வியாழன், 13 ஜூன், 2013

புதிய கல்வி கட்டணம் 3,000 to 35 ஆயிரம் பெற்றோர்கள் அதிர்ச்சி ! தமிழக கட்டண நிர்ணய குழு அறிவிப்பு !

சென்னை: தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணய குழு, 8,000
பள்ளிகளுக்கு, நடப்பு கல்வி ஆண்டு முதல், மூன்று கல்வி ஆண்டுகளுக்கு, புதிய கட்டணத்தை நிர்ணயித்து அறிவித்துள்ளது. ஆண்டு கட்டணமாக, 3,000 ரூபாய் முதல், 35 ஆயிரம் ரூபாய் வரை, பள்ளிகளுக்கு தகுந்தாற்போல், கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட கல்வி கட்டண கால வரையறை முடிந்த பள்ளிகளுக்கு, புதிய கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பாக, கட்டண நிர்ணய குழு, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக, விசாரணை நடத்தி வந்தது. இந்தப் பணிகள் முடிந்த நிலையில், 8,000 பள்ளிகளுக்கு, புதிய கல்வி கட்டணங்களை நிர்ணயம் செய்து, தமிழக அரசு இணைய தளத்தில், கட்டண நிர்ணய குழு, நேற்று வெளியிட்டது.மாநில அரசு பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகள் மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகள், பட்டியலில் இடம்பெற்றுள்ளன. 32 மாவட்டங்களில் இருந்தும், அதிகமான பள்ளிகள், பட்டியலில் இடம் பிடித்துள்ளன. சென்னை மாவட்டத்தில் மட்டும், 590 பள்ளிகளுக்கு, புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


நடப்பு, 2013 -14 மற்றும் 14 -15, 15 -16 ஆகிய, மூன்று கல்வி ஆண்டுகளுக்கும் சேர்த்து, தனித்தனியாக, கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டுக்கும், சற்று கூடுதலாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தற்போது, மாநில பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளை விட, சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு, அதிகளவில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.எல்.கே.ஜி., முதல், பிளஸ் 2 வரை, ஒவ்வொரு வகுப்பிற்கும், ஒரு ஆண்டுக்கு, வசூலிக்க வேண்டிய கல்வி கட்டண விவரம், இணைய தளத்தில் தரப்பட்டுள்ளது.அதன்படி, எல்.கே.ஜி., வகுப்பிற்கு, 3,000 ரூபாய் முதல், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, 35 ஆயிரம் ரூபாய் வரை, கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னை, அண்ணாநகரில் உள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில், எல்.கே.ஜி., கட்டணம், நடப்பு ஆண்டிற்கு, 18 ஆயிரம், அடுத்த ஆண்டுக்கு, 19, 800, அதற்கு அடுத்த ஆண்டுக்கு, 21,780 என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளை பொறுத்தவரை, முறையே, 26 ஆயிரம், 28,600, 31, 460 என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுபோல், பெரிய சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு, 35 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக, கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.பெற்றோர், www.tn.gov.in என்ற இணைய தளத்திற்குச் சென்று, தங்களது குழந்தைகள் படிக்கும் பள்ளியின் பட்டியலைப் பார்த்து, கட்டண விவரங்களை அறியலாம். மேலும், புதிய கட்டண விவரங்களை, பள்ளி அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும் என, கட்டண நிர்ணய குழு உத்தரவிட்டுள்ளது.குழு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட, கூடுதலாக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இதுபோன்று கூடுதல் கட்டணம் வசூலித்த பள்ளிகளிடம் இருந்து, ஒரு கோடி ரூபாய், சம்பந்தபட்ட பெற்றோர்களுக்கு, திரும்ப தரப்பட்டுள்ளது என்றும், குழு தலைவர் சிங்காரவேலு, நேற்று, நிருபர்களிடம் தெரிவித்தார். தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக