செவ்வாய், 16 ஜூலை, 2013

குஜராத் ஒளிரவில்லை கல்வியில் 14வது இடத்தில் ! மோடி 10 ஆண்டுகளாக முதல்வராக உள்ளார்.

புதுடில்லி:பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட உள்ள, குஜராத் முதல்வர், நரேந்தி மோடி, மத்திய அரசையும், காங்கிரசையும், போகும் இடமெல்லாம் வசை பாடி வருகிறார்; உணவு பாதுகாப்பு மசோதா குறித்து, கேள்வி எழுப்பி வருகிறார். இந்நிலையில், மோடிக்கு எதிராக, காங்கிரஸ் தலைவர்களும் பதில் கொடுத்து வருகின்றனர் பாரதிய ஜனதாவின், லோக்சபா தேர்தல் பிரசாரக் குழு தலைவராகி, பிரதமர் வேட்பாளராவதற்கு அனைத்து நிலைகளிலும் முன்னிறுத்தப்பட்டு வரும் குஜராத் முதல்வர், நரேந்திர மோடி, போகும் இடமெல்லாம், மத்திய அரசை வசை பாடி வருகிறார். உணவு பாதுகாப்பு மசோதாவை, அவசர அவசரமாக அறிமுகப்படுத்த வேண்டியதன் காரணம் என்ன என, கேள்வி எழுப்பி இருந்தார்.சமீபத்தில், கல்லூரி விழா ஒன்றில் பேசிய மோடி, "நாடு முன்னேற, கல்விக்கு அதிகம் செலவிட வேண்டும்' என, மத்திய அரசுக்கு அறிவுரை வழங்கியிருந்தார். மோடியின் இந்த பேச்சுகளுக்கு, காங்கிரஸ் தரப்பில் இருந்து, கடும் கண்டனம் கிளம்பியுள்ளது. காங்கிரஸ் தலைவர்கள், மோடியை, பல வழிகளில் வறுத்தெடுக்கத் துவங்கியுள்ளனர்.
நல்ல குறிக்கோள்: காங்., பொதுச் செயலர் திக்விஜய் சிங் இது தொடர்பாக கூறியதாவது:ஐ.மு., கூட்டணி அரசு கொண்டு வந்துள்ள, உணவு பாதுகாப்பு மசோதாவை வைத்து அரசியலாக்குவதை, மோடி நிறுத்த வேண்டும்; உணவு பாதுகாப்பு மசோதாவின் முக்கிய நோக்கமே, ஏழை மக்களுக்கு உணவுப் பொருட்கள் போய் சேர வேண்டும் என்பதே.நல்ல குறிக்கோளுக்காக அவசர சட்டமாக அமல்படுத்தப்பட்டுள்ள மசோதாவை, அரசியலாக்காமல் இருக்க வேண்டும். மதச்சார்பின்மை பற்றி காங்கிரஸ் தெளிவுப்படுத்தி விட்டது; ஆனால், பா.ஜ., தொடர்ந்து அதற்கு வெவ்வேறு அர்த்தம் கற்பித்து வருகிறது. இதற்குரிய உண்மையான அர்த்தமாக, எதை சொல்ல வேண்டும் என, எதிர்பார்க்கின்றனர் என்பது தெரியவில்லை.இவ்வாறு திக்விஜய் சிங் கூறினார்.விளையாட்டில் சொதப்பல்:
காங்கிரஸ் மீடியா பொறுப்பாளராக உள்ள, மத்திய விளையாட்டுத் துறை முன்னாள் அமைச்சர், அஜய் மேக்கன் கூறியதாவது:
மக்கள் மத்தியில் சிலர், தவறான கருத்துக்களை கூறி வருகின்றனர். பொது மக்கள், இரு தரப்பு கருத்துக்களையும் கேட்க வேண்டும். இந்நிலையில், எங்கள் தரப்பு கருத்துகளை, விளக்க வேண்டிய உரிமை உள்ளது. கல்விக்கு, மத்திய அரசு ஒன்றும் செய்யவில்லை என, மோடி கூறயிருக்கிறார். இதில், சிறிதும் உண்மை இல்லை; குஜராத்தில், பள்ளி, கல்லூரிகளில், ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. குஜராத்தில், கல்வி அறிவு பெற்ற பெண்கள், குறைவாக உள்ளனர். கல்வி வளர்ச்சியில், குஜராத், 14வது இடத்தில் உள்ளது.மோடி, 10 ஆண்டுகளாக, குஜராத்தில் முதல்வராக உள்ளார். இந்த கால கட்டத்தில், குஜராத்தில் இருந்து, எந்த இளைஞராவது, ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளாரா? தேசிய விளையாட்டுப் போட்டிகளில் வழங்கப்பட்ட, 1,000 தங்கப் பதக்கங்களில், குஜராத், ஏழு மட்டுமே பெற்றுள்ளது. சண்டிகார் கூட, 10 தங்கப் பதக்கங்களை பெற்றுள்ளது. ஐ.மு., கூட்டணி அரசு செய்த சாதனைகளை குறை கூறுவதற்கு முன், தே.ஜ., கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, என்ன நிலைமை என்பதை ஒப்பிட்டு பார்த்துவிட்டு, மோடி பேச வேண்டும்.இவ்வாறு மேக்கன் கூறினார்.

ராமர் கோவில்:

மத்திய கம்பெனிகள் விவகாரத் துறை இணை அமைச்சர், சச்சின் பைலட் கூறியதாவது:மத்திய அரசின் அனைத்து திட்டங்களும், பொதுமக்களின் நலன் கருதியே அமல்படுத்தப்படுகின்றன. ராமர்கோவில் - பாபர் மசூதி விவகாரத்தை, இந்திய மக்கள் பின்னுக்கு தள்ளிவிட்டனர்; ஆனால், பா.ஜ., மட்டும், தேர்தலின் போது அதை ஞாபகபடுத்த தவறுவதில்லை. குறைந்த விலையில் ஏழைகளுக்கு உணவுப் பொருட்களை வழங்குவதை பற்றி, எதிர்க்கட்சிகள் கவலை கொள்வது ஏன்? இது தவறு என்று எந்த கட்சியாவது தைரியமாகக் கூற முடியுமா?இவ்வாறு சச்சின் பைலட் கூறினார்.

ராகுலை பிரதமர் வேட்பாளராக்குவது குறித்து, இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இருந்தாலும், அவர் பிரதமர் வேட்பாளராவதற்கான வாய்ப்பு இல்லை என, கூறமுடியாது. ராகுலை பிரதமர் வேட்பாளராக்குவது குறித்து முடிவு எடுக்கும் போது, அதுபற்றி மீடியாக் களுக்கு தெரிவிக்கப்படும்.அஜய் மேக்கன்காங்., பொதுச் செயலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக