சனி, 25 மே, 2013

TMS டி எம் சௌந்தரராஜன் காலமானார்

 இந்தியாவின் மிகச் சிறந்த பின்னணிப் பாடகரும் இசைக் கலைஞருமான
டிஎம் சவுந்திரராஜன் இன்று பிற்பகல் சென்னையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 91. உடல் நலக் குறைவு காரணமாக இன்று அவர் உயிர் பிரிந்தது. மூச்சுக் கோளாறு காரணமாக கடந்த 12-ந்தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சில தினங்களுக்கு முன் வீடு திரும்பினார். பேரன் திருமணத்திலும் கலந்து கொண்டார். வீட்டில் இருந்தபடியே தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று பிற்பகல் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். 1923ம் ஆண்டு மார்ச் 24ம் தேதி மீனாட்சி அய்யங்காரின் மகனாக மதுரையில் பிறந்தார் டி.எம். சவுந்தரராஜன். அவரது இயற்பெயர் துகுலுவ மீனாட்சி அய்யங்கார் சவுந்திரராஜன். பிரபல இசை வித்துவான் பூச்சி ஸ்ரீனிவாச அய்யங்காரின் மருமகன் ராஜாமணி அய்யங்காரிடம் இசைப் பயிற்சி பெற்று பல ஆண்டுகளாக மேடை கச்சேரி செய்து வந்தார். 1950-ம் ஆண்டு கிருஷ்ண விஜயம் படத்தில் 'ராதே உனக்கு கோபம் ஆகாதடி' என்ற பாடலைப் பாடி திரை இசைப்பாடகராக அறிமுகமானார் டி.எம். சவுந்தரராஜன். அதன் பிறகு பல்லாயிரம் பாடல்களை பாடி தனது கணீர் கம்பீர குரலால் இசை ரசிகர்களின் இதயங்களில் குடி கொண்டார். 2003-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்ற இவர், ஏராளமான மாநில அரசின் விருதுகளையும் பெற்றுள்ளார். தமிழ் திரையுலக ஜாம்பவான்களான எம்.ஜி.ஆர்., சிவாஜி மற்றும் ஜெமினி கணேசன், எஸ்.எஸ். ராஜேந்திரன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், முத்துராமன், நாகேஷ், ரஜினிகாந்த், கமல்ஹாஸன் என அனைத்து பிரபலங்களுக்கும் குரல் கொடுத்துள்ள டி.எம். சவுந்தரராஜன் ஆயிரக்கணக்கான பக்தி மற்றும் மெல்லிசை பாடல்களையும் பாடியுள்ளார். 2012-ம் ஆண்டு ஏ.ஆர்.ரகுமான் இசையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்காக உருவான ‘செம்மொழியான தமிழ் மொழியாம்' என்ற பாடல்தான் டி.எம்.சவுந்தரராஜன் குரலில் பதிவான கடைசி பாடல் என்பது குறிப்பிடத்தக்கது. மறைந்த டி.எம்.சவுந்தரராஜனின் உடல் மந்தைவெளியில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரையுலகைச் சேர்ந்த பல்வேறு கலைஞர்களும், முக்கிய பிரமுகர்களும் அவரது உடலுக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். டிஎம் சவுந்திரராஜன் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக