வெள்ளி, 2 ஆகஸ்ட், 2013

ஆந்திரா: 13அமைச்சர்கள் 20 MLA க்கள் ராஜினாமா கடிதம்

ஐதராபாத்: ஆந்திராவை இரண்டாகப் பிரித்து, தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்குவது என்ற, ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் காங்கிரஸ் செயற்குழுவின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆந்திர அமைச்சர்கள், 13 பேரும், எம்.எல்.ஏ.,க்கள், 20 பேரும், எம்.எல்.சி.,க்கள், ஒன்பது பேரும், நேற்று தங்களின் பதவியை ராஜினாமா செய்தனர். "மாநிலத்தைப் பிரிக்கும் முடிவை, காங்கிரஸ் செயற்குழு மறுபரிசீலனை செய்ய வேண்டும். இல்லையெனில், பொதுமக்களுடன் இணைந்து போராடுவோம்' என்றும் எச்சரித்துள்ளனர்.
ஆந்திராவை பிரித்து, தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்கக் கூடாது என, எதிர்ப்பு தெரிவித்து, தெலுங்கானா தவிர்த்து பிற பகுதிகளில், ஒருங்கிணைந்த ஆந்திரா ஆதரவாளர்கள், இரண்டாவது நாளாக நேற்றும் போராட்டம் நடத்தினர். இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. கிருஷ்ணா, கிழக்கு கோதாவரி, விசாகப்பட்டினம், கடப்பா மற்றும் அனந்தப்பூர் மாவட்டங்களில், போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. விசாகப்பட்டினத்தில் உள்ள ஆந்திரா பல்கலைக்கழக மாணவர்கள், மூன்றாவது நாளாக, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்நகர நீதிமன்ற நீதிபதிகள், 72 மணி நேர, கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பல இடங்களில், கதவடைப்பு மற்றும் வேலை நிறுத்தப் போராட்டங்கள், தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனால், மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே, அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. கல்வி நிறுவனங்கள், தொழிற்கூடங்கள் மூடப்பட்டுள்ளன. மத்திய, மாநில அரசு அலுவலகங்களில், சொற்ப எண்ணிக்கையிலேயே பணியாளர்கள் வந்திருந்தனர். மாநில அரசு அலுவலகங்கள் பல, மூடிக் கிடந்தன. அரசு அலுவலர்கள், அலுவலக வாயில்களிலேயே, போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அனந்தபூர் மாவட்டத்தில் ரோந்து சென்ற போலீசார் மீது, கும்பல் கல் வீசி தாக்கியதில், மூன்று போலீசார் காயமடைந்தனர். மாநில போலீசாருடன், துணை ராணுவப் படையினரும், தீவிர ரோந்து மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.அமைச்சர்கள் ராஜினாமா: இந்நிலையில், ஆந்திராவில், ராயலசீமா மற்றும் கடலோர ஆந்திர பகுதிகளைச் சேர்ந்த, 13 அமைச்சர்கள் நேற்று ஐதராபாத்தில், முதல்வர் கிரண்குமார் ரெட்டியை சந்தித்தனர். மாநில பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தங்களின் ராஜினாமா கடிதங்களை, அவரிடம் வழங்கினர். அப்போது, மக்களின் விருப்பத்திற்கு எதிராக, தங்களால் செயல்பட முடியாது என்றும் கூறினர். அத்துடன், எம்.எல்.ஏ.,க்கள் 20 பேரும், எம்.எல்.சி.,க்கள் ஒன்பது பேரும், தங்களின் பதவியை ராஜினாமா செய்து, அதற்கான கடிதங்களை, சட்டசபை செயலகத்தில் வழங்கினர். தெலுங்கானா எதிர்ப்பு கூட்டு நடவடிக்கை குழுவினர் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், "மாநிலப் பிரிவினைக்கு எதிராக, அனைத்து அரசியல் கட்சிகளைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளும், தங்களின் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்' என, அழைப்பு விடுத்துள்ளனர். இதற்கிடையில், தெலுங்கானா பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவித்து, வன்முறையில் ஈடுபடுவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, ஆந்திர போலீஸ் டி.ஜி.பி., தினேஷ் ரெட்டி, எச்சரிக்கை விடுத்துள்ளார்.dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக