வியாழன், 9 மே, 2013

2 பாமாகவினர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது ! வைகொநெடுமாசீமாபாண்டி ஜாக்கிரதை ! கலைஞர் மாதிரி தயவு காண்பிக்கமாட்டார்

தர்மபுரி மாவட்டத்தில், தரை பாலத்தை, வெடிகுண்டு வைத்து சேதப்படுத்திய
வழக்கில், பா.ம.க.,வைச் சேர்ந்த இரண்டு பேரை, தேசிய பாதுகாப்பு சட்டத்தில்
போலீசார் கைது செய்துள்ளனர். இது, பா.ம.க.,வினருக்கு பீதியை ஏற்படுத்தி
உள்ளது.மரக்காணம் கலவரத்துக்கு நீதி விசாரணை கோரி, விழுப்புரத்தில்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், தலைவர் மணி
உள்ளிட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து வன்னியர் சங்க தலைவர்
 காடுவெட்டி குரு, அன்புமணி உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து, வடமாவட்டங்களில், பஸ்கள் மீது கல்வீச்சு, தீ வைப்பு, பெட்ரோல்
குண்டுகள் வீச்சு போன்ற வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. கண்டெய்னர்
லாரி மீது, பெட்ரோல் குண்டு வீசியதில், அரியானாவைச் சேர்ந்த டிரைவர்
செகர்கான் என்பவர் பலியானார்.
வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில், டாஸ்மாக் கடைகள் பெட்ரோல்
குண்டு வீசி எரிக்கப்பட்டன. தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் அடுத்த
கர்த்தாங்குளம் அருகே கடந்த, 3ம் தேதி, தரை பாலம், வெடிகுண்டு வைத்து
தகர்த்தப்பட்டது. இதில், அந்த பகுதியில் உள்ள குடிநீர் குழாய் சேதம்
அடைந்தது.

தே.பா., சட்டம்

விசாரணையில், மொரப்பூர் அடுத்த, மூக்கனூர் பட்டி கிராமத்தை சேர்ந்த
சுரேந்தர், 36, தீர்த்தலிங்கம், 24, ஆகியோர் பாலத்துக்கு வெடி குண்டு
வைத்தது தெரிய வந்தது. இருவரும், பா.ம.க.,வை சேர்ந்தவர்கள். இவர்கள்,
மொரப்பூர் பகுதியில், அரசு பஸ் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய வழக்கில்
இம்மாதம், 5ம் தேதி கைது செய்யப்பட்டு, சேலம் சிறையில்
அடைக்கப்பட்டுள்ளனர்.தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்ட, சுரேந்தர்,
தீர்த்தலிங்கம் ஆகியோரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க,
தர்மபுரி கலெக்டர் லில்லிக்கு, எஸ்.பி., ஆஸ்ரா கர்க் பரிந்துரை செய்தார்.
இருவரையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க, கலெக்டர்
உத்தரவிட்டார். இருவரும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட
உத்தரவை, சேலம் சிறை அதிகாரிகள் மூலம் போலீசார், இருவரிடமும் வழங்கினர்.



பீதி

பா.ம.க.,வினர் இருவர், தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது
செய்யப்பட்டுள்ளது, வன்முறையாளர்களிடையே, பீதியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த,
 20 ஆண்டுகளுக்குப் பின், தர்மபுரிமாவட்டத்தில் தற்போது தான், இரண்டு பேர்
தேசிய பாதுகாப்பு சட்டத்தில், சிறை பிடிக்கப்பட்டிருப்பதாக போலீசார்,
தெரிவித்தனர்.இதே போல், அரூர் அடுத்த கம்பைநல்லூர் - வெதரம்பட்டி சாலையில்,
 சின்மல்லிப்பட்டியில் உள்ள சிறு பாலத்தை கடந்த, 5ம் தேதி மர்ம நபர்கள்
வெடி வைத்து தகர்த்தனர். இது தொடர்பாக, கம்பைநல்லூர் போலீசார், நேற்று,
நான்கு பேரை பிடித்து, விசாரணை நடத்தி வருகின்றனர். விரைவில், இவர்கள்
மீதும் தே.பா., சட்டம் பாயும் என தெரிகிறது.

தொடரும் மிரட்டல்

நேற்று முன்தினம், பா.ம.க., மற்றும் வன்னியர் சங்கத்தை சேர்ந்தவர்கள்,

"தர்மபுரியில் நாளை (நேற்று) கடைகள் முழு அடைப்பு; ஆட்டோக்கள் ஓடாது' என,
பிட் நோட்டீஸ்களை வினியோகம் செய்து, "கடைகளை அடைக்க வேண்டும்' என,
வியாபாரிகளை மிரட்டினர்.மிரட்டல் விடுத்த, ஆறு ஆட்டோ டிரைவர்களை, போலீசார்
பிடித்து விசாரித்து வருகின்றனர். பா.ம.க.,வினர் மிரட்டலால், பீதியடைந்த
பெரும்பாலான வியாபாரிகள் நேற்று கடைகளை திறக்க வில்லை. சில கடைகள் வழக்கம்
போல் திறந்திருந்தன.நேற்று காலை,டூவீலர்களில் வந்த பா.ம.க., வினர்
திறந்திருந்த கடைகளையும் அடைக்கச் சொல்லி மிரட்டினர். வியாபாரிகளும்,
மிரட்டலுக்கு பயந்து அடுத்தடுத்து கடைகளை அடைத்தனர். பஸ் நிலையத்தில் உள்ள
கடைகள் அடைக்கப்பட்டதால், வெளியூர் பயணிகள், உணவு மற்றும் குடிநீர்,
குழந்தைகளுக்கு பால் போன்றவை கிடைக்காமல் அவதிப்பட்டனர்.

தர்மபுரியை அடுத்த எ.கொல்லஹள்ளி அரசு துவக்கபள்ளி வளாகத்தில், வி.ஏ.ஓ.,
அலுவலகம் உள்ளது. இவ்வலுவலகத்திற்கு, மர்ம நபர்கள் நேற்று காலை தீ
வைத்தனர். அரூர் பகுதியில் அரசு பஸ்கள் மீது கல்வீசி சேதப்படுத்திய அரூர்
பழையபேட்டையை சேர்ந்த ரகு, 26, சேட்டு, 25 ஆகியோரை போலீசார் நேற்று கைது
செய்தனர்.



குண்டாசும் பாயும்!

வன்முறையில், தொடர்ந்து ஈடுபடுவோர் மீது, குண்டர் சட்டத்தின் கீழ்
நடவடிக்கை எடுக்க, போலீசார் முடிவெடுத்துள்ளனர். போலீஸ் அதிகாரி, ஒருவர்
கூறியதாவது:வடமாவட்டங்களில், கண்காணிப்பை பலப்படுத்தி உள்ளோம். ஜாமினில்
வெளியே வரும், பா.ம.க.,வினரை முன்னெச்சரிக்கையாக கைது செய்ய
உத்தரவிட்டுள்ளோம். பல மாவட்டங்களில் கைது நடவடிக்கை
தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அரசு பஸ்கள், டெப்போக்களுக்கு பாதுகாப்பு
அதிகரிக்கப்பட்டுள்ளது. மீறி, தாக்குதலில் ஈடுபடுபவர்களை, குண்டர்
சட்டத்தின் கீழ் கைது செய்வது குறித்து ஆலோசனை செய்து வருகிறோம்.இவ்வாறு,
அவர் கூறினார்.



குண்டர் சட்டம்:

குண்டர் சட்டத்தை பொறுத்தவரை, மாநிலங்களுக்கிடையில் வேறுபடுகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை, தொடர் திருட்டு, மதுபானங்கள் கடத்துதல், உணவுப்
பொருட்கள் கடத்துதல், விபசார குற்றங்களில் ஈடுபடுவார், பொதுமக்களின்
அமைதிக்கு பங்கம் விளைவிக்கும்



Advertisement

நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடுவோர் மீது, குண்டர் சட்டத்தின் கீழ்
நடவடிக்கை எடுக்கப்படுகிறது.இதற்கான அடிப்படை ஆதாரங்களுடன் ஆவணங்கள்
தயாரிக்கப்பட்டு, போலீஸ் கமிஷனர் அல்லது மாவட்ட எஸ்.பி.,யின் உத்தரவுப்படி,
 குண்டர் சட்டத்தின் கீழ், சம்பந்தப்பட்டவர் சிறையில் அடைக்கப்படுவார்.
இதன்படி, ஓராண்டுகாலத்திற்கு அந்த நபர், சிறையில் இருந்து வெளியில்
வரமுடியாது.குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டவர் குறித்த விவரங்கள், ஓய்வு
பெற்ற நீதிபதிகள் அடங்கிய, அறிவுரைக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டு,
 அக்குழு, முகாந்திரம் இருந்தால் உறுதி செய்யப்படலாம்; இல்லாவிட்டால்,
விடுவிக்கவும் வாய்ப்புள்ளது.

தேசிய பாதுகாப்பு சட்டம்:

தேசிய பாதுகாப்பு சட்டத்தை பொறுத்தவரை, இந்திய இறையாண்மைக்கு எதிராக
செயல்படுபவர்கள், பேசுபவர்கள் மீது அமல்படுத்தப்படுகிறது. குறிப்பாக,
மதக்கலவரத்தை தூண்டுதல், வெடிகுண்டு வைத்தல், அமைதிக்கு பங்கம் விளைவித்தல்
 உள்ளிட்டவற்றில் ஈடுபடுபவர்கள் மீது, மத்திய அரசோ, மாநில அரசோ, தே.பா.,
சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கலாம்.போலீஸ் அதிகாரிகள் பரிந்துரைப்படி,
மாவட்ட கலெக்டர் இதற்கான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். இந்த சட்ட
அடிப்படையில், ஒருவர் மீது ஒரு வழக்கு இருந்தாலே, நடவடிக்கை எடுக்க
முடியும். இந்த சட்டத்தின் கீழ், சிறையில் அடைக்கப்பட்டவர், ஓராண்டு
சிறையில் இருக்க வேண்டும்.இதிலும், அறிவுரைக் குழுவின்
விசாரணைக்கு,சம்பந்தப்பட்ட நபர் உட்படுத்தப்படுவார்.

அப்போது, தே.பா., சட்டத்தின் கீழ், அந்த நபரை கைது செய்ததற்கான, ஆவணங்களை
போலீசார் சமர்ப்பிக்க வேண்டும்.ஆதார ஆவணங்கள், அடிப்படையில், அறிவுரைக்குழு
 உறுதி செய்யும். -நமது நிருபர் குழு- dinamalar


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக