சனி, 29 ஜூன், 2013

வேர்களை வெளிச்சமிட்டுக் காட்டிய கலைஞன் பாரதிராஜாவின் வாழ்க்கை சிறுகுறிப்புக்கள்


 தமிழ் சினிமாவைப் புதிய திசைக்கு செலுத்திய இயக்குநர் பாரதிராஜாவின்
பெர்சனல் பக்கங்கள்..
பாரதிராஜா அல்லிநகரத்தில் பிறந்தது 1941-ல் பெரிய சம்சாரிக் குடும்பம். அக்கா இரண்டு பேர், அண்ணன்கள் இருவர், ஒரு தம்பி, ஒரு தங்கை எனப் பெரிய குடும்பம். பெரிய மாயத்தேவர் – கருத்தம்மாவின் ஜந்தாவது வாரிசு!சினிமாவுக்கு வருவதற்கு முன் `ஊர் சிரிக்கிறது’ `அதிகாரம்’ `சும்மா ஒரு கதை’ என நாடகங்கள் எழுதி திருவிழா காலங்களில் இயக்கி நடித்திருக்கிறார். பிறகு தான், புட்டண்ணா கனகலிடம் சினிமா கற்றார்!
சென்னையில் ஆரம்பத்தில் சேர்ந்து தங்கியிருந்த நண்பர்கள் இளையராஜா, கங்கை அமரன், ஆர்.செல்வராஜ், கச்சேரித் தெருவில் சிறு வீட்டில் இருந்து இவர்களின் பயணம் தொடங்கியது. இப்பவும் கூடிப் பேசினால் அவர்களின் அனுபவங்கள் மேலே விரிந்து பரவும்!


;இது வரை தமிழில் 31 படங்களும், தெலுங்கில் நான்கு படங்களும், இந்தியில் நான்கு படங்களும் இயக்கியிருக்கிறார் !

பாரதிராஜா அறிமுகப்படுத்திய புதுமுகங்கள், பாக்யராஜ், ராதிகா, விஜயன், நிழல்கள் ரவி, கார்த்திக் ராதா, ரேவதி,பாபு, நெப்போலியன், ரஞ்சிதா என நீளும்.
அவரது உதவியாளர்கள் சினிமாவில் ஆதிக்கம் செய்த வரலாறும் அதிகம்! சுடச்சுட சமைத்த நாட்டுக் கோழிக் குழம்புக்கு பாரதிராஜா அடிமை. நண்பர்களை ஞாயிற்றுக்கிழமை விருந்துக்கு அழைத்து உண்டு, பேசிச் சிரித்து மகிழ்வார்!

பாரதிராஜாவின் படைப்புலக வெற்றிக்கு தேசிய விருது, தமிழக அரசு விருது, ஆந்திர அரசு விருது, பத்மஸ்ரீ, கலைமாமணி, டாக்டர் பட்டம் என ஏராளமாகப் பெற்றிருக்கிறார்!
;பாரதிராஜாவுக்கு அப்போது பிடித்த நடிகர் சிவாஜி, இப்போது ஆல் டைம் ஃபேவரைட் கமல் தான். இன்றைக்கும் வெளியிட்டால் பரபரப்பாக ஓடுகிற படமாக `16 வயதினிலே’ தான் இருக்கிறது!

மனைவி சந்திரலீலா, மாமன் மகள்தான், மனோஜ் கே.பாரதி, ஜனனி ஜ்ஸ்வர்யா என இரண்டு குழந்தைகள். ஜனனி திருமணமாகி சிங்கப்பூர் போய் விட மனோஜ் டைரக்டராகும் தீவிரத்தில் இருக்கிறார்!பாரதிராஜாவின் படங்களில் அவருக்கே பிடித்தது `16 வயதினிலே’, `முதல் மரியாதை’, `வேதம் புதிது’, ஆத்ம திருப்தியாகப் பிடித்தது `காதல் ஓவியம்’, இனி எடுக்க இருக்கிற `அப்பனும் ஆத்தாளும்’ தான் உலக சினிமாவில் வைக்க வேண்டிய படம்  என நம்புகிறார்

இயக்குநர்!பாரதிராஜாவின் படங்களில் வெள்ளை உடை தரித்த பெண், சூர்யாகாந்திப் பூ, மலை அருவி, செம்மண், மாட்டு வண்டி, ஒற்றைப் பள்ளிக்கூடம், அதில் ஒற்றை வாத்தியார் கண்டிப்பாக இடம் பெறுவார்கள்!எப்பவும் விரும்புகிற டிரெஸ் டி-ஷாட், ஜீன்ஸ் பேண்ட் சமீப காலமாக வெள்ளை ஜிப்பா, பேண்டைத் தேர்ந்தெடுக்கிறார்!

ரஷ்யா , அமெரிக்கா போன்ற நாடுகளின் அழைப்பின் பேரில் அங்கு சினிமாபற்றி வகுப்பு எடுத்து உரையாடி வந்திருக்கிறார் அல்லிநகரம் பாரதிராஜா!`குற்றப் பரம்பரை’, `அப்பனும் ஆத்தாளும்’ என இரு படங்களின் திரைக்கதையை வடிவமைக்கிற வேலையில் தீவிரமாக இருக்கிறார். அநேகமாக அவரே பெரிய கேரக்டரில் நடித்துவிடுவார் எனப் பேசிக் கொள்கிறார்கள்!

அதிகம் வெளியில் தெரியாத விஷயம், சிறப்பாக ஓவியம் வரைவார். அதை நெருக்கமான நண்பர்களிடம் காட்டி மகிழ்வார். காட்சி அமைப்புகளை வரைந்துவைத்துக்கொள்கிற அளவுக்கு அவரது ஓவியம் நுட்பமானது!1991 –ல் சிக்ரெட் புகைப்பதை நிறுத்தினார் பாரதிராஜா. நுரையீரல் பாதிக்கப்பட்டு. சிறு ஆபரேஷன் வரைக்கும் போனதுதான் அதற்குக் காரணம். இப்போது புகை இல்லாத உலகம் அவருடையது!மத்திய அரசு, இலங்கைத் தமிழர்கள் நலனுக்காக எதுவும் செய்யவில்லை என குற்றம் சாட்டி பத்மஸ்ரீ விருதைத் திருப்பி அனுப்பினார் குடியரசுத் தலைவர் பிரதிபாபாட்டீலும் அதைப் பெற்றுக் கொண்டு,ஒப்புதல்பெற்று கடிதம் எழுதினார்!

1986 –ல் தாஷ்கண்ட் படவிழாவில் `முதல் மரியாதை’ திரைப்படத்தை திரையிட்டார்கள். சப்டைட்டில் போட்டும் அந்தப் படத்தைப் புரிந்துகொள்ள சிரமப்பட்டார்கள் மக்கள். விழாவுக்குப் போயிருந்த ராஜ்கபூர், ரஷ்ய மொழியில் முழுக்க முழுக்க ரன்னிங் கமெண்ட்ரி கொடுத்தார். பாராட்டினர் மக்கள். கண்கள் நனைந்தது பாரதிராஜாவுக்கு!

கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெ., என மூன்று முதல்வர்களிடமும் நெருங்கிய பழகியவர். எம்.ஜி.ஆர் அன்புடன் அழைப்பது `வாங்க டைரக்டரே’, கலைஞர் `என்னப்பா பாரதி’ ஜெ.... `மிஸ்டர் பாரதிராஜா’, அரசியலுக்கு அப்பாற்பட்டு நெருக்கமாக இருந்தார் பாரதிராஜா!`16 வயதினிலே’ வில் ஆரம்பித்து `புதிய வார்ப்புக்கள்’ வரை பார்த்துவிட்டு எல்.வி.பிரசாத் தன்னை உதவி இயக்குநராக சேர்த்துகொள்ள முடியுமா என்று கேட்டதைத் தனது உச்சபட்ச கெளரவமாக எடுத்துக்கொள்வதாகச் சொல்வார் பாரதிராஜா!

பாரதிராஜாவைப் பாதித்த இயக்குநர்கள் ஸ்ரீதர், பாலசந்தர், பிடித்த இயக்குநர்கள் மணிரத்னம், ஷங்கர், அகத்தியன், சேரன், பாலா, அமீர், பாலாஜி, சக்திவேல், வசந்தபாலன், வடக்கில் சாந்தாராமின் படைப்புக்கள்!தன் அம்மாவின் பெயரில் எடுத்த `கருத்தம்மா’ படத்துக்கு தேசிய விருது கிடைத்தபோது, தன் தாயாரையே விருது வாங்கச் செய்தார் பாரதிராஜா. அந்தத் தாய் பெருமிதப்பட்டு மேடையிலேயே உணர்ச்சி வசப்பட்டது அருமையான நிகழ்வு!

நினைத்தால் தேனிக்குப் போய் அம்மா சமாதியில் உட்கார்ந்து தியானத்தில் இறங்கிவிடுவார் பாரதிராஜா. `அம்மா என்னை சின்ன வயதில் குளிக்கவெச்சு சாப்பாட்டு ஊட்டிவிட்டது அதையே அம்மா படுக்கையிலே கிடந்தபோது... நான் செய்து பெற்ற கடனை நிறைவேற்றினேன்’ என நெகிழ்வார் பாரதிராஜா! தொகுத்து வழங்குபவர் திருமதி ஆனந்திராம்குமார் நன்றி ; ஆனந்த விகடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக