ஞாயிறு, 28 ஜூலை, 2013

விஜயகாந்த் BJP யுடன் ரகசிய பேச்சுவார்த்தை ! காங்கிரசிடம் அரசியல் படித்ததால் இந்த முடிவு ?

ராஜ்யசபா தேர்தலில் காங்.,கட்சியிடம் ஏமாந்த தே.மு.தி.க., தலைமை, 
லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுடன் கூட்டணி அமைப்பதற்கான ரகசிய பேச்சு வார்த்தையை துவங்கியுள்ளது.கடந்த, 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தல் முதல், உள்ளாட்சி தேர்தல், பல தொகுதி சட்டசபை இடைத் தேர்தல்களை தனித்து சந்தித்த தே.மு.தி.க., கடந்த, 2011 சட்டசபை தேர்தலில், முதல் முறையாக, அ.தி.மு. க.,வுடன் கூட்டணி அமைத்தது. தே.மு.தி.க., எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது. அதன்பின், உள்ளாட்சி தேர்தலில், ஏற்பட்ட கூட்டணி முறிவுக்கு பின், இவ்விரு கட்சிகளும், எலியும், பூனையுமாக இருந்து வருகின்றன. ஆஹா இதைத்தான்யா எதிர்பார்த்தோம்.
 தே.மு.தி.க., - எம்.எல். ஏ.,க்கள் ஏழு பேரையும், தங்கள் பக்கம் அ.தி.மு.க., இழுத்துள்ளது. இந்த நிலையில், சமீபத்தில் நடந்த ராஜ்யசபா தேர்தலில், கனிமொழியை வேட்பாளராக அறிவித்த தி.மு.க., தலைமை, தே.மு.தி.க., ஆதரவை பெற தீவிர முயற்சிகளை மேற்கொண்டது. வேட்பாளரை விஜயகாந்த் வீட்டிற்கே அழைத்துச்சென்று, அவரது ஆசியை பெறுவதற்கும் தி.மு.க., முக்கியப் புள்ளிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், கடந்த ஆட்சிக்காலத்தில், அக்கட்சியால் ஏற்பட்ட கசப்புணர்வை மறக்காத விஜயகாந்த், தி.மு.க., விற்கு ஆதரவளிப்பதை தவிர்த்துவிட்டார்.

காங்., ஆதரவை பெறுவதற்கான தீவிர முயற்சியில் தே.மு.தி.க., தலைமை இறங்கியது. ஆனால், கடைசி நேரத்தில், காலை வாரிய காங்., கட்சி, தன் பழைய நண்பனான தி.மு.க.,விற்கு ஆதரவு தெரிவித்தது. இதனால், தே.மு.தி.க.,வின் வெற்றி கனவு கலைந்தது. ராஜ்யசபா தேர்தலில், காங்., ஆதரவு கிடைத்தால், அதை வைத்து, அடுத்தாண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில், புது கூட்டணி அமைக்கலாம் என்று தே.மு.தி.க., தலைமை திட்டம்போட்டிருந்தது. ஆனால், காங்., கைவிரித்ததால், ஆரம்பக் கட்டத்திலேயே அத்திட்டம் நின்று போனது.நம்ப வைத்து ஏமாற்றிய காங்., கட்சியை நம்பினால், லோக்சபா தேர்தலிலும், இதே நிலைதான் ஏற்படும் என, தே.மு.தி.க., நிர்வாகிகள் பலரும் கருத துவங்கியுள்ளனர். அதனால், பா.ஜ.,வுடன் இணைந்து லோக்சபா தேர் தலை சந்திக்க, அக்கட்சி தயாராகி வருகிறது. மோடியுடன் பேச்சு :பா.ஜ., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான மோடியிடம் இந்த பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்படுகிறது. பா.ஜ., கூட்டணியில் தே.மு.தி.க., இணைவதற்கு மகிழ்ச்சி தெரிவித்த அவர், இதுதொடர்பாக தொடர்ந்து பேசுவோம் என்று மட்டும் கூறியதாக கூறப்படுகிறது. தமிழக முதல்வருடன், அவர் நட்புறவில் உள்ளதால், இங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்த பிறகே, கூட்டணி தொடர்பான முடிவை எடுப்பதற்காக, அவர் திட்டமிட்டு உள்ளதாக தெரிகிறது.அதே நேரத்தில், தமிழக பா.ஜ., நிர்வாகிகள் தரப்பில், தே.மு.தி.க., மட்டுமின்றி ம.தி.மு.க., - பா.ம.க., மற்றும் சிறிய கட்சிகளை இணைத்து, புதிய கூட்டணி அமைக்க முயற்சி நடக்கிறது. ஆனால், இம்மூன்று கட்சிகளும், ஒன்றோடு ஒன்று இணைவதில், பல்வேறு சிக்கல்கள் உள்ளன. அதனால், அவற்றை சரி செய்து, முதற்கட்ட பணிகளை தமிழக பா.ஜ.,வினர் துவங்கி உள்ளதாக தெரிகிறது. இந்த, கூட்டணி முயற்சிகளுக்கான, விடை விரைவில் தெரியவரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

- நமது நிருபர் -dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக