புதன், 26 ஜூன், 2013

உத்தரகண்டில் குஜராத்திகளை மட்டும் மோடி மீட்டார் ! ஒருவேளை குஜராத்திற்கு மட்டும் பிரதமராக ஆசையோ?

உத்தரகாண்டில் இருந்து 15000 குஜராத்தியர்களை காப்பாற்றி இருப்பதாக கூறுகிறார். தயவு செய்து இப்படியொரு பொய்யை சொல்லாதீர்கள். இராணுவம், விமானப்படை, துணைநிலை ராணுவப்படை ஆகியோர் இரவு பகலாக அங்கு மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் மோடி 15000 பேரை காப்பாற்றியிருப்பதாக கூறுவது புதுமையாக இருக்கிறது. 
மும்பை: "பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளராக, குஜராத் முதல்வர் நரேந்திர
மோடி முன்னிறுத்தப்படலாம் என்ற பேச்சு எழுந்துள்ள நிலையில், உத்தரகண்டில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட, குஜராத்திகளை மட்டும், அவர் மீட்டது சரியல்ல' என, சிவசேனா கட்சி விமர்சித்துள்ளது.உத்தரகண்ட் மாநிலத்தில், சமீபத்தில் பெய்த பேய் மழை மற்றும் அதனால், ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு காரணமாக, அம்மாநிலத்தில் உள்ள, புனித தலங்களுக்கு சுற்றுலா சென்றிருந்த, பல மாநிலத்தவர்கள் பாதிக்கப்பட்டனர். இப்படி, உத்தரகண்டின், சில பகுதிகளில் சிக்கித் தவித்த குஜராத் மாநிலத்தவர், 15 ஆயிரம் பேரை, அம்மாநில முதல்வரான நரேந்திர மோடி, நேரில் சென்று மீட்டார் என, செய்திகள் வெளியாகின. மோடியின் செயலை, பா.ஜ., தலைவர்கள் பலரும் பாராட்டிய நிலையில், காங்., உட்பட, சில கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. "துயரமான சம்பவம் ஏற்பட்டு, நாடே சோகத்தின் மூழ்கியுள்ள நிலையில், முதல்வர் மோடி, விளம்பரம் தேடுகிறார்' என, காங்கிரஸ் விமர்சித்தது.


கட்சி பத்திரிகையில்... : இந்நிலையில், பா.ஜ.,வின் கூட்டணி கட்சியான சிவசேனாவும், "வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து, குஜராத்திகளை மட்டும் மீட்டுள்ளார்' என, மோடியின் செயலை விமர்சித்து உள்ளது. சிவசேனா கட்சியின் பத்திரிக்கையான, "சாம்னா'வில், அதன் தலைவர், உத்தவ் தாக்கரே எழுதியுள்ளதாவது: குஜராத் முதல்வர் என்ற முறையில், தங்கள் மாநில மக்களை, முதல்வர் நரேந்திர மோடி மீட்டது பாராட்டுக்குரியது. எனினும், அவர், தற்போது மாநில தலைவர் அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பா.ஜ.,வின் தேசிய அளவிலான பிரசார குழு தலைவராக, அவர் நியமிக்கப்பட்டுள் ளார். அத்துடன், பா.ஜ., வின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படலாம் என்றும், பேச்சுக்கள் எழுந்துள்ளன. அப்படிப்பட்ட நிலையில், குஜராத்திகள் நலனில் மட்டும் அவர் அக்கறை காட்டியது சரியல்ல. உத்தரகண்டில் நிகழ்ந்தது தேசிய பேரிடர் சம்பவம். இதுபோன்ற நேரங்களில், தேசிய தலைவர்களாக முன்நிறுத்தப்படுவோர், தேசிய அளவிலான சிந்தனையுடன் செயல்பட வேண்டும். சொந்த மாநில மக்களின் நலனை மட்டுமே பார்க்கக் கூடாது.
மோடியின் செயல்பாடுகளை, விளம்பரம் செய்வோரும், அவர் குஜராத் முதல்வராக இருந்த போதிலும், ஒரு தேசிய தலைவர் என்பதையும் சிந்தனையில் வைத்து செயல்பட வேண்டும். தேசம் பெரியது, தேசிய தலைவர்கள் என, முன்னிறுத்தப்படும் மோடியைப் போன்றவர்கள், குறுகிய மனப்பான்மையுடன் செயல்படுவது தவறு. நாட்டு நலனை கருத்தில் கொள்ள வேண்டிய முக்கிய பொறுப்பில் உள்ள மோடி, தன் மாநில மக்களை மீட்டுவிட்டார் என, தம்பட்டம் அடிப்பதும் சரியல்ல. மோடி, குஜராத்தை விட்டு வெளியே வர வேண்டும். குஜராத்திற்கு அப்பால் உள்ள தேசத்தை பற்றி சிந்திக்க வேண்டும்.

பரந்த மனப்பான்மை : உத்தரகண்ட் மாநிலத்திற்கு விஜயம் செய்த, மகாராஷ்டிரா முதல்வர் பிருதிவி ராஜ் சவான், "எங்கள் மாநிலத்தைச் சேர்ந்தவர்களை மீட்பதற்காகவே, நாங்கள் நிவாரண குழுவை அனுப்பியுள்ளோம். இருந்தாலும், மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்களையும், அவர்கள் மீட்பர்' என, தெரிவித்தார். இதுபோன்ற பரந்த மனப்பான்மை பாராட்டுக்குரியது. இவ்வாறு உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக