செவ்வாய், 18 ஜூன், 2013

தேவர் உடலில் அருந்ததியர் DNA பார்ப்பனர் DNA யில் பழங்குடிகள் ! இளவரசர் வில்லியமும் இந்திய மரபணுவும் !

டயானா, ஹேரி, வில்லியம்எலிசபெத் மகாராணி21-ம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் அரச பரம்பரை பல நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் மகாராணி எலிசபெத் II பிரிட்டன், வட அயர்லாந்து, ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, போன்ற நாடுகளைத் தவிர இன்னும் 13 குட்டி நாடுகளுக்கு மட்டும் மகாராணியாக விளங்குகிறார். இந்தக் காலத்தில் இவ்வளவு செலவழித்து (ஆண்டுக்கு சுமார் 20 கோடி பவுண்டுகள் = சுமார் ரூ 1800 கோடி) அரச பரம்பரையை காப்பாற்ற வேண்டிய அவசியம் என்ன என்று இங்கிலாந்து மக்களில் பலர் விமர்சிக்கிறார்கள். அடுத்து அரியணை ஏறவிருக்கும் இளவரசர் சார்லஸ் போன்ற ஒரு மொக்கையை நமது மகாராஜாவாக ஏற்றுக் கொள்வதா என்று ஆஸ்திரேலியாவை முழுமையான (பெயரளவிலான மன்னராட்சியை ரத்து செய்து விட்டு) குடியரசாக மாற்ற முயற்சி செய்யும் அரசியல்வாதிகள் பிரச்சாரம் செய்கிறார்கள்.
மகாராணி இரண்டாம் எலிசபெத்
பிரிட்டனின் வடபகுதியான ஸ்காட்லாந்து தனக்கென தனியாக நாடாளுமன்றத்தை ஏற்படுத்திக் கொண்டு சுதந்திர அரசாக பிரிந்து போக முயற்சி செய்கிறது. பிற பகுதிகளான வேல்சும், வட அயர்லாந்தும் பிரிட்டிஷ் பிடியிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ள முயற்சிக்கின்றன.
இவற்றை எல்லாம் எதிர் கொண்டு சாம்ராஜ்யத்தை கட்டிக் காப்பதற்காக 87 வயதான மகாராணி இரண்டாம் எலிசபத், சுமார் 45 ஆண்டுகளாக காத்துக் கொண்டிருக்கும் 65 வயதான மகன் இளவரசர் சார்லஸூக்கு வழி விடாமல் நாற்காலியை இறுகப் பற்றிக் கொண்டிருக்கிறார். அம்மா போனால்தான் திண்ணை காலியாகும் என்று வெகு காலம் முன்பே விரக்தியில் செட்டில் ஆகி விட்டிருக்கிறார் சார்லஸ்.
இருப்பினும் தனது முன்னாள் காதலி பமீலா பார்க்கர் பவுல்சை சட்டப்படி திருமணம் செய்து கொண்டு ராஜ வாழ்க்கையை அனுபவித்து வருகிறார். சார்லஸ் முதலில் திருமணம் செய்து கொண்ட டயானாவுக்கும் சார்லஸூக்கும் பிறந்த மூத்த மகன் வில்லியம், சார்லஸூக்கு அடுத்து அரியணை ஏறுவதற்கு வரிசையில் நிற்பவர்.
20-ம் நூற்றாண்டிலேயே ஆட்டம் கண்டு இந்த நூற்றாண்டில் துருப்பிடிக்க ஆரம்பித்திருக்கும் பிரிட்டிஷ் அரியணையின் இமேஜை உயர்த்துவதற்கு இப்போது அவசர தேவை இருக்கிறது.
இந்தச் சூழலில் வில்லியம் குறித்து ஒரு பரபரப்பூட்டும் தகவல் வெளியாகியிருக்கிறது. “பிரிட்டன்ஸ் டிஎன்ஏ” என்ற நிறுவனம் ஒரு அமவுண்ட் கொடுத்தால் ஒருவரது மரபணுவை ஆராய்ந்து அவரது மூதாதையர்கள் பற்றிய விபரங்களை ஆய்வு மூலம் திரட்டிக் கொடுக்கிறது. எடின்பர்க் பல்கலைக் கழகத்தில் பணி புரியும் ஜிம் வில்சன் என்ற மரபணு நிபுணருடன் இணைந்து வில்லியமின் தாய் (டயானா) வழி உறவினர்களின் உமிழ்நீரை ஆய்வு செய்து இளவரசன் வில்லியமின் உடலில் இந்திய மரபணு கலந்திருப்பதாக அறிவித்திருக்கிறது “பிரிட்டன்ஸ் டிஎன்ஏ”.
(காலம் சென்ற) சீமாட்டி டயானா மகன்கள் ஹேரி மற்றும் வில்லியம் உடன் (கோப்பு படம்)
வேல்ஸ் இளவரசி சீமாட்டி டயானாவின் எள்ளுப்பாட்டியின் பாட்டி எலிசா கேவார்க் என்பவர் கிழக்கிந்திய கம்பெனியில் பணி புரிந்த தியோடர் போர்ப்ஸ் என்ற ஸ்காட்லாந்து வணிகரின் மாளிகையில் வீட்டு பராமரிப்பாளராக இருந்திருக்கிறார். எலிசாவின் தந்தை ஆர்மீனியாவைச் சேர்ந்தவர் என்றும் தாய் இந்திய வம்சாவளியினர் என்றும் “பிரிட்டன்ஸ் டிஎன்ஏ” கண்டறிந்துள்ளது.
குஜராத்தின் சூரத் நகரில் வசித்து வந்த தியோடர் போர்ப்ஸ், எலிசாவை திடீரென்று கை விட்டு விட்டு அவர்களுக்குப் பிறந்த கேத்தரீன் என்ற மகளை 6 வயதில் பிரிட்டனுக்கு அனுப்பியிருக்கிறார். எலிசாவிடமிருந்து கேத்தரீன் வழியாக அவர்களது பெண் சந்ததியினருக்கு இந்த மைட்டோகாண்ட்ரியா மரபணு கடத்தப்பட்டு டயானாவுக்கு வந்து சேர்ந்திருக்கிறது. டயானாவின் மகனான, அடுத்ததற்கு அடுத்ததாக பிரிட்டிஷ் மகாராஜா ஆகப் போகிற வில்லியமுக்கு இந்திய அடையாளம் இருப்பது இதன் மூலம் உறுதியாகியிருக்கிறது.
17-ம் நூற்றாண்டில் நிலப்பிரபுத்துவ அதிகாரங்களை விட்டுக் கொடுக்க மறுத்து முரண்டு பிடித்த மன்னர் முதலாம் சார்லஸின் கழுத்தை வெட்டி முதலாளிகளின் அதிகாரத்தை நிலைநாட்டியவர் முதலாளித்துவ புரட்சியாளர் ஆலிவர் குரோம்வெல். அன்று ராஜ பரம்பரைக்கு இழைத்த துன்பத்துக்கு பரிகாரமாக இன்று முதலாளித்துவ நிறுவனம் ஒன்று வில்லியம்ஸூக்கு இருக்கும் இந்தியத் தொடர்பை நிரூபித்து பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துக்கு சேவை செய்திருக்கிறது. கூடவே தனது மரபணு பரிசோதனை சேவைக்கான சந்தைப்படுத்தலையும் செய்திருக்கிறது “பிரிட்டன்ஸ் டிஎன்ஏ” நிறுவனம்.
1983-ல் இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை ஜெயித்த பிறகு இந்தியாவில் கிரிக்கெட் டேக் ஆப் ஆனது போல, 1994-ல் உலக அழகியாக ஐஸ்வர்யா ராய் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு இந்தியாவில் அழகு தொழில் பிக் அப் ஆனது போல, பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் எதிர்கால அரசர் வில்லியமின் உடலில் இந்திய மரபணு இருக்கிறது என்ற தகவல் இந்திய கனவான்களின் நெஞ்சில் ராஜ விசுவாசத்தை மூளச் செய்யாது என்று எப்படி சொல்ல முடியும்!
அவரது குழந்தை பிறந்தவுடன் அடுத்த மாதம் அரசு முறை சுற்றுப் பயணமாக முதல்முறையாக இந்தியா போவதற்கு வில்லியம் ஊக்குவிக்கப்படுகிறார். அதற்கு முன்பு பிரிட்டிஷ் அரச குடும்பத்தை இந்தியர்களுக்கு சந்தைப்படுத்தும் விதமாக வில்லியமுக்கு இந்தியாவுடன் இருக்கும் கனெக்சன்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியிடப்படும்.
இந்திய பாரம்பரியம் உறுதியாகியுள்ள வில்லியமுக்கு நந்தன் நீலகேணி ஆதார் அட்டை வழங்கி ஆதார் திட்டத்தை வலுப்படுத்திக் கொள்ளலாம்.
வில்லியம், கேத்தரீன்
இளவரசர் வில்லியம் தன் மனைவி கேத்தரீனுடன் – இங்கிலாந்து சர்ச்சின் ஆர்ச் பிஷப்பை சந்தித்தல்
வில்லியமின் மூதாதையரான எலிசா கேவார்க்கும், தியோடர் போர்ப்ஸூம் வாழ்ந்தது குஜராத்தில் உள்ள துறைமுக நகரான சூரத் என்பதையும் கவனிக்க வேண்டும். குஜராத்தின் பெருமையான நரேந்திர மோடி, வல்லபாய் பட்டேலுக்கு சர்தார் சரோவர் அணைக்கு அருகில் சிலை வைப்பது போல, 300 ஆண்டுகளுக்கு முன்பே குஜராத்திலிருந்து இங்கிலாந்து சென்ற வம்சத்தைச் சேர்ந்த பிரிட்டிஷ் அரியணை ஏறவிருக்கும் வில்லியமுக்கும் சிலை வைக்க முடிவு செய்யலாம்.
இந்திய மண்ணின் மைந்தன், குஜராத்தின் பேரன் வில்லியமின் தலைமையை ஏற்றுக் கொண்டு இந்தியாவையும் பிரிட்டிஷ் குடைக்குள் கொண்டு வருவதையும் சங்க பரிவாரங்கள் பரிசீலிக்கலாம்.
இன்னும் 100 ஆண்டுகள் கழித்து உத்தர பிரதேசம், டெல்லி, உத்தரகாண்ட், ஆந்திர பிரதேசம் என்று நாடு முழுவதும் டிஎன்ஏ வழங்கியவரான என் டி திவாரியின் வாரிசுகளை ஆய்வு செய்யவிருக்கிற மரபணு ஆய்வாளர்களை நினைத்தால்தான் கதி கலங்குகிறது.
போகட்டும், ஆங்கிலேயர்கள் இந்தியாவில் கிட்டத்தட்ட இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செலுத்தியிருக்கிறார்கள். இதன்படி லண்டனில் இருக்கும் வெள்ளையர்கள் அனைவரையும் பரிசோதனை செய்தாலும் அதில் இந்திய மரபணு மட்டுமல்ல, இலங்கை, பாகிஸ்தான், பர்மா, சீனா மற்றும் ஆப்பிரிக்க மரபணுக்களும் இருக்கும். காலனிய ஆட்சியாளர்கள் ஏழை நாடுகளின் சொத்துக்களை மட்டுமல்ல மரபணுக்களையும்தான் கொண்டு சென்றிருக்கிறார்கள். நிலைமை இப்படி இருக்க இதையெல்லாம் சர்வதேச செய்திகள் என்று வெளியிடுகிறார்களே முட்டாள் ஊடகங்கள், அவர்களை கவனிக்க வேண்டும்.
எனினும் இந்த மரபணு விசயத்தில் ஒரு அம்சத்தை நமது சாதியவாதிகளுக்கு நினைவூட்ட வேண்டும். தனது சாதி புனிதமானது, வேறு சாதி ரத்தம் கலக்காதது என்று நம்பிக் கொண்டிருக்கும் அனைவரிடமும் இத்தகைய சோதனையை மேற்கொண்டால் நிறைய கலவரங்கள் பிறப்பது உறுதி. ஏனெனில் வன்னியர் உடலில் பறையர் மரபணு, தேவர் உடலில் அருந்ததியர் மரபணு, பார்ப்பனர் மரபணுவில் பழங்குடிகள் என்று முழு இந்தியாவும் கலந்திருப்பது தெரியவரும். அப்போது நமது சாதிய பரிசுத்தவான்கள் என்ன சொல்வார்கள்?
vinavu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக