புதன், 26 ஜூன், 2013

ராஜ்யசபா தேர்தலில் கள்ள ஒட்டு போடமுடியாது ! ஏஜென்டிடம் ஓட்டை காட்டவேண்டும்

சென்னை:"ராஜ்யசபா தேர்தலில், ஓட்டு போடும் எம்.எல்.ஏ.,க்கள், தாங்கள் பதிவு செய்த ஓட்டுகளை, கட்சி ஏஜென்டிடம் காட்ட வேண்டும். இல்லையெனில், செல்லாத ஓட்டாக அறிவிக்கப்படும்' என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளதால், கட்சி மாறி ஓட்டு போட நினைத்த எம்.எல்.ஏ.,க்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.தமிழகத்திலிருந்து, ஆறு ராஜ்யசபா எம்.பி.,க்களை தேர்வு செய்ய, நாளை ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. ஆறு இடங்களுக்கு, அ.தி.மு.க., சார்பில், நான்கு பேர், இந்திய கம்யூ., - தே.மு.தி.க., - தி.மு.க., சார்பில், தலா ஒருவர் என மொத்தம், ஏழு பேர் போட்டியிடுகின்றனர். சட்டசபையில் உள்ள, 234 எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை அடிப்படையில், ஒரு எம்.பி.,யை தேர்வு செய்ய, 34 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு தேவை.தற்போது, தேர்தலை புறக்கணிப்பதாக, பா.ம.க., அறிவித்துள்ளதால், ஒரு எம்.பி.,யை தேர்வு செய்ய, தேவைப்படும் எம்.எல்.ஏ., எண்ணிக்கை குறையும். தேர்தல் நடைமுறை குறித்து, தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது:தேர்தலில், பதிவான ஓட்டுகளில், செல்லத்தக்க ஓட்டுகளின் எண்ணிக்கை அடிப்படையில் மட்டுமே, ஒரு எம்.பி.,யை தேர்வு செய்ய, எத்தனை எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டு தேவை என்ற விவரத்தை தெரிவிக்க முடியும்.
வீடியோவில் பதிவு:

ஓட்டுப்பதிவு முழுவதும், வீடியோவில் பதிவு செய்யப்படும். ஓட்டுப்பதிவு அறையில், வேட்பாளர், தனக்கு ஒரு ஏஜென்ட்டை நியமித்துக் கொள்ளலாம். அரசியல் கட்சிகள், அதிகாரப்பூர்வ ஏஜென்ட் ஒருவரை, நியமித்துக் கொள்ளலாம்.எம்.எல்.ஏ.,க்கள், ஓட்டை, ஓட்டுப் பெட்டியில் போடுவதற்கு முன், ஓட்டுச் சீட்டில், யாருக்கு ஓட்டு போட்டோம் என்ற விவரத்தை, கட்சியின் அதிகாரப்பூர்வ ஏஜென்ட்டிடம் காட்ட வேண்டும். அவ்வாறு காட்டாவிட்டால், அது, செல்லாத ஓட்டாக கருதப்படும். கட்சியின் அதிகாரப்பூர்வ ஏஜென்ட் தவிர, மற்றவரிடம் காட்டினாலும், அந்த ஓட்டு செல்லாததாக கருதப்படும். ஏஜென்ட்டிடம் காட்டிய பிறகு, ஓட்டு சீட்டில் திருத்தம் செய்தாலும், அந்த ஓட்டு செல்லாத ஓட்டாக அறிவிக்கப்படும்.


கண்காணிப்பு:

கட்சி ஏஜென்ட்கள் அமர, தனி இருக்கைகள் போடப்படும். ஒவ்வொருவருக்கும் நடுவில் தடுப்பு அமைக்கப்படும். வேட்பாளரின் ஏஜென்ட், யாரெல்லாம் ஓட்டளிக்க வருகின்றனர் என்பதை கண்காணிப்பர்.எம்.எல்.ஏ.,க்களுக்கு எப்படி ஓட்டளிக்க வேண்டும் என, பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ஓட்டுப் போட வருபவர், ஓட்டுச் சீட்டை பெற்று, அங்கு வழங்கப்படும், ஊதா வண்ண, "ஸ்கெட்ச்' பேனாவால், வேட்பாளரின் பெயர் முன் கட்டத்தில், "ஒன்று, இரண்டு' என, எண்ணில் எழுத வேண்டும். எழுத்தால் எழுதினால், அந்த ஓட்டு செல்லாது.ஓட்டுச் சீட்டை நிரப்பிய பின், கட்சி ஏஜென்ட்டிடம் காட்டிவிட்டு, ஓட்டுப் பெட்டியில் போட வேண்டும். ஓட்டுச் சீட்டு, வெள்ளை நிறத்தில் இருக்கும். ஓட்டுப்பதிவு முடிந்த பிறகு, கட்சி ஏஜென்ட்கள், தங்கள் கட்சி எம்.எல்.ஏ.,க்களின் ஓட்டுகளைப் பார்வையிட அனுமதி உண்டு.


செல்லாத ஓட்டு:

ஒவ்வொரு எம்.எல்.ஏ.,வுக்கும் வழங்கப்படும் ஓட்டுச் சீட்டில் உள்ள வரிசை எண், வாக்காளர் பட்டியலில் உள்ள, அந்த எம்.எல்.ஏ., பெயர் முன் எழுதப்படும். இதன்மூலம், செல்லாத ஓட்டு விழுந்தால், அதை யார் போட்டிருப்பார், என்பதை கண்டறிய முடியும்.ஓட்டுப்பதிவு முடிந்ததும், அதன் விவரம் உடனடியாக, தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்படும். அங்கிருந்து, அனுமதி கிடைத்த பிறகு, ஓட்டுக்கள் அன்றே எண்ணப்படும்.வேட்பாளர்களுக்கு, வெற்றிக்கு தேவையான முதல் ஓட்டுகள் கிடைக்காவிட்டால், வெற்றி பெற்ற வேட்பாளருக்கு ஓட்டு போட்டவர்கள், இரண்டாவதாக யாருக்கு ஓட்டளித்தனர் என்ற விவரம் கணக்கில் எடுக்கப்படும்.இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒவ்வொரு எம்.எல்.ஏ.,வும், தாங்கள் யாருக்கு ஓட்டுப் போடுகிறோம் என்பதை, கட்சி ஏஜென்ட்டிடம் காட்ட வேண்டும் என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளதால், கட்சி மாறி ஓட்டு போட நினைத்த எம்.எல்.ஏ.,க்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.தே.மு.தி.க.,வில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட, ஏழு எம்.எல்.ஏ.,க்கள், அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு தெரிவிக்க முடிவு செய்துள்ளனர். அவர்கள், இந்த தேர்தலில் எப்படி ஓட்டுப் போடப் போகின்றனர் என்பது இன்னமும் மர்மமாக உள்ளது.


குருவுக்கு தபால் ஓட்டு :

பா.ம.க., - எம்.எல்.ஏ., காடுவெட்டி குரு, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைதாகி, புழல் சிறையில் உள்ளார். சிறையிலிருந்து, ஓட்டளிப்பதற்கு வசதியாக, அவருக்கு தபால் ஓட்டு அனுப்பப்பட்டுள்ளது. அவர் தனது ஓட்டை, சிறைக்காவலர் மூலம், அனுப்பி வைக்கலாம். ராஜ்யசபா தேர்தலை புறக்கணிப்பதாக, பா.ம.க., அறிவித்துள்ளதால், காடுவெட்டி குரு ஓட்டளிக்க மாட்டார் என, எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், தேர்தல் கமிஷன், அவருக்கு தபால் ஓட்டை அனுப்பியுள்ளது. dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக