புதன், 3 ஜூலை, 2013

பா.ம.க.,வினர் மீது 1,000 வழக்குகள் ! பொது சொத்து சேதம்

சென்னை: பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியது தொடர்பாக, பா.ம.க.,வினர் மீது, ஆயிரத்துக்கும் மேலான வழக்குகள் போடப்பட்டுள்ளன. தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைதாகி புழல் சிறையில் உள்ள, குரு எம்.எல்.ஏ., பஸ் உடைப்பு வழக்கில் நேற்று நேரில் ஆஜரானார்.சென்னையை அடுத்த, மாமல்லபுரத்தில், ஏப்., 25ம் தேதி நடந்த வன்னியர் இளைஞர் பெருவிழாவிற்குச் சென்றோருக்கும், மற்றொரு பிரிவினருக்கும் மரக்காணத்தில் மோதல் நடந்தது. இதில், போலீஸ் நடவடிக்கையைக் கண்டித்து, தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டார். இதைக் கண்டித்து, வட மாவட்டங்களில், வன்முறை சம்பவங்கள் நடந்தன. 800க்கும் மேலான அரசு, தனியார் பஸ்கள் நொறுக்கப்பட்டன; 15க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிக்கப்பட்டன; மூவர் இறந்தனர்.
இந்நிலையில், "தமிழ்நாடு சொத்துக்கள் (சேதம் மற்றும் இழப்பு தடுப்பு) சட்டம் 1992'ன்படி, இழப்பீட்டுத் தொகையை, பா.ம.க.,வினரிடமிருந்து பெறும் முயற்சியை அரசு முடுக்கி விட்டது. பல்வேறு துறைகள், தனியாரிடமிருந்தும் பெறப்பட்ட புகார்கள் பெறப்பட்டன. சேத மதிப்பு, 80 முதல் 100 கோடி வரை இருக்கலாம் என, கூறப்படுகிறது. வருவாய்த்துறை நிர்வாக ஆணையருக்கு, சிவில் நீதிபதிக்கான அதிகாரம் வழங்கப்பட்டு, பா.ம.க.,வினருக்கு, நோட்டீஸ் அனுப்பியதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் விசாரணை தொடங்கியது. நேற்று, சென்னை மாநகர போக்குவரத்துத் துறையின், 59 வழக்குகள், வருவாய் நிர்வாக ஆணையர் ஸ்ரீதர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைதாகி, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த, வன்னியர் சங்க மாநிலத் தலைவர் குரு எம்.எல்.ஏ., போலீஸ் பாதுகாப்புடன் நேற்று, விசாரணைக்கு ஆஜரானார். இதுதவிர, பா.ம.க,வினர், 30 பேர் ஆஜராகி, வக்காலத்து பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை, இந்த மாதம், 30ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. டாஸ்மாக் சேதம் தொடர்பான, 28 வழக்குகள் விசாரணையும் அன்றைய தினம் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

1,000 வழக்குகள்:

வருவாய்த்துறை நிர்வாக ஆணையர் ஸ்ரீதர் கூறியதாவது: போக்குவரத்து, நெடுஞ்சாலை, டாஸ்மாக், போலீஸ், வருவாய்த்துறைகள் மட்டுமின்றி, தனி நபர்களும் புகார் கொடுத்துள்ளனர். பொதுச் சொத்துக்கள் (சேதம், இழப்பு தடுப்பு) சட்டத்தின் கீழ், பா.ம.க., நிர்வாகிகள் மீது, ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளின் கீழ், சேதம், இழப்புக்கு ஏற்ப அபராதம் விதிக்கலாம்; தண்டனை விதிக்க முடியாது. வழக்குகள் விசாரணையை, மூன்று மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக