சனி, 27 ஜூலை, 2013

100 கோடிக்கு உதயம் காம்ப்ளெக்ஸை வாங்கியது சத்யம்?

சென்னை: சென்னையின் பெரிய திரையரங்குகளில் ஒன்றான உதயம் காம்ப்ளெக்ஸை ரூ 100 கோடிக்கு சத்யம் சினிமாஸ் வாங்கியுள் உளதாக தகவல் வெளியாகியுள்ளது. எண்பதுகளில் கட்டப்பட்ட மிக முக்கியமான தியேட்டர் காம்ப்ளெக்ஸ் உதயம். தென் சென்னை மக்களுக்கு பல நல்ல சினிமாக்கள் பார்க்கும் வாய்ப்பை வழங்கிய இந்த அரங்கம், கடந்த சில ஆண்டுகளாக நிர்வாகப் பிரச்சினையில் சிக்கியுள்ளது. இந்த காம்ப்ளெக்ஸில் உதயம், மினி உதயம், சூரியன், சந்திரன் என நான்கு அரங்குகள் உள்ளன. மொத்தம் 2198 பேர் படம் பார்க்க முடியும். இவற்றுக்கு உரிமையாளர்கள் மொத்தம் 53 பேர். 6 குடும்பங்களைச் சேர்ந்த இவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டு நீதிமன்றத்துக்குப் போனார்கள். இந்த சொத்தை விற்க ஒரு குழு அமைக்கப்பட்டது. நகரின் பிரதான இடத்தில் அமைந்துள்ள இந்த தியேட்டரை வாங்க ஏராளமான நிறுவனங்கள் போட்டி போட்டன. கடைசியில் சத்யம் சினிமாஸ் இதனை ரூ 100 கோடிக்கு பேசி முடித்துவிட்டதாகத் தெரிகிறது. சத்யம் சினிமாஸ் சென்னை அண்ணா சாலையை ஒட்டி 4 தியேட்டர்களுடன் ஸ்ரீகாம்ப்ளெக்ஸ் என்ற பெயரில் ஆரம்பமானது. பின்னர் அதில் தியேட்டர்கள் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது (சத்யம், சாந்தம், செரீன், சீஸன்ஸ், ஸ்டுடியோ 5, சிக்ஸ் டிக்ரீஸ்). அடுத்து எஸ்கேப் அவென்யூவில் எட்டு திரையரங்குகளை கையகப்படுத்தியது. பின்னர் பெரம்பூரில் எஸ் 2 என்ற பெயரில் 5 திரையரங்குகளையும், திருவான்மியூர் தியாகராஜாவை புதுப்பித்து எஸ் 2 தியாகராஜா என்ற பெயரில் 2 அரங்குகளையும் உருவாக்கியுள்ளது சத்யம். அடுத்து போரம் மாலில் 11 அரங்குகள், பீனிக்ஸ் மாலில் 11 திரையரங்களை தொடங்கத் திட்டமிட்டுள்ளது. நடிகர் சங்க வளாகத்தில் 8 அரங்குகளை உருவாக்கத் திட்டமிட்டு, நீதிமன்ற வழக்கு காரணமாக அப்படியே நிற்கிறது. ஓஎம்ஆர், கிழக்கு கடற்கரைச் சாலை மற்றும் வண்டலூர் பகுதிகளிலும் புதிய பலதிரை அரங்குகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது சத்யம்.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக