புதன், 3 ஜூலை, 2013

சவுதி: நாடுதிரும்ப வேண்டிய கால அவகாசம் 4 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது

ரியாத்: சவுதி அரேபியாவில், புதிய சட்டத்தின் காரணமாக, வேலை
வாய்ப்புகளை இழந்த இந்தியர்கள், நாடு திரும்புவதற்குரிய கால அவகாசம், மேலும் நான்கு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.சவுதி அரேபியாவில், "நிதாகத்' என்ற பெயரில் புதிய சட்டத்தை, சவுதி அரேபிய அரசு, கடந்த மார்ச் மாதம் அமல்படுத்தியது. புதிய சட்டப்படி, வெளிநாட்டினர் நடத்தும் நிறுவனங்களில், அந்நாட்டைச் சேர்ந்த ஒருவரையாவது வேலைக்கு நியமிக்க வேண்டும்,
என்ற நிபந்தனை விதிக்க பட்டுள்ளது. புதிய சட்டத்தால், ஐந்து லட்சம் இந்தியர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. புதிய சட்டத்தின் படி, வேலையை தக்க வைத்து கொள்ளவும், முடியாதவர்கள், விரைவில் நாடு திரும்பவும், உரிய ஏற்பாடுகளை செய்து கொள்ள, மூன்று மாதம் அவகாசம் அளிக்கப்பட்டது. இந்த அவகாசம், இன்றோடு முடிகிறது. பல ஆயிரம் வெளிநாட்டு தொழிலாளர்கள், உரிய ஆவணங்கள் இன்றி, தாயகம் திரும்ப முடியாமல் தத்தளித்து வருகின்றனர்.
இதனால், சம்பந்தப்பட்ட நாடுகளின் அரசு பிரதிநிதிகள், இந்த கால அவகாசத்தை நீட்டிக்கும் படி, சவுதி அரசை வற்புறுத்தினர். இதையடுத்து, சவுதி மன்னர் அப்துல் அஜிஸ், வரும் நவம்பர், 4ம்தேதி வரை, கால அவகாசத்தை நீட்டித்து உத்தரவிட்டு உள்ளார்.
அதற்குள், வெளிநாட்டு தொழிலாளர் உரிய ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், அபராதம், சிறை தண்டனை போன்றவற்றை சந்திக்க வேண்டும், என சவுதி அரசு எச்சரித்துள்ளது. இந்தியர்களுக்கு உதவுவதற்காக, அங்குள்ள இந்திய தூதரகத்தில் தனிப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. புதிய சட்டத்தின் படி, சவுதியில் தொடர்ந்து தங்கியிருக்க தகுதியில்லாத, 75 ஆயிரம் இந்தியர்கள் நாடு திரும்ப விண்ணப்பித்திருந்தனர். இதில், 65 ஆயிரம் பேருக்கு, தாயகம் திரும்புவதற்குரிய ஆவணங்கள் அளிக்கப்பட்டுள்ளன. சவுதியில் தொடர்ந்து வேலை பார்ப்பதற்குரிய மாற்று ஏற்பாடுகளை செய்வதற்காக, இன்னும் பல இந்தியர்கள் காத்து இருக்கின்றனர். 4 மாத கால அவகாச நீட்டிப்பு, அவர்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது. dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக