேர்தல் நடந்தது. அ.தி.மு.க., சார்பில், மைத்ரேயன் உட்பட, நான்கு எம்.பி.,க்களும், தி.மு.க., சார்பில் கனிமொழியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், அக்கட்சியின் தேசிய செயலர், டி.ராஜாவும் பதவி ஏற்றனர்.பார்லிமென்ட் மழைக்காலக் கூட்டத் தொடர் துவங்கியதும், அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் பதவி ஏற்றனர். ஆனால், அவர்களுடன் சேர்ந்து, கனிமொழி பதவி ஏற்காமல், தனியாக பதவி ஏற்றார்; தமிழில் உறுதி மொழி ஏற்றுக் கொண்டார்.
ராஜ்யசபாவில், தமிழகத்திலிருந்து தற்போது, 19 எம்.பி.,க்கள் உள்ளனர். அ.தி.மு.க.,வில் மைத்ரேயன், பாலகங்கா, ரபி பெர்னாண்ட், மனோஜ் பாண்டியன், லட்சுமணன், ரத்தினவேல், அர்ஜுனன்; தி.மு.க., சார்பில் கனிமொழி, ஜின்னா, வசந்தி ஸ்டான்லி, கே.பி.ராமலிங்கம், செல்வகணபதி, தங்கவேலு இடம் பெற்றுள்ளனர்.காங்கிரஸ் சார்பில், மத்திய அமைச்சர்கள் ஜெயந்தி நடராஜன், வாசன், சுதர்சன நாச்சியப்பன் மற்றும் மணிசங்கர் அய்யர்; இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் டி.ராஜா; மார்க்சிஸ்ட் சார்பில் டி.கே.ரங்கராஜனும் இடம் பெற்றுள்ளனர்.ராஜ்யசபா தி.மு.க., தலைவராக, திருச்சி சிவா பணியாற்றி வந்தார்.
அவரது பதவி, ஜூன் மாதம் காலியானதால், அப்பதவி காலியாக இருந்தது. தற்போது, தி.மு.க.,வில் உள்ள, எம்.பி.,க்களில், சீனியர் என்ற அடிப்படையில், கனிமொழிக்கு ராஜ்யசபா தி.மு.க., தலைவர் பதவி வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து, ராஜ்யசபா தலைவர் அமீது அன்சாரிக்கு, தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகன் எழுதிய கடிதத்தில், "ராஜ்யசபா தி.மு.க., தலைவர் பதவியில் இருந்த, சிவாவின் எம்.பி., பதவி காலம் முடிவடைந்து விட்டதால், அவரு பதிலாக கனிமொழியை நியமிக்க தி.மு.க., சார்பில் பரிந்துரை செய்யப்படுகிறது' எனக் குறிப்பிட்டுள்ளார்.இக்கடிதம் அறிவாலயத்திலிருந்து, டில்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

- நமது நிருபர் - dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக