வெள்ளி, 26 ஜூலை, 2013

அனுமதிக்கப்பட்ட வேகத்தைவிட இருமடங்கு வேகத்தில் வந்ததால் விபத்து ! Spain லுமா?

ஐரோப்பாவின் மிக மோசமான ரயில் விபத்துக்களில் ஒன்று, ஸ்பெயின்
நாட்டில் நேற்று (புதன்கிழமை) இரவு நடந்துள்ளது. குறைந்தபட்சம் 60 பேர்
கொல்லப்பட்டும், 131 பேர் காயமடைந்தும் உள்ளனர். அவர்களில் 20 பேர் படுகாயமடைந்துள்ளனர். 5 பேர் கோமா நிலையில் நினைவற்று உள்ளார்கள்.
நேற்றிரவு 8.40 மணிக்கு, ஸ்பெயினின் வட-மேற்கு பகுதியில் உள்ள சான்டியாகோ டி கொம்பொஸ்டெல்லா நகரை நெருங்கிக்கொண்டிருந்தபோதே ரயில் விபத்துக்கு உள்ளாகியது. ஸ்பெயின் வரலாற்றில் 40 ஆண்டுகளின் பின் நடந்த மோசமான ரயில் விபத்து இது.
ரயில் பெட்டிகள் ஒன்றுடன் ஒன்று செருகியுள்ள நிலையில் (போட்டோ-2) அதற்கு உள்ளேயிருந்து பயணிகளை மீட்கும் பணிகள் மிக சிரமமான முறையிலேயே மேற்கொள்ளப்பட்டன. ரயில் தண்டவாளத்துக்கு அருகே போர்வைகளால் மூடப்பட்ட நிலையில் பயணிகளின் இறந்த உடல்கள் கொணப்பட்டன.

மாட்ரிட் நகரில் இருந்து வந்துகொண்டிருந்த இந்த ரயிலில் 247 பேர் பயணம் செய்துகொண்டு இருந்தனர். ரயில்வே அதிகாரிகளால், ‘மிக அபாயகரமான வளைவு’ என வர்ணிக்கப்படும் இடத்தில் ரயில் தடம்புரண்டது. வந்த வேகத்தில் 6 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து விலகின.
அதன்பின் ரயில் பெட்டிகள் இரண்டு மூன்று தடவைகள் உருண்டுள்ளன. ஒரு பெட்டிக்கு மேல் மற்றொரு பெட்டி ஏறிய நிலையில் (போட்டோ – 5), ரயில் தீப்பிடித்துக் கொண்டது.
விபத்து ஏன் ஏற்பட்டது என்பது இன்னமும் தெளிவாக தெரியவில்லை. லோக்கல் ரேடியோ ஸ்டேஷன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஒருவர், விபத்து நடப்பதற்கு சற்றுமுன் குண்டுவெடிப்பு போல சத்தம் கேட்டதாக தெரிவித்தார்.
ஸ்பானிஷ் பத்திரிகை எல்-பாயிஸ், “மிக அபாயகரமான வளைவில் ரயில் வந்தபோது அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச வேகத்தைவிட இரு மடங்கு வேகத்துடன் வந்தது” என்று எழுதியுள்ளது. இந்த வளைவில் அனுமதிக்கப்பட்ட வேகம், மணிக்கு 80 கி.மீ. ஆனால் ரயில் மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் வந்ததாக தெரிகிறது.
விபத்து நடந்தவுடன் ஒரு ரயில் பெட்டி தண்டவாளத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு, தொலைவில் வரிசையாக இருந்த வீடுகளுக்கு அருகே போய் விழுந்திருக்கிறது. வேறு சில பெட்டிகள் முழுமையாக நொருங்கியுள்ளன என்பதில் இருந்து ரயில் வந்த வேகத்தை ஊகித்துக் கொள்ளலாம்.
விபத்து நடந்த இடம் ஒரு சிறிய நகரம். இப்பகுதி மக்கள் பயணிகளுக்காக ரத்த தானம் செய்வதற்காக இங்குள்ள வைத்தியசாலையில் குவிந்துள்ளனர். சிறிய நகரில் உள்ள ஹோட்டல்கள், பயணிகளின் உறவினர்களுக்கு இலவச ரூம்கள் தர தயார் என அறிவித்துள்ளன.
ரயிலை செலுத்திவந்த இரு டிரைவர்களும் காயமடையாமல் தப்பியுள்ளனர். அவர்களில் ஒருவர், “ஐயோ.. நான் ரயிலை கவிழ்த்து விட்டேனே” என்று திரும்பத் திரும்ப அலறியபடி உள்ளார். அவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டு விட்டதா என்று சந்தேகிக்கிறார்கள்.
இந்த வளைவில் இவ்வளவு வேகத்தில் ரயில் வந்த காரணம், டிரைவரின் தவறா, அல்லது தொழில்நுட்ப கோளாறா என்பதை ரயிலின் பிளாக் பாக்ஸ் சோதனையிடப்பட்ட பின்னரே தெரியவரும்.
viruvirupu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக