வியாழன், 13 ஜூன், 2013

பிரியங்காவின் கணவர் வதேராவின் ஊழல் விளக்க ஆவணம் தர பிரதமர் அலுவலகம் மறுப்பு!

டெல்லி: காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா நிலபேர ஊழல் தொடர்பான வழக்கில் பிரதமர் அலுவலகம் தாக்கல் செய்த ஆவணங்களை தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் தர பிரதமர் அலுவலகம் மறுத்து விட்டது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகனும், பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வதேரா விவசாயிகளிடம் இருந்து மிகக்குறைந்த விலைக்கு நிலங்களை பெற்று கூடுதல் விலைக்கு டி.எல்.எப். நிறுவனத்துக்கு விற்பனை செய்ததாக புகார் எழுந்தது. இந்த சர்ச்சைக்குரிய நில பேரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, நுதன் தாக்குர் என்ற தகவல் பெறும் உரிமை சட்ட ஆர்வலர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ கிளையில் ரிட்மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் இந்த வழக்கில் பிரதமர் அலுவலகம் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் இக் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து, நுதன் தாக்குரின் மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இந்நிலையில் இந்த வழக்கில் பிரதமர் அலுவலகம் தாக்கல் செய்த பிரமாண பத்திரம் தொடர்பான ஆவணங்களை கோரி நுதன் தாக்குர் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ், மனுதாக்கல் செய்தார். ஆனால் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் ஆவணங்களை தர முடியாது என்று பிரதமர் அலுவலகம் கூறிவிட்டது. மேலும் இந்த விவகாரம் ரகசியமானது என கருதுகிறோம். இதுபோன்ற ரகசியங்களை வெளியிட உச்ச்நீதிமன்றம் விலக்கும் அளித்திருக்கிறது என்றும் பிரதமர் அலுவலக தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக