சனி, 6 ஜூலை, 2013

போர்வெல் பள்ளத்தில் விழுந்து சிறுமி பலி! கலெக்டர் அலட்சியம்! பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு!

கரூரில் போர்வெல் பள்ளத்தில் விழுந்து 12 வயது சிறுமி பலியான சம்பவம் தொடர்பாக பதிலளிக்க நகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் செயலாளர் மற்றும் கரூர் கலெக்டர் ஆகியோருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
ஐகோர்ட் வக்கீல் உத்தமன், மதுரை மாவட்ட கோர்ட் வக்கீல் சங்க செயற்குழு உறுப்பினர் முத்துக்குமார், வக்கீல் அருண்குமார் ஆகியோர், ஐகோர்ட் மதுரை கிளை பதிவாளர் தங்ககனியிடம் ஒரு மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் திறந்து கிடக்கும் ஆழ்துளை கிணறுகளில் குழந்தைகள் விழுந்து பலியாகும் சம்பவம் அடிக்கடி நடக்கின்றன. இடத்தின் உரிமையாளர்கள், போர்வெல் உரிமையாளர்கள் உரிய அனுமதி பெறாமல் ஆறு மற்றும் 8 இஞ்ச்களில் 800 அடி ஆழத்திற்கு ஆழ்துளை கிணறு தோண்டுகின்றனர். தண்ணீர் இல்லாதபட்சத்தில் கிணறுகளை மூடாமல் அப்படியே விட்டு விடுகின்றனர். அந்த குழிகளில் குழந்தைகள், சிறுவர், சிறுமிகள் விழுந்து உயிரிழக்கின்றனர்.
குழந்தைகள் நாட்டின் தூண்கள். விலை மதிக்க முடியாத உயிர்கள், சுயநலவாதிகளால் அநியாயமாக பறிக்கப்படுகின்றன. கரூரில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 12 வயது சிறுமி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு இழப்பீடு வழங்கவில்லை.

இது போன்ற சம்பவங்களை தடுக்க ஆழ்குழாய் கிணறு தோண்ட, மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசாரிடம் முன் அனுமதி பெற வேண்டும். முன் அனுமதி பெறப்பட்டு கிணறு தோண்டும் போது பணி துவங்கி, முடியும் வரை போலீசார் கண்காணிக்க வேண்டும். இதுதொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் தலைமை செயலாளர் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இதுதொடர்பாக ஐகோர்ட் கிளை தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
 இந்நிலையில் இந்த மனுவை ஐகோர்ட் கிளை தாமாக முன்வந்து வழக்காக 05.07.2013 வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்தது. மனுவை நீதிபதிகள் பால்வசந்தகுமார், தேவதாஸ் விசாரித்தனர். மனுவுக்கு பதிலளிக்க நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை செயலாளர், நகராட்சி நிர்வாக ஆணையர், கரூர் கலெக்டர் மற்றும் கரூர் நகராட்சி ஆணையர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். அடுத்த விசாரணை ஜூலை 19க்கு தள்ளிவைக்கப்பட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக