செவ்வாய், 2 ஜூலை, 2013

திவ்யா: தாயாருடன் செல்கிறேன் தாயார் சம்மதித்தால் கணவருடன் வாழ விரும்புகிறேன்

சென்னை: தர்மபுரி மாவட்டத்தில் மூன்று கிராமங்களில் தலித் மக்கள் பெரும் தாக்குதலுக்குள்ளாக வித்திட்ட காதல் திருமணம் புரிந்து கொண்ட திவ்யா, தனது தாயாருடனேயே இருக்க விரும்புவதாகவும், அதேசமயம், தனது தாயார் அனுமதித்தால், தனது காதல் கணவருடன் சேர்ந்து வாழ விரும்புவதாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். கடந்த முறை உயர்நீதிமன்றம் வந்தபோது பெரும் நெருக்குதலுக்குள்ளாக்கப்பட்டார் திவ்யா என்ற பரபரப்பு பேச்சு அடிபட்டது. அதை உறுதிப்படுத்துவது போல, தான் தனது கணவருடன் செல்ல விரும்புவதாக மட்டும் கூறி விட்டு கண்ணீர் மல்க தனது தாயாருடன் கிளம்பிப் போனார் திவ்யா. ஆனால் நேற்று வழக்கு விசாரணையின்போது தனது தாயார் விரும்பினால், அனுமதித்தால் தனது காதல் கணவருடன் சேர்ந்து வாழ விரும்புவதாக அவர் கூறியுள்ளார். இதனால் திவ்யாவின் கணவர் இளவரசன் தரப்பு சற்றே நிம்மதியடைந்துள்ளது. தர்மபுரி மாவட்டம், நாயக்கன்கொட்டாய் அருகே உள்ள நத்தம்காலனியை சேர்ந்த இளவரசன், செல்லன்கொட்டாய் பகுதியை சேர்ந்த திவ்யா ஆகியோர் கடந்த ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவரும் வெவ்வேறு சமூகங்களை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் காதல் கலப்பு திருமணத்திற்கு எதிர்ப்பு கிளம்பியது. இந்த பிரச்னை தொடர்பாக திவ்யாவின் தந்தை நாகராஜ் தற்கொலை செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் நாயக்கன்கொட்டாய் பகுதியில் உள்ள 3 கிராமங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இதற்கிடையில், நீதிமன்ற உத்தரவுபடி இளவரசனுடன், வசித்து வந்த திவ்யா கடந்த 4ம் தேதி மதியம் தர்மபுரியில் சிகிச்சை பெற்று வரும் உறவினர் ஒருவரை பார்த்து விட்டு வருவதாக கூறி சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இது பற்றி தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் இளவரசன் மற்றும் அவருடைய பெற்றோர் புகார் அளித்தனர். இதுதொடர்பாக போலீசார் பெண் மாயம் என்ற அடிப்படையில் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் மனைவி திவ்யாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கோரி கணவர் இளவரசன் சென்னை உயர் நீதிமன்றத்தி்ல் வழக்கு தொடர்ந்தார். கடந்த 6ம் தேதி நடந்த இந்த வழக்கு விசாரணையில், எனது தாய் உடல் நிலை சரியில்லாமல் இருப்பதால் அவரை பார்க்க சென்றேன் என்றும் தன்னை யாரும் அழைத்து செல்லவில்லை என்றும், நான் தற்போது தனது தாயாருடன் செல்ல விரும்புவதாகவும் திவ்யா வாக்குமூலம் அளித்தைத் தொடர்ந்து, தாயுடன் வசிக்க அனுமதி அளித்த நீதிபதி, வழக்கை 3 வாரங்களுக்கு தள்ளிவைத்தார். இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை நேற்று வந்தது. இதற்காக இளவரசன் சீக்கிரமாகவே வந்து விட்டார். ஆனால் திவ்யா வர நேரமானது. திவ்யா சொல்லப் போகும் வார்த்தையை எதிர்நோக்கி பெரும் ஆவலுடன் காத்திருந்தார் இளவரசன். பின்னர் பாமக வக்கீல்கள் புடை சூழ கோர்ட்டுக்கு வந்தார் திவ்யா. பின்னர் கோர்ட்டில் ஆஜரான திவ்யா, 'நான் என் தாயாருடன் செல்கிறேன். அதேநேரத்தில் எனது தாயார் சம்மதித்தால் எனது காதல் கணவருடன் வாழ விரும்புகிறேன் என வாக்குமூ்லம் அளித்தார். அதை நீதிமன்றம் பதிவு செய்து கொண்டது.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக