வியாழன், 20 ஜூன், 2013

கனிமொழிக்கு புதிய தமிழகம் ஆதரவு ! டாக்டர் கிருஷ்ணசாமி அறிவிப்பு

டெல்லி மேல்-சபை தேர்தலில் 6 இடங்களுக்கு 7 பேர் போட்டியிடுகிறார்கள்.
அ.தி.மு.க. சார்பில் 4 பேரும், அதன் ஆதரவுடன் இந்திய கம்யூனிஸ்டும் போட்டியிடுகிறது. அ.தி.மு.க. கூட்டணியில் 170 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதால் 5 பேரும் வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது. மீதம் உள்ள ஒரு இடத்துக்கு தி.மு.க. சார்பில் கனிமொழியும், தே.மு.தி.க. சார்பில் இளங்கோவனும் மனு செய்துள்ளனர். இந்த இரு கட்சிகளுக்கும் போதிய ஆதரவு இல்லாததால் மற்ற கட்சிகளின் ஆதரவை திரட்டி வருகிறார்கள். அ.தி.மு.க. கூட்டணியில் இருந்த மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏக்கள் ஜவாஹிருல்லா, அஸ்லம் பாஷா ஆகியோர் நேற்று தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து இந்த நிலையில் இன்று புதிய தமிழகம் கட்சியும் கனிமொழிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. அந்த கட்சியின் தலைவரும், எல்.எல்.ஏ.வுமான டாக்டர் கிருஷ்ணசாமி, மற்றொரு எம்.எல்.ஏ.வான நிலக்கோட்டை ராமசாமி ஆகியோர் இன்று பகல் 12.30 மணிக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதியை சி.ஐ.டி.காலனியில் உள்ள வீட்டில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். அப்போது தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், கனிமொழி ஆகியோரும் உடன் இருந்தனர்.


சந்திப்புக்குப் பின் டாக்டர் கிருஷ்ணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

டெல்லி மேல்-சபை தேர்தலில் 6-வது எம்.பி.யை தேர்வு செய்வதற்கான போட்டியில் கனிமொழிக்கு ஆதரவு அளிப்பது என்று புதிய தமிழகம் கட்சி முடிவு செய்துள்ளது. எங்கள் கட்சியின் 2 வாக்குகள் வீணாகி விடக்கூடாது என்பதற்காக நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம்.

அ.தி.மு.க. சார்பில் 4 பேரும், அ.தி.மு.க.வின் எஞ்சிய வாக்குகள் மூலம் இந்திய கம்யூனிஸ்டு டி.ராஜாவும் வெற்றி பெறும் நிலையில் உள்ளனர். இதனால் அ.தி.மு.க.வுக்கு எங்கள் வாக்கு தேவையில்லாமல் போய்விட்டது. எனவே கனிமொழிக்கு வாக்களிக்க முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து அவரிடம் நிருபர்கள் 'நீங்கள் அளித்துள்ள ஆதரவு பாராளுமன்ற தேர்தல் கூட்டணிக்கு அச்சாரமாக அமையுமா என்று கேட்டதற்கு, தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ளது. இப்போது அதுபற்றிய பேச்சே எழவில்லை என்று கிருஷ்ணசாமி கூறினார்.

மேலும் அ.தி.மு.க. கூட்டணியில் நீடிக்கிறீர்களா? என்று கேட்டதற்கு அ.தி.மு.க.வுக்கு எங்கள் வாக்கு தேவையில்லை என்ற நிலையில்தான் தி.மு.க.வை ஆதரிக்கிறோம். அதற்கு மேல் எதுவும் சொல்ல முடியாது என்றார்.

புதிய தமிழகம் ஆதரவின் மூலம் தி.மு.க.வின் பலம் 27 ஆக உயர்ந்துள்ளது. வெற்றிக்கு இன்னும் 7 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை. 3 எம்.எல்.ஏ.க்களை கொண்ட பா.ம.க. நாளை நடைபெறும் செயற்குழுவில் தனது ஆதரவு யாருக்கு என்பதை முடிவு செய்கிறது.

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணியை மு.க.ஸ்டாலின் சந்தித்து ஆதரவு கேட்டுள்ளார். அதனால் தி.மு.க.வை பா.ம.க. ஆதரிக்கலாம் என்று கூறப்படுகிறது. என்றாலும் தி.மு.க.வுக்கு மேலும் 4 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவைப்படுகிறது. மனுக்களை வாபஸ் பெற இன்று கடைசி நாளாகும். 3 மணியுடன் வாபஸ் முடிகிறது. அதன்பிறகு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும் maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக