சனி, 6 ஜூலை, 2013

பரிதியின் இரண்டாவது மனைவி உதயகுமாரி: அவர் எங்களோடு பேசமாட்டார் !

முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி, சமீபத்தில் தி.மு.க.வில் இருந்து விலகி முதல்-அமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் சேர்ந்தார். இந்த நிலையில், பரிதி இளம் வழுதியின் மகன் பரிதிஇளம்சுருதி (22) வெள்ளிக்கிழமை மாலை திடீரென்று சென்னையில் கைது செய்யப்பட்டார்.
பரிதிஇளம்சுருதி சென்னை அயனாவரம், சபாபதி தெருவில் தனது தாயார் உதயகுமாரியுடன் வசித்து வருகிறார். வெள்ளிக்கிழமை மாலை 3 மணி அளவில், அயனாவரம் சோலை தெருவில் உள்ள தனது சித்தி வீட்டில் இருந்தார். அப்போது போலீஸ் படையினர் திடீரென்று சென்று பரிதி இளம்சுருதியை கைது செய்து, போலீஸ் வாகனத்தில் அழைத்து வந்தனர். கீழ்ப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இதற்கிடையில், பரிதி இளம்சுருதியின் தாயார் உதயகுமாரி, தனது உறவினர்கள் மற்றும் ஏராளமான வக்கீல்களுடன் மாலை 4 மணி அளவில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
பரிதி இளம்வழுதியின் 2-வது மனைவி நான். பரிதி இளம்வழுதி எங்களோடு இப்போது பேசமாட்டார். எனது மகன் பரிதி இளம்சுருதி, தி.மு.க. இளைஞர் அணியின் வடசென்னை மாவட்ட துணை அமைப்பாளராக இருக்கிறார். வக்கீலுக்கும் படித்து வருகிறார்.
எனது தங்கை வீட்டில் வைத்து எனது மகனை போலீசார் தரதரவென்று இழுத்து வந்துள்ளனர். சட்டை கூட போடுவதற்கு அனுமதிக்கவில்லை. எதற்காக கைது செய்தனர், அவனை எங்கு வைத்துள்ளனர் என்பது பற்றி போலீசார் எதுவும் சொல்ல மறுக்கிறார்கள். அதுபற்றி கேட்கவே கமிஷனர் அலுவலகம் வந்தேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பரிதிஇளம்சுருதி கடந்த 1-ந் தேதி அன்று, அயனாவரம் ஜாயின்ட் ஆபீஸ் அருகில் நடந்த தி.மு.க. பொதுக்கூட்டத்தில், முதல்-அமைச்சர் ஜெயலலிதா பற்றி தரக்குறைவாகவும், அவதூறாகவும் பேசியதாக, அயனாவரம் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் என்பவர் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் அயனாவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகராஜ், அவதூறு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதன்பேரில், பரிதிஇளம்சுருதி கைது செய்யப்பட்டார்.

இரவு 8 மணி அளவில் மாஜிஸ்திரேட்டு வீட்டில் அவர் ஆஜர்படுத்தப்பட்டு, 15 நாள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

படங்கள்: ஸ்டாலின்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக