வெள்ளி, 3 மே, 2013

சூரியநெல்லி: பாலியல் பயங்கரத்தை விபசாரமாக்கிய நீதிபதி ! கேரளா அரசியல்வாதி குரியன் இன்னும் தண்டிக்கப்படவில்லை

நீதிபதி பாசந்த்17 ஆண்டுகள் ஓடி விட்டன. கிறிஸ்தவ விசுவாசிகளான அவளது பெற்றோர்கள் இப்போதெல்லாம் தேவாலயத்திற்கு செல்வதில்லை. குடும்பத்திற்குள் கூடி இறைவனைத் தினந்தோறும் வேண்டிக் கொள்கிறார்கள். வெளியே துணையாக இருப்பதாய் அவர்கள் நம்புவது அந்தக் கடவுளைத்தான். ஆனால் அவனது ஆலயத்திற்குள் செல்ல அவர்களால் முடியாது. 33 வயது நிரம்பிய அப்பெண்ணால் சினிமாவுக்கு போக முடியாது, ஒரு கடை கண்ணிக்கு போக முடியாது, எந்த விழாவுக்கும் ஏன் இழவுக்கும் கூட போக முடியாது.
தினந்தோறும் காலையில் பேருந்தில் அலுவலகம் சென்று விட்டு மாலையில் வீடு திரும்புகிறாள். அலுவலகத்தில் வேலை செய்யும் 13 பேரில் பெரும்பாலானோர் அவளது வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களது உறவினர்கள். எனவே தங்களது வெறுப்பை, புறக்கணிப்பை தினமும் அவள் மீது அவர்கள் உமிழ்கின்றனர். பேருந்தில் சென்றால் பயணிகள் அவளைப் பார்த்து தங்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள். தெரியாதவர்களை அழைத்து அவர்களிடமும் சொல்கிறார்கள் – “அவள்தான் அந்த சூரியநெல்லிப் பெண்.”
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சூரியநெல்லி கிராமத்தைச் சேர்ந்த அவளது அப்பா அஞ்சல் துறையில் ஒரு அலுவலர், அம்மா தேயிலைத் தோட்ட மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வந்தார். அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள். இளைய மகள்தான் அப்பெண். இளமையில் குடல் சுருக்க நோயால் அவதிப்பட்ட அவளுக்கு இரண்டு அறுவைச் சிகிச்சைகள் நடந்துள்ளன. பள்ளிக்கு செல்ல தினமும் 3 கிமீ தூரம் போக வேண்டியிருந்ததால் அவளுக்கு மாத்திரம் உதவிக்கு ஆள் வைத்தனர் பெற்றோர். 8-ம் வகுப்புக்கு மேல் அங்கு படிக்க வசதியில்லாத காரணத்தால் கோட்டயத்தில் விடுதியில் சேர்க்கப்பட்டாள். அந்த ஆண்டு தனிப்பயிற்சி ஆசிரியையிடம் காட்டுவதற்காக தனது புகைப்படமொன்றை எடுத்துச் செல்கிறாள் சூரியநெல்லிப் பெண்.

பேருந்தில் தவறி விழுந்த அப்புகைப்படத்தை கண்டெடுக்கிறான் நடத்துனரான அவளது நண்பன். கேட்டதற்கு தர மறுக்கிறான். மலைப்பகுதி கிராமப்புறத்தை சேர்ந்த விபரமறியாத பெண் என்பதால் மிரட்டத் துவங்குகிறான். தான் சொல்வதைக் கேட்காவிட்டால் அவளது புகைப்படத்துடன் நிர்வாண படமொன்றை இணைத்து நகரம் முழுவதும் போஸ்டர் ஒட்டி விடுவதாக மிரட்டுகிறான். இதற்கெல்லாம் பயப்பட வேண்டியதில்லை என்பதைக் கூட அறிந்திராத அப்பெண் பரிதவிக்கிறாள். பெற்றோரிடம் சொல்லவும் அவளுக்கு பயம். தனது ஒழுக்கத்தைத்தான் கேள்வி கேட்பார்கள் என்பதால் யாரிடமும் அவள் உதவி கேட்கவில்லை. விடுதிக்கு போன பிறகும் விடாது அவளைத் துரத்தும் அவன் அடுத்த ஆண்டு தன் வழிக்குக் கொண்டு வருகிறான்.
பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த அவளைப் பார்த்த உறவினர் ஒருவர் அன்று மாலையே அவளது பெற்றோருக்கு தொலைபேசியில் தகவல் தெரிவிக்கிறார். சந்தேகமடைந்த பெற்றோர் விடுதிக்கு ஃபோன் போடவே பெண் காணாமல் போனது தெரிய வருகின்றது. காவல் நிலையத்தில் புகார் செய்கின்றனர். 45 நாட்கள் தொடர்ந்து அப்பெண்ணை எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது நடந்தது16 ஜனவரி 1996 இல். ஒரு நாள் அப்பெண் தந்தையின் அலுவலகத்திற்கு வந்து சேர்கிறாள். அவளது கோலத்தை பார்க்க சகிக்காத அவளது தந்தை கழிவறைக்குள் சென்று விம்மி அழுகிறார்.
மருத்துவமனையில் சேர்க்கிறார்கள். அவளது உடலிலும், பிறப்புறுப்பிலும் கடுமையான காயத்துடன் சீழ் பிடித்து இருந்ததுடன், நோய்த்தொற்றும் கடுமையாக இருந்திருக்கிறது. அப்போதுதான் தனக்கு நேர்ந்த பயங்கரத்தை அப்பெண் சொல்ல ஆரம்பிக்கிறாள். அவளைக் கூட்டிச் சென்ற நடத்துநர் முதலில் அவளை வல்லுறவு செய்கிறான். பின்னர் அவனது கூட்டாளிகள் ஏற்கெனவே தீட்டியிருந்த திட்டத்தின்படி சூரியநெல்லிப் பெண்ணை உஷா தேவி என்ற பெண்ணும், தருமராசன் என்னும் வழக்கறிஞரும் கூட்டிச் செல்கிறார்கள். அந்த வழக்கறிஞர் முதலில் வல்லுறவுக்கு ஆளாக்குகிறான். பிறகு ஒருவர் கைமாற்றி ஒருவராக 41 நபர்கள் அப்பெண்ணை பாலியல் வல்லுறவு செய்திருக்கிறார்கள். நடக்கக் கூட முடியாத நிலைமையில் திரும்பி வந்த அப்பெண்ணின் வயது அப்போது 16 ஆண்டு 3 மாதம்.
இரண்டு வாரம் கழித்து தினசரி பத்திரிகையொன்றைப் படிக்கும்போது அதில் தன்னை இடுக்கி அரசு விருந்தினர் இல்லத்தில் வைத்து பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கினவனது புகைப்படத்தைக் காண்கிறாள். அது பிஜே குரியன், அன்றைய மத்திய அமைச்சர். தற்போதைய ராஜ்யசபாவின் துணைத்தலைவர். அதாவது பெண்கள் மீதான வன்கொடுமைக்கெதிரான சட்ட திருத்தங்களை முன்வைக்கும் வர்மா கமிசனது அறிக்கையை ராஜ்யசபா விவாதிக்கையில் அவையை நடத்தப் போகின்ற சபாநாயகர். உடல் முழுதும் ரோமம் இருக்கும் நபர் என அடையாளம் காட்டி குரியன் மீதும் புகார் தருகிறார் சூரியநெல்லிப் பெண்.
அந்த ஆண்டு கேரள சட்டமன்றம் மற்றும் பாராளுமன்ற தேர்தல் ஒன்றாக வந்தது. சூரியநெல்லிப் பெண் தான் தேர்தல் பிரச்சாரத்தின் மையமான பேசு பொருள். தேர்தலில் வென்ற இடது முன்னணி தலைமையிலான அரசு இவ்வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தை அமைத்தது. ஆனால்1999 இல் விசாரணை துவங்கியபோது குற்றம்சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் இருந்து குரியனது பெயர் நீக்கப்பட்டிருந்தது.
2000 ஆவது ஆண்டில் அப்பெண்ணுக்கு விற்பனை வரித்துறையில் கடைநிலை ஊழியர் பதவி கருணை அடிப்படையில் வழங்கப்பட்டது. அந்த ஆண்டு வந்த தீர்ப்பில் 35 பேர் 4 ஆண்டு முதல் ஆயுள் வரை தண்டனை பெற்றனர். 4 பேர் விடுவிக்கப்பட்டனர். 2 பேர் தலைமறைவாயினர். தருமராசனுக்கு மட்டும் ஆயுள்தண்டனை. 2005 இல் குற்றவாளிகளின் மேல்முறையீட்டின் பேரில் 35 பேரையும் விடுவித்த கேரள உயர்நீதி மன்றம், தருமராசனது தண்டனையை 5 ஆண்டுகளாக குறைத்தது. தருமராசனின் தண்டனைக்கான குற்றத்தை பாலியல் வல்லுறவு என்பதிலிருந்து பெண்ணை விபச்சாரத்தில் ஈடுபடுத்துதல் என மாற்றியது கேரள உயர்நீதி மன்றம்.
பாலியல் வன்முறையை விபச்சாரமாக மாற்றிய நீதிபதி பாசந்த்
குற்றம் சாட்டும் பெண் பாலியல் உறவுக்கான வயதை எட்டி விட்டதால் தனது சம்மதமில்லாமல்தான் பாலுறவு நடந்தது என்பதை நிரூபிக்க அவர் தரப்பு தவறி விட்டதாகவும் அத்தீர்ப்பில் சொல்லப்பட்டிருந்தது. பாலியல் வல்லுறவுக்குள்ளாகிய பெண் கடைசியில் நீதித்துறையின் பார்வையில் ஒரு விபச்சாரியாக மாற்றப்படுவது நடந்தேறியது.
‘வலுக்கட்டாயப்படுத்தினால் சத்தமோ அல்லது அழுகையோ வந்திருக்க வேண்டும். இப்படி ஏதேனும் நடந்ததாக அப்பெண் நிரூபிக்கவில்லை, எனவே அவளது சம்மதத்துடன்தான் உறவு நிகழ்ந்திருக்கிறது’ என்று தீர்ப்பெழுதினர் அப்துல் கபூர், பசந்த் என்ற இரு உயர்நீதிமன்ற நீதிபதிகள். உச்சநீதி மன்றத்தில் பெண் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
வழக்கில் குரியனையும் சேர்த்துக் கொள்ள போலீசு தவறி விட்டதாக அப்பெண் பீர்மேடு மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் வழக்குத் தொடர்கிறாள். குற்றச்சாட்டிற்கு முகாந்திரம் இருப்பதாக கருதிய நீதிமன்றம் குரியனை நேரில் விசாரணைக்கு அழைக்கிறது. கேரள உயர்நீதி மன்றத்தை அணுகிய குரியனை ஏற்கெனவே அனைவரும் விடுவிக்கப்பட்ட வழக்கில் புதிதாக யாரையும் சேர்க்கத் தேவையில்லை எனக் கூறி நீதிமன்றம் விடுவித்தது. இத்தீர்ப்பின் அடிப்படையில் உச்சநீதி மன்றம் குரியன் மீதான குற்றச்சாட்டை நிராகரித்து விட்டது. 2007 இல் இத்தீர்ப்பு வெளியானது.
முதலில் அப்பெண் மீது அனுதாபம் கொண்டிருந்த மலையாள மனோரமா போன்ற பத்திரிகைகள் பின்னாட்களில் பாசந்தின் சொற்களை வழிமொழிந்தன. அப்பெண் காதலனுடன் ஓடிப்போய் சீரழிந்தவளாக சித்தரிக்கப்படத் துவங்கினாள்.
பல முனைகளில் அவர்களுக்கு அச்சுறுத்தல் வந்தது. அவளது எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதற்காக வழக்கை வாபஸ் பெறச் சொல்லி சிலர் ‘நல்லுபதேசம்’ செய்தனர். காவல்துறையினர் மிரட்டினர். உறவினர்களிடமிருந்தும் தனிமைப்படுத்தப்பட்டனர். தேயிலைத் தோட்டத்தில் இருந்தபோது தோட்டத் தொழிலாளர்கள் இவர்களுக்கு பக்கபலமாக இருந்துள்ளனர். அவளது தாய் ஓய்வுபெற்ற பிறகு சமவெளிக்கு வந்து சூரியநெல்லியில் சொந்த வீட்டில் குடியேறினார்கள். உறவினர்கள், சுற்றத்தார் யாருடனும் பேச்சு வார்த்தை வைத்துக்கொள்ள முடியாத சமூக விலக்கு அவர்கள் மீது அப்போது அமுலில் இருந்தது. ஒதுக்குப் புறமாக இருக்க வேண்டும் எனப் பார்த்தே அந்த வீட்டை அவர்கள் கட்டியிருந்தனர்.
ஆனால் அப்பகுதிக்கு சுற்றுலா வரும் பலரும் சூரியநெல்லிக்கு வந்து அந்த வீட்டை நோக்கி வரத் துவங்கினர். தாங்கள் வந்த வாகனங்களை வெளியில் நிறுத்திவிட்டு, அனுமதியின்றி வீட்டிற்குள் வந்து பார்ப்பதும், அப்பெண்ணிடம் எப்படி சம்பவம் நடந்தது? என்ன செய்தார்கள்? எனக் கேள்விகளால் அப்பெண்ணைச் சூறையாடத் துவங்கினர். சூரியநெல்லிப் பெண்ணின் துயரம் கேளிக்கை சுற்றுலாவின் அங்கமாக மாறியது.
2005 கேரள உயர்நீதிமன்றத் தீர்ப்பு அவர்களை அங்கிருந்து விரட்டத் துவங்கியது. யாரும் வர முடியாத தனிமையான வீடு ஒன்றை கோட்டயம் சிங்கவனம் பகுதியில் அவர்கள் தேடிக் கொண்டார்கள்.“நாங்கள் இங்கு வரும் போது சுற்றிலும் ஒன்றிரண்டு வீடுகள்தான் இருந்தன. யாரையும் பார்க்க வேண்டியதிருக்காது என்பதால் இதுதான் எங்களுக்கு நல்லது எனக் கருதினோம்” என்கிறார் அவளது தாய். ஏற்கெனவே அவர்களது தொடர்ச்சியான சட்டப் போராட்டங்களால் உறவினர்கள் புறக்கணித்திருந்தனர். சுற்றுமுற்றும் யாருக்கும் அவர்களைத் தெரிந்திருக்கவில்லை. வீட்டிற்குள் தினமும் முழங்கால் படியிட்டு இறைவனிடம் வேண்டத் துவங்கினர். இடையில் அவர்கள் உச்சநீதி மன்றத்தில் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவிற்கு வழக்கு எண் வழங்கப்படுகிறது. விரைவில் மனு விசாரிக்கப்படும் எனத் தெரிகிறது. இறைவன் தங்களைக் கைவிடவில்லை என அவர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். ஆனால் இந்த மகிழ்ச்சி நீண்டநாள் நிலைக்கவில்லை. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஒரு நாள் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த அப்பெண் கைது செய்யப்படுகிறாள். விற்பனை வரித்துறை அலுவலகத்தில் ரூ.2.26 லட்சத்தை கையாடல் செய்து விட்டாள் என்பது குற்றச்சாட்டு. ஆனால் வங்கியில் கட்டியதற்கான பதிவேடு தொலைந்து போயிருந்ததால் கட்டியதற்கான ஆதாரம் இல்லை எனச் சொல்லிதான் இந்த வழக்கே பதிவானது.
இப்பெண்ணுடன் இன்னும் இரண்டு பெண்களும் துறைவாரியான விசாரணைக்குட்படுத்தப்பட்டாலும், இவளுக்கு மட்டும் பிணை மறுக்கப்பட்டு ஒருவாரம் சிறையில் இருக்க நேர்ந்தது. மற்றவர்களுக்கு வெறும் இட மாறுதல் மட்டும் தான். தங்களது இரு மகள்களின் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த நகைகளை அடகு வைத்து, பணத்தைக் கட்டி மகளை மீட்டனர் அப்பெற்றோர். பின்னர் நகையை மீட்க இயலாமல் அதுவும் மூழ்கிப் போனது.
பி.ஜே.குரியன்
ராஜ்யசபா துணைத்தலைவர் பி.ஜே.குரியன், சூரிய நெல்லி குற்றவாளிகளில் ஒருவர்.
தன் மீது குற்றம்சாட்டுபவர்கள் யோக்கியமானவர்கள் இல்லை என்று அவதூறு செய்வதன் மூலம், தன்னை யோக்கியனாக காட்டிக் கொள்வதற்கு குற்றவாளிகள் செய்யும் முயற்சி இது என்பது அப்பட்டமான உண்மை. இருப்பினும் பேருந்து நிறுத்தத்தில் வைத்து கைதானதாலும், திருடி எனப் பட்டம் கிடைத்ததாலும் அந்தப் பகுதி மக்களும் அவளை திருடி என எச்சரிக்கையோடு பார்த்து விலகி நடக்கத் துவங்கினர்.
கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்னர்தான் சூர்யநெல்லிப் பெண் இங்கிருப்பதையே தெரிந்து கொள்ள முடிந்தது என்கிறார் அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அப்பகுதித் தலைவி. பகுதியின் முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினரான பெண் ஒருவர், அப்பகுதி மக்களது புறக்கணிப்பால் இவர்களுக்கு உதவி கிடைப்பது சாத்தியமில்லாமல் இருந்ததை ஒத்துக்கொள்கிறார். கைதான போது அப்பெண் உறுப்பினராக இருந்த பணியாளர் சங்கமும் உதவ முன்வரவில்லை.
“உச்சநீதி மன்றத்தில் வழக்கு எண் இடப்பட்டிருந்த காரணத்தால் அவளது நேர்மையின்மையை நிரூபிக்க முயன்ற எதிர்தரப்பின் கைங்கர்யமே இது’’ என்கிறார் சிபிஎம் சார்பு கலைக்குழுவைச் சேர்ந்த சுஜா சூசன் ஜார்ஜ்.
இந்தியா விஷண் என்ற மலையாள சேனலில், “அப்பெண் விபச்சார சிறுமி! அது பாலியல் வல்லுறவுமல்ல! அவள் பள்ளிக்கு கட்ட வேண்டிய பணத்தை தந்தையிடம் பெற்றுக்கொண்டு வீணாக செலவு செய்வாள். சிறுவயது முதலே அவளது நடத்தை யோக்யமானதல்ல..” எனப் பலவாறாக உளறியுள்ளார் நீதிபதி பாசந்த். அதற்கு சில நாட்கள் முன்னர்தான் ஜனவரி 31, 2013 அன்று அப்பெண்ணின் தாய் போட்ட மனுவை ஏற்றுக்கொண்ட உச்சநீதி மன்றம் ஆறு மாதங்களுக்குள் மறுவிசாரணை நடத்தி முடிக்க கேரள உயர்நீதி மன்றத்திற்கு உத்திரவிட்டிருந்தது.
இதற்கிடையில் தலைமறைவாக உள்ள தருமராசன் ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் குரியனை விருந்தினர் மாளிகைக்கு அனுப்பியது தான் என ஒத்துக்கொண்டிருக்கிறார். விடுவிக்கப்பட்ட சிலர்“நாங்கள் தவறு செய்தது உண்மைதான், நான் பார்த்துக் கொள்கிறேன் என எங்களுக்கு பக்கபலமாக இருந்தவர் குரியன்” என்றும் சொல்லத் துவங்கியுள்ளனர்.
கேரளத்தில் 2007 முதல் கடுமையான போராட்டங்கள் நடந்து வருகின்றன. ஆனாலும் மொத்த இந்தியாவும் எழுந்து விடவில்லை. வல்லுறவுக் குற்றவாளியின் சமூக அந்தஸ்தும், பாதிக்கப்படுபவர்களின் வர்க்கப்பின்னணியும்தான் பிரச்சினையை பேச வைக்கவோ அல்லது பேசாமல் இருத்தவோ வைக்கிறது. வல்லுறவு செய்தவர்கள் டெல்லியின் பேருந்து தொழிலாளியாய் இருந்து பாதிக்கப்பட்ட பெண் நடுத்தர வர்க்கமாகவும் இருந்தால் நடுத்தர வர்க்கம் மெழுவர்த்தி பிடிக்கிறது. வாச்சாத்தி பெண்கள், ராஜஸ்தானின் பன்வாரி தேவி, அரியானாவில் கும்பல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட தலித் பெண்கள் என இதற்கு ஏராளமான சான்றுகள் உண்டு. குரியன் வழக்கை மீண்டும் நீதிமன்றத்தில் எழுப்புவதற்கு 16 ஆண்டுகளும், டெல்லி பாலியல் பலாத்காரத்துக்கு எதிரான பெரும் மக்கள் போராட்டமும் தேவைப்பட்டிருக்கின்றன.
சமீபத்தில் மகாராஷ்டிர மாநிலத்தில் பாலியல் வல்லுறவுக்குள்ளான தலித் சிறுமிகளின் பெயர்களை வெளிப்படையாக உள்துறை அமைச்சர் ராஜ்யசபாவில் தெரிவித்து விட்டார். பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிடுவது சட்டப்படி குற்றம் என்று முழங்கினார் அருண்ஜெட்லி.
அருண் ஜெட்லி கூறியதை கவனிக்க வேண்டிய முக்கியமான செய்தி என ஷிண்டேக்கு ஞாபகமூட்டினார் அவையை நடத்திக் கொண்டிருந்த குரியன். 2007 இல் குரியனுக்காக உச்சநீதி மன்றத்தில் வாதாடி அவரை குற்றத்திலிருந்து விடுவித்தவர் ராஜ்ய சபா எதிர்க்கட்சித் தலைவரான பாஜக வின் அருண் ஜேட்லி.
எப்படியும் என் சாவுக்கு முன்னரே நீதி கிடைத்து விடும் என நம்புகிறார் சூரியநெல்லிப் பெண்ணின் நடமாட இயலாத75 வயது தந்தை. “இந்த வேதனையையும், அவமானத்தையும் சுமக்கவா பிழைக்க வைத்தாய் இறைவா” எனக் கதறியபடி நியாயத்தீர்ப்பு நாளை மனதில் வைத்து நம்பிக்கையுடன் காத்திருக்கிறாள் அந்தத் தாய்.
- வசந்தன்vinavu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக