புதன், 24 ஜூலை, 2013

இந்தியன் வயக்ரா என அழைக்கப்படும் கருங்குறுவை நெல் ! நம்மாழ்வாரின் அறிவுரை

புதுக்கோட்டை மாவட் டம் வாகைப்பட்டி கிராமத்தில் பாரம்பரிய நெல் மற்றும் சிறு தானிய விதைத் திருவிழா நடந்தது. இதில்
பங்கேற்ற இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பேசியதாவது:நமது முன்னோர்கள் எதிர்ப்பு சக்தி மிக்க, வறட்சி மற்றும் வெள்ளத்தை தாங்கி வளரக் கூடிய பல்வேறு வகையான பாரம்பரிய நெல் ரகம், சிறுதானியங்களை பயிரிட்டு நோயின்றி வாழ்ந்தனர். அவை காலப்போக்கில் அழிக்கப்பட்டுவிட்டன. நோயற்ற வாழ்வு வாழ பாரம்பரிய விவசாயத்துக்கு திரும்ப வேண்டும். குழந்தைகளின் சத்துக்குறைபாட்டை போக்குவதற்கு வீட்டுக்கு ஒரு பேரீச்சை மரம் வளர்க்க வேண்டும்.கேழ்வரகில் இரும்புச்சத்து, புரதம், லைசின், மீத்தியோனைன், சிஸ்டின் போன்ற அமினோ அமிலங்கள், காப்பர், துத்தநாகம், வைட்டமின்கள் உள்ளன. கம்பு பயிரில் நார்ச்சத்து, தாது உப்புகளும் வரகில் பாஸ்பரஸ், புரதங்களும் உள்ளன. தினையில் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் பி, சாமையில் நார்ச்சத்து, இரும்புச்சத்து, சோளத்தில் புரதம், இரும்பு, கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், தயமின் அதிகம் உள்ளன.


பாரம்பரிய நெல் ரகங்களில் மருத்துவ குணங்கள் உள்ளன. பூங்கார் ரக நெல் உடம்பில் சுரக்கும் கெட்ட நீரை வெளியேற்றும். கர்ப்பிணிகளுக்கு பத்தியக் கஞ்சியாக கொடுக்கலாம். சுகப்பிரசவத்துக்கு வழிவகுக்கும். துத்தநாக சத்து உள்ளது. மாப்பிள்ளை சம்பா நீராகாரத்தை சாப்பிட்டால் நரம்புகள் வலுப்படும். ஆண்மைத் தன்மை அதிகரிக்கும்.  சிவப்பு கவுனி இதயத்தை பலப்படுத்தும். பல் வலுவாகும். ரத்த ஓட்டம் சீராகும். மூட்டு வலி நிவர்த்தி செய்யும். குடவாழை சர்க்கரை நோய் வராமல் தடுக்கும். செரிமான பிரச்னை, வயிறு பிரச்னை குணமாகும். குறவைக்களஞ்சியம் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. கருங்குறுவை குஷ்டம், விஷத்தை நீக்கும். இழந்த சக்தியை மீட்டு தரும். இது இந்தியன் வயாகரா என்றும் அழைக்கப்படுகிறது. கருத்தக்கார் வெண்குஷ்டத்தை போக்கும். சண்டிகார் உடல் வலிமையை கொடுக்கும்.நரம்புகளை பலப்படுத்தும். தூயமல்லி, நோய்  எதிர்ப்பு சக்தி அளிக்கும். இவ்வாறு நம்மாழ்வார் கூறினார். 350க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக