வியாழன், 20 ஜூன், 2013

திமுகவுக்கு பிடிகொடுக்காத அன்புமணி ! விஜயகாந்தின் பொறியில் பாமக

மு.க.ஸ்டாலின் அன்புமணியை சந்தித்து ஆதரவு கேட்டார்.
சந்திப்பின்போது அன்புமணி அன்பொழுக பேசி 21ந்தேதி கட்சியின் செயற்குழு கூட்டம் உள்ளது.   அங்கு முடிவு எடுத்து திமுகவுக்கு ஆதரவு தர முயற்சி செய்கிறோம் என சொன்னதாக கூறப்படுகிறது. பாமகவின் வாக்கு தங்களுக்கு தான் என திமுக தரப்பு சந்தோஷமாக இருந்த நிலையில் பாமக பின் வாங்க தொடங்கியுள்ளது. அதாவது, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் பகுதியில் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு இருக்கும் அன்பு மணிராமதாஸ் செய்தியாளர்களிடம், இனி திராவிட கட்சிகளுடன் கூட்டணியில்லை என்பதில் உறுதியாக உள்ளோம் எனச்சொல்லியுள்ளார். அப்போது மாநிலங்களவை தேர்தலில் பாமகவின் நிலைப் பாடு என்னவென கேட்ட செய்தியாளர்களிடம், நாளை செயற்குழு கூட்டத்துக்குபின்பே முடிவு அறிவிக் கப்படும் என்றுள்ளார். செய்தியாளர்கள் சென்றபின் நெறுங்கிய கட்சியினர், திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை எனச் சொல்லிவிட்டு இப்போது திமுகவை ஆதரித்தால் மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்களே என்றுள்ளனர்.
அவர்களிடம் அன்புமணி,  மாநிலங்களவை தேர்தலை புறக்கணிக்கும் முடிவை எடுத்துள்ளோம்.  இதுதான் நாளைய செயற்குழு கூட்டத்தில் அறிவிக்கப்படும் என்றுள்ளார். அன்புமணிராமதாஸ் சேலத்தில் இருந்து இன்று மதியம் சென்னைக்கு புறப்பட்டுள்ளார். தேர்தல் புறக்கணிப்பு என்பதை சொல்லியிருக்கலாமே, ஸ்டாலினை வரவழைத்து நம்பிக்கை சொன்னவர்,  பின் எதனால் இப்போது பின்வாங்குகிறார் என தகவல் சொன்னவரிடம் கேட்டபோது, திராவிட கட்சிகள் எதுவும் உங்களை தேடி வரவில்லை என சமீபத்தில் ஒரு பேட்டியில் ஸ்டாலின் பாமகவை விமர்சித் திருந்தார். அதை மனதில் வைத்திருந்த அன்புமணி, ஸ்டாலின் ஆதரவு கேட்க வருகிறார் என்றதும் வரச்சொன்னார் அவ்வளவே. இப்போது எங்களை தேடி திமுக வந்தது என்ற ரெக்கார்டை உருவாக்கவே அன்புமணி இதனை செய்தார். அவரிடம் பேசும்போது எங்களிடம் இதனை குறிப்பிட்டார் என்றார்.அரசியல் நோக்கர்களோ, விஜயகாந்த் கட்சி வடமாவட்டங்களில் தான் செல்வாக்கோடு உள்ளது. அதை தடுக்க வேண்டும், விஜயகாந்த் அதிகாரத்தை குறைக்க வேண்டும் என்றால் பாமக திமுகவை ஆதரிக்க வேண்டும். அப்போது தான் பாமகவுக்கு எதிர்காலம். அதைவிட்டுவிட்டு தேர்தல் புறக்கணிப்பு செய்தால் மதிமுகவுக்கு ஏற்பட்ட நிலைமை தான் ஏற்படும் என்கிறார்கள்.
பாமகவின் முடிவு அடிக்கடி மாறும் என்பதால் திமுக தரப்பில் நம்பிக்கையோடு பேச்சுவார்த்தையை நடத்திக்கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது.
மாற்றம் வருமா? அல்லது பாமகவின் புறக்கணிப்பு உறுதிதானா? என்பது நாளை மதியம் தெரிந்துவிடும்.
 - ராஜா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக