வெள்ளி, 26 ஜூலை, 2013

இசுலாத்தின் பெயரால் சவுதி மன்னராட்சி பயங்கரவாதம் !

சவுதி அரேபியாவில் மன்னராட்சிக்கு எதிராகவும், அரசியல் சீர்திருத்தம் கோரியும் போராட்டங்கள் நடக்க ஆரம்பித்துள்ளன. அதற்காக போராடும் மனித உரிமையாளர்கள் பலரையும் பயங்கரவாதிகளைப் போல கைது செய்து கொடுமைப்படுத்துகிறது சவுதியின் மன்னராட்சி. பெண்கள் வீதிக்கு வந்து போராடுவதை சகித்துக் கொள்ள முடியாத ஷேக்குகளின் சட்ட ஆட்சி மேலாண்மை செலுத்துகிறது. மனித உரிமைகளுக்காக போராடுவதாக சொல்லிக் கொண்டு ஈராக், லிபியா, சிரியா என்று பிற நாடுகளின் மீது வரிசையாக பயங்கரவாதத்தை அவிழ்த்து விடும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய ‘ஜனநாயகங்கள்’ சவுதி அரேபியாவின் நம்பகமான கூட்டாளிகளாக உள்ளன. தங்களுக்கு எண்ணெய் வளத்தை வாரி வழங்கும் மன்னர் ஆட்சியை பாதுகாத்து நிற்கின்றன.
அப்துல்கரீம் அல்காதர் என்பவர் சவுதி அரேபியாவிலுள்ள குவாஸிம் பல்கலைக்கழக சட்டத்துறைப் பேராசிரியர் மட்டுமல்ல, அரேபிய குடியுரிமை மற்றும் அரசியலுரிமைக்கான கூட்டமைப்பின் நிறுவன உறுப்பினரும் கூட. ஆட்சியாளர்களது நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாகவும், சட்டவிரோதமாக மனித உரிமை அமைப்பு தொடங்கியதாகவும் அவர் மீது குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டன.
உண்மையில் பேராசிரியரின் அமைப்பு அரசின் நடவடிக்கைகளை விமர்சிக்க ஆரம்பித்த பிறகு உள்கட்டுமான அமைச்சகம் இப்போலிக் குற்றச்சாட்டுக்களை அவர்மீது சுமத்தியிருக்கின்றது.
புரைடா நகரில் நடந்த அல்காதர் மீதான விசாரணையை பார்க்க நீதிமன்றத்திற்குள் அவரது வீட்டுப் பெண்கள் வர முயன்ற போது, ஆண்கள் மட்டும்தான் வர வேண்டும் என்று நீதிபதி சொல்லி விட்டார். தனிப்பட்ட முறையில் நீதிபதியுடனான முரண்பாடு காரணமாக வழக்கு பதியப்பட்டிருப்பதால் வழக்கை தள்ளுபடி செய்யக் கோரினார் அல்காதர். அல்காதரின் வழக்கறிஞரான அப்துல்சிஸ் அல்-சுபைலியை விரும்பத்தகாத நடவடிக்கையில் ஈடுபட்டதாக பொய்க்குற்றம் சாட்டி காவல்துறையினர் கைது செய்து பின் விடுவித்தனர். பிரதிவாதியும், அவரது வழக்கறிஞரும் இல்லாமலேயே ஏப்ரல் 25 அன்று தீர்ப்பு வழங்கினார் நீதிபதி இப்ராஹிம் அப்துல்லாஹ் எல்-ஹோசினி. இதன்படி அல்காதருக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மன்னிப்பு கேட்டால் 5 ஆண்டுகள் தண்டனை குறைப்புக்கும் நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.
இதே நீதிபதி கடந்த மார்ச் 9 அன்று அம்மனித உரிமை அமைப்பைச் சேர்ந்த முகமது அல்-கஹானி, அப்துல்லா அல் ஹமீது ஆகியோர் ஆட்சியாளர்களுக்கு எதிராக பேசியதாகவும், நாட்டு முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பதாகவும் கூறி 10 மற்றும் 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்திருந்தார். முகமது அல்-கஹானி இசுலாமிய பெண்கள் கார் ஓட்ட அனுமதிக்க கோரி 2011-ல் போராடிய போது வெளிநாட்டுக்காரனை பின்னால் உட்கார வைத்து அல்-கஹானியின் மனைவி கார் ஓட்டப் போகிறார் பாருங்கள் என்று கெக்கலித்தனர் நீதிபதிகள். அல்-கைதாவும், இம்மனித உரிமை அமைப்பும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். பெண்கள் எல்லாம் இணையதளத்தில் குரானை மேற்கொள் காட்டுவதையும், அதற்கு பொருள் சொல்வதையும் தன்னால் பொறுத்துக்கொள்ள இயலாது என்றும் நீதிபதி சொல்லியுள்ளார்.
அல்சயீத் என்ற உறுப்பினர் கைது செய்யப்பட்ட போது அவருக்காக வாதாட வந்த குவைத்தை சேர்ந்த வழக்கறிஞரான அம்மாஸ் அல்ஹார்பிக்கு அவர் சவுதியின் பிரஜை இல்லை என்று அனுமதி மறுக்கப்பட்டது. மனித உரிமை சங்கம் ஆரம்பித்த முகமது அயீத் அல்-ஒடிபி இணையதளம் துவங்க அனுமதி பெறவில்லை என்றும் கூறி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருக்கு வழக்கறிஞர் வைத்துக்கொள்ளவே அனுமதி மறுக்கப்பட்டது. இந்த அமைப்பின் முன்னணியாளர்களில் ஒருவரான எய்சா அல் நெகாபிக்கு கடந்த ஏப்ரல் 29 அன்று மூன்றாண்டு சிறைத்தண்டனையும், நான்காண்டு வெளிநாடு செல்லத் தடையும் விதித்தது நீதிமன்றம். அவரது வங்கிக் கணக்குகளையும், இணைய பக்கங்களையும் அரசு நிர்வாகம் கையகப்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்தினர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
2001 செப்டம்பர் 11 தாக்குதலுக்கு பிறகு மாத்திரம் தீவிரவாதத்திற்கெதிரான நடவடிக்கை என்ற போர்வையில் மனித உரிமை ஆர்வலர்களில் சுமார் 30 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பலரும் சிறையில் உண்ணாவிரதம் இருக்கின்றனர். இவர்களைப் பற்றிய தகவல்கள் எதுவும் இரண்டு மூன்று ஆண்டுகளாக அரசால் வெளியிடப்படவேயில்லை. பலரையும் அவர்களது குடும்ப உறுப்பினர், வழக்கறிஞரை சந்திக்கக் கூட அரசு தரப்பு மறுத்து வருகிறது.
அரபு வசந்தம்
அரபு வசந்தம்
அல் ஸாடி என்ற மனித உரிமை ஆர்வலர் சிறையில் 30 நாட்களுக்கும் மேலாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இப்போது உயிருடன் இருக்கிறாரா எனத் தெரியவில்லை. அவர் உண்ணாவிரதம் இருக்கும் செய்தியை அரசு இருட்டடிப்பு செய்து விட்டது. மார்ச் 21, 2011 முதல் சிறையில் இருக்கும் அவரை யாருமே இதுவரை சந்திக்க இயலவில்லை. ரகசியமாக சிறையிலிருந்து கடத்தி வரப்பட்ட கடிதங்கள் சில ட்விட்டரில் உலவினாலும் அவரை சந்திக்க அவரது மனைவி, தாய்க்கும் கூட அனுமதி கிடையாது.
அரபு வசந்தத்தை ஆதரித்து அமைதிப் பேரணியில் கலந்து கொண்ட சையது அகீல் அக் 2011-ல் கைது செய்யப்பட்டு இதுவரை யாரையும் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. உண்ணாவிரதமிருந்த காரணத்தால் அவரை மருத்துவமனையில் சங்கிலியால் கட்டிலுடன் பிணைத்து காவல் போடப்பட்டிருந்தது. தொழுகை நடத்த அவர் அனுமதி கேட்டபோது பாதுகாப்புக்கு நின்ற வீரர்கள் அதனைக் காதுகொடுத்துக் கூட கேட்கத் தயாராக இல்லை.
கிழக்குப் பகுதியில் உள்ள குவாதிப் நகரத்தில் கடந்த ஜூன் 22 அன்று நடந்த சிறப்பு காவல்படையின் கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் அப்பாவி இளைஞன் ஒருவனும், 2011 அரபு வசந்த புரட்சியை ஆதரித்து நடந்த பேரணியின் முன்னணி இளைஞர்களில் ஒருவனுமான மோர்சி அல்-ரெஃப்-ம் கொல்லப்பட்டனர். மோர்சியை பிடித்த பிறகுதான் சுட்டுக் கொன்றதாக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இறந்து கிடந்த மோர்சியின் உடலை பெற வேண்டுமானால் தாங்கள் சொல்லும் பேப்பரில் கையெழுத்திடுமாறு அவரது குடும்பத்திற்கு மிரட்டல் உள்கட்டுமான அமைச்சகத்திலிருந்து வந்ததாம். அதற்கு அவரது குடும்பத்தினர் மறுத்து விட்டனர்.
மனித உரிமை ஆர்வலர்களைக் கண்டு அஞ்சும் ஆட்சியாளர்கள் அவர்களிடமிருந்து பேனாவையும், செல்பேசிகளையும் பிடுங்கிக் கொள்கின்றனர். அரசியல் கைதிகளை விடுவிக்க கோரும் போராட்டத்தில் பெண்கள் வீதிகளுக்கு வந்து இரவெல்லாம் கூடாரம் அமைத்து போராடுகின்றனர். போலீசார் அவர்கள் மீது உப்புப்பெறாத காரணங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்ததுடன், இயற்கை உபாதை மற்றும் உணவுக்கு கூட அவர்களை போக விடாமல் தடுத்துள்ளனர்.
இந்த அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்கள் பல்வேறு தளங்களில் நடத்தப்படுகின்றன. வைபர் என்ற தகவல்தொடர்புக்கு உதவும் மென்பொருளை கடந்த ஜூன் மாதம் 5ம் தேதி அரசு தடை செய்ததும் ஓபன் சோர்ஸ் ஆதரவாளர்கள் அதற்கு பதிலாக எந்தெந்த மென் பொருட்களை பயன்படுத்தலாம் என ஆலோசனைகளை ட்விட்டரில் கொட்டத் துவங்கினர். தற்போது ட்விட்டரில் நானும் அம்மனித உரிமை அமைப்பின் உறுப்பினர்தான் என்ற பெயரில் ஒரு அக்கவுண்ட் துவங்கப்பட்டு பலரும் அதில் இணைந்து வருகின்றனர். அனைவரும் அல் காதரின் விடுதலைக்காகவும், அரசியலமைப்பை மாற்றக் கோரியும் ட்விட்டரில் பிரச்சாரம் செய்கின்றனர்.
ட்விட்டர் மற்றும் முகநூலில் செயல்படும் பாதிக்கப்பட்ட இளைஞர்களை கைது செய்வதற்கு ‘பயங்கரவாதத்திற்கெதிரான போரை’ சவுதி மன்னராட்சி தொடங்கியுள்ளது.
இளவரசன் முகமது பின் நயீப் பில் அல் அசீஸ்
இளவரசன் முகமது பின் நயீப் பில் அல் அசீஸ்
இந்த ஆண்டு துவக்கத்தில் பிரிட்டன் பிரதமர் காமரூனையும், அமெரிக்க அதிபர் ஒபாமாவையும் சந்தித்து பயங்கரவாத எதிர்ப்பில் கரம் கோர்த்து செயல்பட பேச்சுவார்த்தை நடத்திய சவுதி இளவரசரும், உள்கட்டுமானத்துறை அமைச்சருமான முகமது பின் நயீப் அரச பயங்கரவாத நடவடிக்கைகளை மக்கள் மீதும், அரசியல் உரிமை, சமூக உரிமை கோரும் போராளிகள் மீதும் ஏவி விட்டுள்ளார். இத்தகைய போராட்டங்களையும், போராடும் மக்களையும் ஒடுக்கும் அரசின் பிரதிநிதியாக முகமது பின் நயீபை போராடும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மன்னர் அப்துல்லாவுக்கு அடுத்தபடியாக கருதப்படும் இவர்தான் தற்போது பொருளாதார வளர்ச்சி மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளவர்.
அமெரிக்க அடிவருடிகளான அரபு ஷேக்குகள் தங்களது குடிமக்களையும் அரசியல் உரிமைகளையும் நசுக்குவதை மேற்கத்திய நாடுகள் வரவேற்கவே செய்யும். தங்கள் நாட்டு மக்களுக்கு பத்து சதவீதம் வேலைவாய்ப்பை உறுதி செய்ய சட்டம் போட்டு முயற்சிப்பதாக காட்டிக் கொண்டாலும், எதேச்சதிகார அரசு நிர்வாகம் மூலமாக மனித உரிமைகளைப் பறிப்பதும், அரசியல் உரிமைகளை மறுப்பதும் தொடர்வது அரேபியாவில் சாத்தியமில்லைதான்.
போராடும் சவுதி அரேபிய இளைஞர்கள் அரசியல் மாற்றத்தைக் கோருகிறார்கள். அவர்களது கையில் சித்தாந்தத் தெளிவும், அதனடிப்படையிலான அமைப்பும் இல்லையென்றாலும் சர்வாதிகாரத்தை புதை குழிக்கு அனுப்ப வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கிறார்கள். இசுலாத்தின் காவலர்களாகவும், புரவலர்களாகவும் காட்டிக் கொள்ளும் சவுதி ஷேக்குகளின் வேடம் இனியும் செல்லுபடியாகாது. இசுலாமிய மத மாயைகளிலிருந்து சவுதி மக்கள் வெளியேறத்தான் போகிறார்கள். அமெரிக்க ஆதரவுடன், இசுலாத்தின் பெயரில் ஆட்டம் போடும் சவுதி ஷேக்குகளின் பயங்கரவாதம் விரைவிலேயே சவுதி மக்களால் ஒழிக்கப்படும்.
‘அரபு வசந்தம்’ இரண்டாம் பாகம் துவங்குகிறது.
- வசந்தன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக