செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013

சோனியா காந்தி திடீர் உடல்நலகுறைவு ! உணர்ச்சிவசப்பட்டு பேசியதால் ஏற்பட்ட விளைவு ?

புதுடெல்லி
பாராளுமன்றத்தில் ஓட்டெடுப்பு நடந்து கொண்டிருந்தபோது, காங்கிரஸ்
தலைவர் சோனியா காந்திக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக, மருத்துவ பரிசோதனைக்காக டெல்லியில் உள்ள ‘எய்ம்ஸ்’ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
திடீர் உடல் நலக்குறைவு
பாராளுமன்றத்தில் உணவு பாதுகாப்பு சட்ட மசோதா மீது நேற்று இரவு வரை காரசாரமான விவாதம் நடைபெற்றது. 8 மணிக்கு மேல், மசோதாவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட திருத்தங்கள் மீது ஓட்டெடுப்பு நடைபெற்றுக்கொண்டு இருந்தது.8.15 மணி அளவில், சபையில் இருந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால், அவர் உடனடியாக டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக (‘எய்ம்ஸ்’) ஆஸ்பத்திரிக்கு புறப்பட்டுச் சென்றார்.

தீவிர சிகிச்சை பிரிவில்
அவருடன் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, மத்திய மந்திரி குமாரி செல்ஜா ஆகியோரும் பாராளுமன்றத்தை விட்டு வெளியே வந்தனர். செல்ஜாவின் தோள் மீது கைபோட்டபடி சோனியாவும், அவருக்கு அருகே ராகுலும் வந்தனர்.பின்னர் சோனியாவும், ராகுலும் காரில் ஏறி எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அங்கு மருத்துவ பரிசோதனைக்காக தீவிர சிகிச்சை பிரிவில் சோனியா அனுமதிக்கப்பட்டார். டாக்டர் குழுவினர் சோனியாவின் உடல் நிலையை பரிசோதித்தனர்.
விஷக்காய்ச்சல்
நேற்று முன்தினம் இரவில் இருந்தே விஷக்காய்ச்சலால் சோனியா பாதிக்கப்பட்டு இருந்தார். டாக்டர்கள் அவருடைய வீட்டில் சோனியாவுக்கு சிகிச்சை அளித்ததாக தெரிய வந்துள்ளது.நேற்று பாராளுமன்றத்தில் உணவு பாதுகாப்பு மசோதா மீதான விவாதத்துக்கு தலைமை தாங்கி பேசிய சோனியா, மிகவும் உணர்வு பூர்வமாக மசோதாவுக்கு ஆதரவு கோரினார். இந்த நிலையில் மீண்டும் உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டதால் சோனியா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.dailythanthi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக