புதன், 1 மே, 2013

மரக்காணம் கலவரம் பற்றிய உண்மை அறியும் குழு அறிக்கை

25-4-13 அன்று வன்னியர் சங்கம் சார்பில் மாமல்லபுரத்தில் நடந்த சித்திரை திருவிழாவிற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பா.ம.க.வினர் ஆயிரக்கணக்கான வாகனங்களில் சென்றுள்ளனர். கிழக்கு கடற்கரை சாலையில் மரக்காணம் வழியாக சென்ற போது பகல் 12 மணியளவில் கலவரம் ஏற்பட்டுள்ளது. இக்கலவரத்தில் கட்டையன் தெரு தலித் சமூகத்தை சேர்ந்த சேட்டு என்பவரும், வன்னியர் தரப்பில் விவேக், செல்வராஜ் என்பவரும் உயிரிழந்துள்ளனர். போலீசு துப்பாக்கிச் சூட்டில் (ரப்பர் குண்டு) பா.ம.க. தரப்பில் நான்கு பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். பா.ம.க வினரின் தாக்குதலில் தலித்துக்கள் தரப்பில் மூன்று பேருக்கு தலையில் பலத்த காயம் என பத்துக்கும் மேற்பட்டோர் காயம்பட்டுள்ளனர். மூன்று அரசு பேருந்துகள் எரிக்கப்பட்டுள்ளன. நான்கு பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இரு சக்கர வாகனம் ஒன்றும், இன்னோவா காரும் கொளுத்தப்பட்டுள்ளன. கட்டையன் தெருவில் பத்து வீடுகளும், கழிக்குப்பத்தில் இரண்டு வீடுகளும், கூனிமேடில் ஒரு கறிக்கடையும் கொளுத்தபட்டதுடன், பல கடைகள் அடித்து சேதப்படுத்தப்பட்டுள்ளன. பொருள்களும் சூறையாடப்பட்டுள்ளன. டி.வி.எஸ் 50 வண்டி ஒன்றும் அடித்து சேதப்படுத்தப்பட்டது. விழுப்புரம் மாவட்ட காவல்துறை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது ஏழு வழக்குகள் பதிவு செய்துள்ளது.
பாதிப்புகள் குறித்தும், கலவரத்திற்கான காரணம் பற்றியும் கண்டறிய மனித உரிமை பாதுகாப்பு மையம் சார்பில் உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு 28-4-13 அன்று நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து விசாரித்தோம்.
உண்மை அறியும் குழுவினர் – மனித உரிமை பாதுகாப்பு மையம் ( HRPC )
வழக்கறிஞர்.சி.ராஜு, மாநில ஒருங்கிணைப்பாளர்
வழக்கறிஞர்.ச.செந்தில்குமார், செயலாளர், கடலூர் மாவட்டம்.
வழக்கறிஞர்.ர. புஷ்பதேவன், இணை செயலாளர், கடலூர் மாவட்டம்
வழக்கறிஞர்.பி.அருள் பிரகாஷ்
திரு.சங்கர்,
திரு.எஸ்.பிரகாஷ்
திரு.சந்திரசேகரன்
மரக்காணம் காவல் நிலையத்திற்கு 1 கி.மீ. முன்பாக மெயின் ரோட்டிலிருந்து உள்புறமாக சுமார் அரை கி.மீ. சென்றால் இருப்பது தான் கட்டையன் தெரு. தலித் மக்கள் சுமார் 4,000 குடும்பங்களுக்கு மேல் இங்கு வசிக்கின்றனர். கட்டையன் தெருவிற்கு செல்லும் சாலையைத் தவிர பிற பகுதியில் தைல மரங்கள் மற்றும் முந்திரி மரங்கள் அடர்த்தியாக உள்ளன. இவை வனத்துறைக்கு சொந்தமானவை.
பகல் 12 மணியளவில் தலித் இளைஞர்கள் நான்கு பேர் மெயின் ரோட்டில் மாநாட்டுக்கு சென்ற வன்னியர்களால் தாக்கப்படுகின்றனர். அதில் ரமேஷ் என்பவர் சுயநினைவிழக்கிறார். இச்செய்தி கேள்விபட்ட தலித் மக்கள் பெட்ரோல் பங்க் அருகில் உள்ள சாலை வழியாக மெயின் ரோட்டுக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட முயற்சிக்கின்றனர். இதனால் மாநாட்டுக்கு செல்லும் வாகனங்கள் தடைபடுகின்றன. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் போலீசார் தலித் மக்களை ஊருக்குள் செல்லும்படி விரட்டுகின்றனர். மாநாட்டுக்கு வந்தவர்களை சாலையிலிருந்து கலைந்து போகும்படி எச்சரிக்கின்றனர். இந்நிலையில் வாகனங்கள் கொளுத்தப்படுகின்றன. போலீசார் வானத்தை நோக்கி சுடுகின்றனர், பிறகு கூட்டத்தை பார்த்து ரப்பர் குண்டுகளால் போலீசார் சுடுகின்றனர். பா.ம.க.வினர் 4 பேருக்கு இதில் காயம் ஏற்படுகிறது. இதனால் கிழக்கு கடற்கரை சாலை வழியாக மாமல்லபுரம் செல்லும் நிலை முற்றிலும் அடைபட்டு போகிறது. பல கி.மீ.மாநாட்டு வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்கின்றன.
இந்த பதட்டமான நிலையில்தான் பா.ம.க.வை சேர்ந்த ஒரு கும்பல் தைல மரத்தோப்பு வழியாக கட்டையன் தெரு தலித் குடியிருப்பிற்குள் கழி, அருவாள், கம்பியுடன் நுழைந்து குடிசைகள் மேல் பெட்ரோல் பாம் போட்டு தீ வைக்கிறது. கண்ணில் பட்டவர்களை கடுமையாக தாக்குகிறது. பலாமரங்கள் முந்திரி மரங்கள் கூட தீக்கிரையாக்கப்படுகின்றன. இதில் சினை மாடு ஒன்று இறந்து விடுகிறது. தலித் சமூகத்தினை சார்ந்த கலைவாணன், ஏகாம்பரம், அல்லிமுத்து ஆகியோருக்கு தலையில் பலத்த காயம் ஏற்படுகிறது. படுகாயமடைந்த சேட்டு என்பவர் 28-4-13 அன்று சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்து விட்டார். பத்துக்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. போலீசு ஆய்வாளர் வானத்தை நோக்கி சுட்ட பிறகுதான் கலவரக்கரார்கள் கலைந்து தைல மரத்தோப்பின் வழியாக ஓடிவிட்டனர். கட்டையன் தெரு தலித் மக்கள் பெரும்பகுதியினர் பெட்ரோல் பங்க் மறியலுக்கு சென்று விட்டதால் சம்பவ நேரத்தில் குறைவான தலித்துக்களே அந்த பகுதியில் இருந்துள்ளனர். இதனால் பெரும் உயிர்ச்சேதம் நிகழவில்லை. அப்போது சுமார் மணி 02.30 இருக்கும்.
சம்பவத்தை பார்த்த பெண்கள் கூறும் போது ”நூற்றுக்கும் மேற்பட்டோர் வந்தனர். பலர் மஞ்சள் கலர் பனியன் போட்டிருந்தனர். பெருமளவில் இளைஞர்கள் கையில் தடி. கம்பி, வீச்சரிவாள், பீர்பாட்டில் வைத்திருந்தனர். எங்களை சாதி பெயரைச் சொல்லி அருவருக்கத்தக்க கெட்ட வார்த்தையில் பேசினர். ஜட்டியை அவிழ்த்து தலையில் போட்டு கொண்டு கைலியை தூக்கி வாங்கடி வாங்கடி என கூச்சலிட்டனர். அனைவரும் குடி போதையில் இருந்தனர். நாங்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினோம். பெட்ரோல் பாம் போட்டதால் வீட்டின் மண் சுவரை தவிர அனைத்தும் எரிந்து சாம்பாலாயின. தீயணைப்பு துறையினருக்கு அணைக்கும் வேலையே இல்லை” என்றனர்.
அது போல் ஏகாம்பரம் கூறும் போது ”சாதியை பற்றி கேவலமாக பேசிக் கொண்டே வேகமாக ஓடி வந்தனர். சுமார் 200 பேர் இருக்கும். தலையில் கிரிக்கட் பேட்டால் திரும்ப திரும்ப கடுமையாக தாக்கினர். 30 தையல் போட்டுள்ளேன். 2002 சம்பவத்தை மனதில் வைத்து தான் இந்த கலவரத்தை நடத்தியுள்ளனர்”.
கலைவாணன் என்பவர் கூறும் போது ”வந்தவர்கள் குடி போதையில் எதையும் கேட்காதவர்களாக வெறிபிடித்த மாதிரி நடந்து கொண்டனர். இன்ஸ்பெக்டர் வானத்தை நோக்கி சுட்டதால்தான் அவர்கள் தைல மரத் தோப்பு வழியாக ஓடினர். என்னை தடியால் தாக்கியதால் தலை முழுவதும் தையல் போட்டுள்ளேன். தலையில் அடித்ததால் நாக்கு நசுங்கி விட்டது. அங்கும் தையல் போட்டுள்ளேன். சண்டைக்கு வருவது போல் வந்தனர்”. அல்லிமுத்து என்பவர் ”என் கையில் பீர் பாட்டிலால் கிழித்து விட்டனர்” என்றார். இது போல் சிறிதும் பெரிதுமாக காயங்கள் ஏற்பட்டு பத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
“மரக்காணம் பெட்ரோல் பங்க் அருகில் 2002 ல் கொலைச் சம்பவம் நிகழ்ந்தது அதற்கு பழிவாங்கவே இன்று திட்டமிட்டு எங்களை தாக்கி வீடுகளை கொளுத்தியுள்ளனர். அரை கி.மீ.தைல மரத் தோட்டத்தை கடந்து வந்து பெட்ரோல் பாம் போட்டதும், வந்தவர்கள் எங்கள் மீது கொலை வெறித்தாக்குதல் நடத்தியதும், நன்கு திட்டமிடப்பட்டது” என குற்றம் சாட்டினர். “போலீசார் தங்களையும் கைது செய்வார்கள் என்ற அச்சத்தில் தலித் ஆண்கள் பலர் ஊரை விட்டு வெளியேறி விட்டனர்”, என போலீசை பற்றிய அச்சத்தையும் கூறினர்.
அதுபோல் மெயின் ரோட்டின் அருகில் உள்ள கழிக்குப்பம் என்ற தலித் குடியிருப்பில் இரண்டு வீடுகள் எரிக்கபட்டுள்ளன. கட்சி கொடிக்கம்பங்கள் வெட்டி சாய்க்கப்பட்டுள்ளன. சமுதாய கூடத்தின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. மூன்று அரசு பேருந்துகளில் இருந்து பயணிகள் இறக்கிவிடப்பட்டு கொளுத்தப்பட்டன. முற்றிலும் எரிந்து போனது. சில பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டன. டோல் கேட்டிலும் தகராறு செய்து கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. அங்கிருந்த ஊழியர்கள் தாக்கப்பட்டுள்ளனர். இவை அனைத்தையும் மாநாட்டிற்கு வந்த பா.ம.க.வினர்தான் செய்துள்ளனர்.
கூனிமேடு இஸ்லாமியர்கள் வாழும் பகுதி. இங்கும் வண்டியின் கூரை மீது அமர்ந்து கொண்டு குடித்து விட்டு ரோட்டில் போகும் பெண்களை ஆபாச வார்த்தைகளால் கிண்டல் செய்வது, பீர் பாட்டிலை குடித்து விட்டு சாலையில் போவோர் மீது வீசுவது என அத்துமீறல்கள் நடந்துள்ளது. பேன்சி கடையில் சிறுவர்கள் விளையாட்டு பொருள், ரெடிமேட் துணி கொள்ளையடிக்கபட்டுள்ளன. குடத்தை இடுப்பில் வைத்து டான்ஸ் ஆடிக் கொண்டு சென்றுள்ளனர். தடி, வீச்சரிவாள், கழி ஆகியவற்றை காட்டி கடையை சாத்த சொல்லி மிரட்டியுள்ளனர். இரு சக்கர வாகனத்தை ரோட்டில் போட்டு சேதப்படுத்தியுள்ளனர். டீ கடையில் உள்ள கிளாஸ் அனைத்தும் உடைக்கபட்டுள்ளன. இப்ராகிம் என்பவர் கறிக்கடையை தீ வைத்து கொளுத்தியுள்ளனர். மதர்சா அரபிக் பள்ளியில் படிக்கும் இஸ்லாமிய பெண்களை பார்த்து கைலியை தூக்கி காட்டியது என பா.ம.க.வினரின் அத்துமீறல் எல்லை தாண்டி தொடர்ந்ததால், ஊர் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பா.ம.க. கொடி கட்டிய அனைத்து வாகனங்களையும் அடிக்கத் தொடங்கினர். குறிப்பாக கூனிமேடு வன்னியர்களும், இஸ்லாமியர்களோடு சேர்ந்து பா.ம.க வண்டிகளை அடித்துள்ளனர். மரக்காணம் வழியாக மாநாட்டுக்கு போக முடியாமல் ஊருக்கே திரும்பி செல்ல முயன்ற நூற்றுக்கணக்கான பா.ம.க. வாகனங்கள், போலீசார் கூனி மேடு மக்களை சமாதானம் செய்த பிறகே மாலை 4-30 மணியளவில் பா.ம.க கொடிகளை கழட்டி அவ்வூரைத் தாண்டி அமைதியாக செல்ல அனுமதிக்கபட்டன.
கூனி மேடு இஸ்லாமிய இளைஞர்கள் “ராமதாசு தன் கட்சிகாரர்களை முதலில் திருத்தட்டும். முடிந்தால் குடிகாரர்களை கட்சியை விட்டு நீக்கட்டும், பிறகு மதுவை ஒழித்து மற்ற மக்களுக்காக போராடலாம்” என்றனர். இதுவரை ”இது போன்று சம்பவம் எங்கள் ஊரில் நடந்தது இல்லை. வன்னியர், மீனவர், இஸ்லாமியர், பிற சமூகத்தினர் அனைவரும் ஒன்றாக வாழ்கின்றோம். மகாபலிபுரம் சித்திரை விழாவை இனிமேல் நடத்த தமிழக அரசு தடை விதிக்க வேண்டும்” எனக் கூறினர். ”வருடா வருடம் குடித்து விட்டு வாகனத்தின் மேல் அமர்ந்து ரவுடித்தனம் செய்வதனையும் தொடர அனுமதிக்கக் கூடாது” எனக் கூறினர்.
வன்னியர் சங்க விழாவாக இருந்த சித்திரை பெருவிழா இன்று அனைத்து ஆதிக்க சாதியினரையும் இனணத்து நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு குருவின் சாதி வெறிப் பேச்சு தருமபுரி கலவரத்திற்கும், அதைத் தொடர்ந்து வட மாவட்டங்களில் தலித்துகளுக்கு எதிரான வன்முறையும் நிகழ காரணமாக இருந்தது. தற்போது மரக்காணத்திலும் அத்தகைய சாதி வெறிக்கலவரம் நடந்துள்ளது. இவ்வாறு தலித் மக்களுக்கு எதிராக கலவரம் தொடருவதை தமிழக அரசு தடுக்க வேண்டும் என்றும் கூறினர்.
கோட்டக்குப்பம், பிள்ளைச்சாவடி பகுதி கடைகளில் சாப்பிட்டுவிட்டு சரியாக பணம் கொடுக்காமலும், குடித்து விட்டு தகராறு என வழி நெடுகிலும் பிரச்சினை செய்ததால் ஊர் மக்கள் வரிசையில் நின்றிருந்த அனைத்து வாகனங்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியுள்ளனர்.
பா.ம.க.வை சேர்ந்த விவேக் பேருந்தில் இருந்து விழுந்து விபத்தில் இறந்து போனதாக அரசு அதிகாரிகள் கூறுகின்றனர். செல்வராஜ் கலவரத்தில் தாக்கபட்டு இறந்தாரா? அல்லது விபத்தின் காரணமாக இறந்தாரா என்பதை மருத்துவ பிரேத விசாரணை அறிக்கை வந்த பிறகுதான் உறுதியாக கூறமுடியும் என்ற நிலை உள்ளது.
மரக்காணம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அவர்களிடம் கலவரம் தொடர்பாக பதிவு செய்யபட்ட வழக்கு விபரங்களை கேட்டோம். ”உயர் அதிகாரிகளை கேட்காமல் கொடுக்க முடியாது.கேட்டுச் சொல்கிறேன் என கூறி பிறகு தொடர்பு கொள்ள முடியவில்லை” எனக் கூறிவிட்டார்.அந்த பகுதியில் பா.ம.க. தரப்பில் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. கலவரம் தொடர்பாக மருத்துவர் ராமதாசின் அறிக்கைகள் ஊடகங்களில் வெளி வந்துள்ளதை இக்குழு ஆராய்ந்துள்ளது.
முடிவுகள்
  1. மாநாட்டுக்கு வந்த பா.ம.க. தொண்டர்கள் பெருமளவில் குடி போதையில் இருந்துள்ளனர். வாகனத்தின் மேல் அமர்ந்து பயணித்ததுடன், ரோட்டில் போகும் பெண்களை ஆபாச வார்த்தைகளால் கிண்டல், கேலி செய்துள்ளனர். வாகனங்களில் ஆயுதங்கள், பெட்ரோல் பாம் எடுத்து சென்றுள்ளனர். பீர், பிராந்தி வாகனங்களில் போதுமான அளவில் கொண்டு வந்துள்ளனர்.
  2. 2002-ல் நடந்த சாதி பிரச்சினைக்கு பழி வாங்கும் நடவடிக்கையாகவே மரக்காணம் கட்டையன் தெரு தலித் மக்கள் மீதான தாக்குதல் பா.ம.க. வினரால் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது.
  3. தமிழக அரசு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடும் சித்திரை திருவிழா, போதையேற்றும் புதுச்சேரியை கடந்து செல்வது என்ற கூடுதல் முக்கியத்துவம், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான சாதி வெறியூட்டும் அரசியலை இராமதாசு எடுத்துள்ள சூழலில், மரக்காணம் ஏற்கனவே பிரச்சனைக்கு உரிய பகுதி என்பது தெரிந்தும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பது கண்டிக்கத்தக்கது.
  4. காவல்துறையினர் மிக அருகாமையில் இருக்கும் போதுதான் கட்டையன் தெரு தலித் மக்கள் தாக்கப்பட்டுள்ளனர் அவர்களின் வீடுகள் கொளுத்தப்பட்டுள்ளன.
  5. மாநாட்டுக்கு சென்ற பா.ம.க.வினர் குடித்து விட்டு காலித்தனம் செய்ததால்தான் தலித் மக்கள், இஸ்லாமியர்கள் மற்றும் வன்னியர்கள் என பொது மக்கள் ஒன்று சேர்ந்து பா.ம.க. வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பரிந்துரைகள்
  1. மரக்காணம் கலவரத்தில் பாதிக்கபட்ட தலித் மக்கள் அனைவருக்கும் வன்கொடுமை தடுப்பு சட்ட விதிகளின் அடிப்படையில் தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
  2. பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மரக்காணம் துணை கண்காணிப்பாளர் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  3. மகாபலிபுரம் சித்திரை திருவிழா வன்னியர் சங்க விழா என்பதை கடந்து அனைத்து ஆதிக்க சாதியினரும் தலித் மக்களுக்கு எதிராக ஒன்று சேரும் விழாவாக மாறியுள்ளது. எனவே வருங்காலத்தில் சித்திரை திருவிழா போன்று எந்த ஒரு ஆதிக்க சாதி விழாவினையும் நடத்த தமிழக அரசு அனுமதிக்க கூடாது. மேலும் வன்னியர் சங்கம் உள்ளிட்ட அனைத்து ஆதிக்க சாதி சங்கங்களையும் தடை செய்ய வேண்டும்.
  4. தங்களது பதவி ஆசைக்காக அடித்தட்டு மக்களிடையே சாதிவெறியை தூண்டி தமிழகத்தில் சாதிய மோதல்களை ஏற்படுத்தி தொடர்ந்து பதட்டத்தை உருவாக்கி வரும் மருத்துவர் ராமதாஸ், காடு வெட்டி குரு ஆகியோரை தமிழக அரசு கைது செய்து அமைதியை ஏற்படுத்த வேண்டும்.
வழக்கறிஞர் ராஜு,
மாநில ஒருங்கிணைப்பாளர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக