புதன், 1 மே, 2013

டெல்லி ex MP சாஜன்குமார் சீக்கியர்கள் கொலை வழக்கில் விடுதலை .. சஞ்சய் காந்தியின் அடியாள்

புதுடில்லி: டில்லியில், 1984ம் ஆண்டு, சீக்கியர் படுகொலை வழக்கில்,
காங்கிரஸ் முன்னணி தலைவர்களில் ஒருவரான சாஜன் குமாரை விடுவித்து டில்லி கோர்ட் உத்தரவிட்டது. மற்ற 7 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டது.
கடந்த, 1984, அக்., 31ம் தேதி, அப்போதைய பிரதமர் இந்திராவை, அவருடைய சீக்கிய பாதுகாவலர்கள் சுட்டுக் கொன்றனர். இதையடுத்து, நாடு முழுவதும் பல இடங்களில், சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். தலைநகர் டில்லியில், ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். சுல்தான்புரி என்ற இடத்தில், ஆறு சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், முன்னாள், எம்.பி.,யும், காங்கிரஸ் முன்னணி தலைவர்களில் ஒருவருமான, சாஜன்குமார் உட்பட, ஐந்து பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.படுகொலையான சீக்கியர்களில், ஒருவரின் உறவுப்பெண், ஷீலா கவுர் என்பவர், சாஜன் குமார் மீதான படுகொலை வழக்கில், கிரிமினல் கூட்டுச்சதி பிரிவின் கீழ் வழக்கு தொடர்ந்துஇருந்தார். அதன்படி, சாஜன் குமார் மற்றும் பிறர் மீது, விசாரணை கோர்ட்டில் குற்றச்சாட்டுகள் பதியப்பட்டன.


இதை எதிர்த்து, சாஜன் குமார், டில்லி ஐகோர்ட்டில் முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீது, நேற்று தீர்ப்பு வழங்க இருப்பதாக, நீதிபதி சுரேஷ் கெய்ட் அறிவித்திருந்தார். இந்த நிலையில், நேற்று, தீர்ப்பு வழங்காத நீதிபதி, ""இந்த வழக்கை மேலும் விசாரிக்க வேண்டும்,'' என, தெரிவித்து, விசாரணையை, அடுத்த மாதம், 15ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதற்கிடையே, சாஜன் குமார் மற்றும் நான்கு பேர் மீதான, டில்லி, கன்டோன்மென்ட் பகுதியில் நடந்த, மற்றொரு சீக்கியர் படுகொலை வழக்கு, டில்லியில், மற்றொரு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. அந்த வழக்கில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கிலிருந்து சாஜன்குமாரை விடுவித்து நீதிபதி உத்தரவிட்டார். சாஜன்குமாரை தவிர்த்த மற்ற 5 பேரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். இதில் 3 பேர் கலவர வழக்கு ‌தொடர்பாகவும், 2 பேர் கொலை வழக்கு தொடர்பாகவும் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டது.

ஷூ வீச்சு: சாஜன் குமாரை விடுவித்ததை தொடர்ந்து நீதிபதியை நோக்கி ஷூ வீசப்பட்டது. இதனால் கோர்ட் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தீர்ப்பை எதிர்த்து போராட்டம்: சாஜன்குமார்விடுவிக்கப்பட்டதை எதிர்த்து கோர்ட்டிற்கு வெளியே போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. போராட்டம் நடத்தி வருபவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு கண்டனம் தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். இதனையடுத்து போலீஸ் விரைவுப்படையினர் கோர்ட்டில் குவிக்கப்பட்டுள்ளனர்.இந்த தீர்ப்புக்கு அகாலிதளம் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது போக, சாஜன் குமார் மற்றும் பிறர் மீது, நானாவதி கமிஷன் பரிந்துரையின் படி, 2010ல், சி.பி.ஐ., இரண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது; அந்த வழக்கும் நிலுவையில் உள்ளது.dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக