செவ்வாய், 18 ஜூன், 2013

பாகிஸ்தானில் தீவிரவாதிகள் பெண் கல்லூரிகள் மீது தொடர் தாக்குதல்கள் ! மலாலா கண்டனம்

பாகிஸ்தானில் பெண்கள் கல்லூரி பஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதல் கோழைத் தனமானது: மலாலா கண்டனம், பாகிஸ்தானின் தென் கிழக்கு பகுதியில் பலுசிஸ்தான் மாகாணம் உள்ளது. இதன் தலைநகரம் குவெட்டாவில் சர்தார் பகதூர்கான் பெண்கள் பல்கலைக்கழக வளாகத்தில் நின்ற பஸ்சில் கடந்த சனிக்கிழமை அன்று சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. அதில் 14 மாணவிகள் உயிரிழந்தனர். 20 பேர் காயம் அடைந்தனர். அதே நேரத்தில் குவெட்டாவில் போலன் மருத்துவ வளாகத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்குள் தீவிரவாதிகள் புகுந்தனர். தகவல் அறிந்ததும் ராணுவத்தினரும் அங்கு விரைந்து சென்றனர். அதைத்தொடர்ந்து அங்கு இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. அதில் 11 பேர் உயிரிழந்தனர். ராணுவம் சுட்டதில் தீவிரவாதிகள் 4 பேர் கொல்லப்பட்டனர். ஆஸ்பத்திரியில் தங்கியிருந்த 20 பேர் காயம் அடைந்தனர். இந்த இரட்டை தாக்குதல்களுக்கு பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட லஸ்கர்-இ-ஜாங்வி என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளது. தங்கள் இயக்கத்தினர் மீது ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு பழிக்கு பழிவாங்கவே இத்தாக்குதல் நடத்தியதாக கூறியுள்ளனர். பஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தற்கொலை படை பெண் தீவிரவாதி ஈடுபட்டதாகவும், இந்த தாக்குதலில் காயமடைந்தவர்கள் போலன் ஆஸ்பத்திரிக்கு கொண்டுவரப்பட்டபோது அங்கும் ஒரு தற்கொலை படை தீவிரவாதி தாக்குதல் நடத்தியதாகவும் போலீஸ் துணை கமிஷனர் அன்வர் அலி தெரிவித்தார். இந்நிலையில், பாகிஸ்தானில் கடந்த ஆண்டு தலிபான் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டு பல ஆபரேஷன்களுக்கு பிறகு உடல்நலம் தேறி தற்போது இங்கிலாந்தில் படித்து வரும் மலாலா யூசுப்சாய் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். பெண்கள் கல்வி கற்பதை தடுக்க நினைக்கும் கோழைகள் நடத்திய இந்த தாக்குதல் கண்டனத்துக்குரியது என்று அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக