செவ்வாய், 23 ஜூலை, 2013

பரிதி : தி.மு.க.வில் பேசத் தெரிந்தவர், திறமைசாலி, படித்தவர்களை ஸ்டாலினுக்கு பிடிக்காது

தி.மு.க. ஒரு டைட்டானிக் கப்பல் போன்றது” என்று கூறியுள்ள பரிதி இளம்வழுதி, “கப்பல் ஒரேயடியாக மூழ்கப்போகிறது” என்று கூறியிருக்கிறார்.
தஞ்சை, ஆபிரகாம் பண்டிதர் ரோட்டில் நடந்த அ.தி.மு.க. அரசின்
இரண்டாண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில், பேசிய அ.தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் பரிதி இளம்வழுதி, “காவிரி பிரச்னை தொடர்பாக, ஸ்டாலின் தலைமையில், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். வீட்டில் இருந்தபடி, டிவியில் இதைப் பார்த்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, கடும் கோபம் கொண்டார்.
அருகில் இருந்த என்னை பார்த்து “தி.மு.க. – எம்.எல்.ஏ.க்கள் யாருக்கும் பேசவே தெரியவில்லை. ஆமாம், நீ ஏன் இப்போதெல்லாம் சட்டசபைக்கு போவதில்லை; முன் போல பேசுவதில்லை” என்று கேட்டாரே ஒரு கேள்வி! நான் திகைத்துப் போனேன்.

கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு தோற்ற, என்னைப் பார்த்து கட்சித் தலைவரே, “ஏன் சட்டசபைக்கு போகவில்லை?” என்று கேட்டால், திகைத்துப் போகாமல் என்ன செய்வது? தமது கட்சியில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் யார் யார் என்று கூட தெரியாத தலைவராக கருணாநிதி உள்ளார்.
தமிழக மக்கள் ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை மாறிமாறி ஓட்டு போட்டு, தி.மு.க.வையும், அ.தி.மு.க.வையும் ஜெயிக்க வைப்பர். இதனால், வரும் தேர்தலிலும் ஜெயித்து விடலாம் என கருணாநிதி பகல் கனவு காண்கிறார்; ஆனால் அது நடக்காது.
தி.மு.க. ஒரு டைட்டானிக் கப்பல் போன்றது; டைட்டானிக் கப்பலையாவது திரும்பவும் கண்டுபிடித்து விட்டனர். ஆனால், தி.மு.க.வை யாராலும் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு அது ஒரே அடியாக மூழ்கப் போகிறது. தி.மு.க.வில் பேசத் தெரிந்தவர், திறமைசாலி, படித்தவர் யாராக இருந்தாலும் ஸ்டாலினுக்கு பிடிக்காது. அதனால்தான், நான் வெளியே வந்துள்ளேன்” என்றார்.
அடடா… தான் ‘பேசத் தெரிந்தவர், திறமைசாலி, படித்தவர்’ என்று பிரகடனம் செய்திருக்கிறாரே… ஒருவேளை அடுத்த தேர்தலில் இவருக்கு சீட் கொடுக்காவிட்டால், ‘பேசத் தெரிந்தவர், திறமைசாலி, படித்தவருக்கு’ அ.தி.மு.க.வில் சீட் கிடையாது என்று சொல்லி விட்டால் என்னாகும்? ஜாக்கிரதை அ.தி.மு.க.!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக