சனி, 29 ஜூன், 2013

செயற்கை அருவியை உருவாக்கி பணம் வசூலிக்கும் கும்பல்

நெல்லை மாவட்டம், செங்கோட்டை அருகே மேக்கரை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் இருந்து சுமார் 2 கி.மீட்டர் தூரத்தில் அடவிநயினார் கோவில் அணை உள்ளது.மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள மேக்கரை கிராமத்தில் ஒரு கி.மீட்டர் இடைவெளியில் எருமைச்சாவடி, குறவன்பாறை என இரண்டு ஆறுகள் ஓடுகின்றன. இவை 20 அடி அகலம் கொண்டவை. இந்த ஆறுகள் மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி மேக்கரை, அச்சன்புதூர், இடைகால், சாம்பவர்வடகரை, சுரண்டை, வீ.கே.புதூர் வழியாக 50 கி.மீட்டர் வரை பயணித்து சிற்றாற்றில் கலக்கிறது.இந்த இரண்டு ஆறுகளில் வருடம் முழுவதும் தண்ணீர் ஓடுவது சிறப்பு. கடந்த ஆண்டு ஏற்பட்ட வறட்சியின்போது இங்கு தண்ணீர் வற்றாது ஓடியது குறிப்பிடத்தக்கது. வறட்சி காலங்களில் இந்த ஆறுகளில் இருந்து மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்து பக்கத்து கிராம விவசாய பணிகளுக்கும், குடிநீருக்கும் பயன்படுத்துவது வழக்கம். இப்பகுதி மக்கள் குடிநீர், விவசாயம் மற்றும் குளிப்பதற்கு இந்த ஆறுகளின் தண்ணீரை பயன்படுத்துகின்றனர்.


 விவசாயத்தையே முக்கிய தொழிலாக கொண்ட மேக்கரை பகுதி நிலங்களில் மரவள்ளி கிழங்கு, நெல், தென்னை, வாழை உள்ளிட்டவை பயிரிடப்படுகின்றன. இந்நிலையில் மேக்கரை கிராமம் அருகே சில தனிநபர்கள் எருமைச்சாவடி, குறவன்பாறை ஆறுகளுக்குள் தடுப்பணை போல் சுமார் 12 அடி உயரத்திற்கு காங்கிரீட் சுவர் எழுப்பி உள்ளனர்.மேலும் சுவரின் கீழ் பகுதியில் கற்களால் தளம் அமைத்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து பாறைகளை உடைத்து எடுத்து வந்து காங்கிரீட் சுவரும், தளமும் அமைத்துள்ளனர். அடவிநயினார் அணைக்கு சுற்றுலா பயணிகள் அதிகம் வருவது வழக்கம். மேலும் இந்த வழியாக கேரளாவுக்கு அதிக வாகனங்கள் சென்று வருகின்றன. இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளிடம் இப்பகுதியில் உள்ள ஆறுகளில் இரண்டு அருவிகள் இருப்பதாக கூறி  அழைத்து வருகின்றனர்.

இதற்காக இரு சக்கர வாகனத்திற்கு பார்க்கிங் கட்டணமாக ரூ.5ம், ஆட்டோவுக்கு ரூ.10ம், காருக்கு ரூ.20, வேனுக்கு ரூ.30, பஸ்சுக்கு ரூ.50 என வசூல் செய்கின்றனர். மேலும் அங்கேயே ஆயில் மசாஜ் சென்டரும் தொடங்கி உள்ளனர். இதுகுறித்து மேக்கரை கிராம மக்கள் கூறுகையில், வறட்சி காலத்திலும் இப்பகுதி செழுமையாக இருப்பதற்கு எருமைச்சாவடி ஆறும், குறவன்பாறை ஆறும் தான் காரணம். இங்கு  வருடம் முழுவதும் தண்ணீர் ஓடும். இந்த இரண்டு ஆறுகளையும் மறித்து தடுப்பணை போல் சுவர் எழுப்பி, அதை அருவியாக மாற்றி சிலர் அடாவடி வசூலில் ஈடுபடுகின்றனர். இதற்காக அவர்கள் மேற்கு தொடர்ச்சி மலையை உடைத்து கற்களை எடுத்துள்ளனர். இதனால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தடுப்பணைகளை அகற்றி சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.dinakaran.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக