செவ்வாய், 21 மே, 2013

கடன் : குடும்பத்தையே கொன்றுவிட்டு டிராவல்ஸ் அதிபர் தற்கொலை


ஆலந்தூர்:கடன் பிரச்னையால் தனது அம்மா, மனைவி, மகளை கத்தியால் குத்தி கொன்றுவிட்டு, ரயிலில் பாய்ந்து டிராவல்ஸ் அதிபர் தற்கொலை செய்துகொண்டார். அவரது சடலம் தண்டவாளத்தில் இன்று மீட்கப்பட்டது. ஆதம்பாக்கத்தில் பூட்டிய வீட்டில் இருந்து 3 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகர் 42வது தெருவில் உள்ள ஒரு வீட்டின் முதல் தளத்தில் வசித்தவர் சுந்தரேசன் (48). சொந்தமாக 2 கார் வைத்து டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். இவரது மனைவி சித்ரா, மகள் தாமிரா (10). இவர்களுடன் சுந்தரேசனின் அம்மா தங்கம்மாளும் வசித்தார். அனைவரும் இலங்கையை சேர்ந்தவர்கள். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு சுந்தரேசன் சென்னை வந்தார். தில்லை கங்கா நகரில் 10 ஆண்டாக வாடகை வீட்டில் வசித்தார்.


இன்று காலை 4.30 மணியளவில் பழவந்தாங்கல் & பரங்கிமலை ரயில் தண்டவாளத்தில் ஒருவர் அடிபட்டு ஒருவர் இறந்து கிடப்பதாக எழும்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இறந்தவரின் சட்டை பாக்கெட்டில் இருந்த டைரியை எடுத்து அதில் இருந்த செல்போன் நம்பரை போலீசார் தொடர்பு கொண்டனர். தில்லை கங்கா நகரை சேர்ந்த ஒருவர் பேசியதும், இறந்தவர் சுந்தரேசன் என்பது தெரிந்தது. மேலும் தில்லை கங்கா நகரில் பதற்றமாக இருப்பதும் தெரிந்தது. உடனே ஆதம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பரங்கிமலை உதவி கமிஷனர் முருகேசன், இன்ஸ்பெக்டர் இளவரசன், தனசெல்வன், ஜெகதீஸ்வரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். சுந்தரேசன் வீட்டின் கதவு வெளிப்பக்கம் பூட்டியிருந்தது. பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு சித்ரா, தங்கம்மாள், தாமிரா ஆகியோர் கழுத்து, மார்பில் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். இதை பார்த்ததும் அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் 3 சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

சுந்தரேசன் உடல் பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் சீமா வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடியது. பின்னர் போலீசார் அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தனர். ‘நள்ளிரவில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த போது, ‘காப்பாற்றுங்க என சிறுமியின் சத்தம் கேட்டது. உடனே சிலர் எழுந்து சென்று பார்த்துள்ளனர். அப்போது ஒருவர் கதவை பூட்டிவிட்டு ஓடியுள்ளார் என்பது தெரிந்தது. இதனால் தாயையும் மனைவியையும் சுந்தரேசன் கொலை செய்ததை மகள் பார்த்திருக்க வேண்டும். இதனால் மகளையும் அவர் கொலை செய்திருக்க வேண்டும் என போலீசார் கருதுகின்றனர்.

மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்த தகவல்கள்:

சுந்தரேசன் பழகுவதற்கு இனிமையானவர். மிகவும் அமைதியானவர். அவர், இங்குள்ள பொருட்களை கனடா, இலங்கை, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு அனுப்புவதும், அங்குள்ள பொருட்களை வாங்கி இங்கு விற்பனை செய்வதுமான தொழிலை செய்து வந்துள்ளார். எப்போதும் பணப்புழக்கத்தில் இருந்துள்ளார். கொடுத்த சரக்குக்கு பணம் வராததால் சில நாட்களாக மனம் உடைந்த நிலையில் இருந்துள்ளார்.

இதனால் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும் தொழிலை தொடர்ந்து நடத்த சிலரிடம் கடன் வாங்கியுள்ளார். அவர்களிடம் குறிப்பிட்ட தேதியில் தந்துவிடுவதாகவும் கூறியுள்ளார். அதனால் கடன் தொல்லையும் அதிகமாக இருந்தது. அவர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் தவித்துள்ளார். அதனால் விரக்தியில் மனைவி, தாயை கொன்று விட்டு குழந்தையை கொன்றிருக்கலாம். பயத்தில் அவரும் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்திருக்கலாம் என தெரிகிறது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

ஆதம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து கடன் தொல்லையால்தான் இச்சம்பவம் நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரிக்கின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் சோகமும் ஏற்பட்டுள்ளது.dinakaran.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக