வெள்ளி, 19 ஏப்ரல், 2013

Malalai Joya தாலிபான்களுக்கும் அந்நிய படைகளுக்கும் இடையில் போராடும் பெண் மலாலாய் ஜோயா

இ.பா.சிந்தன் maattru.com
1978 இல் ஆப்கானிஸ்தானில் பரா;என்கிறஊரில் பிறந்தார்
மலாலாய் சோயா. 4 வயதாக இருக்கும்போதே, போரில் தந்தையை இழந்தார். அதன்பின்னர், ஈரான் மற்றும் பாகிஸ்தானிற்கு சென்று அகதி வாழ்க்கை வாழவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது மலாலாய் சோயாவின் குடும்பம். போர் பரிசளித்த துயர்மிகுந்த அகதி வாழ்க்கை அவருக்கு நிறைய கற்றுக்கொடுத்தது. தன்னுடைய 8ஆம் வகுப்பு முதலே, காலையில் கல்வி பயின்றும் மாலையில் மறைமுகமாக ஏராளமான பெண்களுக்கு கல்வி பயிற்றுவித்தும் வந்தார் மலாலாய் சோயா. கல்வியறிவற்ற அரசியலில் நேரடியாக ஈடுபட்டிருக்காத மக்களிடமிருந்தே, மக்களுக்கான அரசியலையே கற்றுக்கொண்டார். அகதி முகாம்களில் வாழ்ந்த மக்களில், ஒவ்வொருவரிடமும் ஆப்கானிஸ்தானின், ஈரானின், ஈராக்கின், பாகிஸ்தானின் அரசியலை அறிந்துகொள்ளும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. பல ஆண்டுகள் அகதி வாழ்க்கை வாந்தபின்னர், ஆப்கானிஸ்தானில் தன்னுடைய சொந்த ஊருக்கே திரும்பி வந்தார் மலாலாய் சோயா. 90களில் பெண்களை வீட்டை விட்டே வெளியே வரவிடாமல் தடுத்துவந்த தாலிபான்களின் ஆட்சிக்காலத்திலேயே தன்னுடைய சொந்த ஊரான பராவில் ஒரு ஆதரவற்றோர் இல்லமும், இலவச மருத்துவமனையும் உருவாக்கி நடத்தினார். பெண்கள் கல்வி கற்பது தடைசெய்யப்பட்டிருந்த போதும், பெண்களுக்கு கல்வி பயிற்றுவிப்பதற்கென மறைமுகமாக கல்விக்கூடங்களை நடத்தினார்.


மனிதவுரிமை பாதுகாப்பிற்கு போராடியதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேச விருதுகளைப் பெற்றிருக்கிற அவருடைய வாழ்க்கை வரலாற்றினை "A Woman among Warlords: The Extraordinary Story of an Afghan Who Dared to Raise Her Voice" என்கிற பெயரில் சுயசரிதைப் புத்தகமாக எழுதியிருக்கிறார். அவருடைய தேர்தல் கால நிகழ்வுகளை, "Enemies of Happiness" என்கிற ஆவணப்படம் மூலம் பதிவு செய்தார் இவா முல்வாத் என்கிற இயக்குனர்.

மலாலாய் சோயாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க உரை (2003):

தாலிபான்களிடமிருந்து ஆட்சியினைக் கைப்பற்றியபின்னர் அமெரிக்காவின் பொம்மை அதிபராக கர்சாயை தாங்களாகவே நியமித்துக்கொண்டனர். மத அடிப்படைவாதிகளான மேற்குக் கூட்டணியினரும், உள்ளூர் ஆயுதக்குழுக்களும், அமெரிக்க ஆதரவுக் குழுக்களும் இணைந்தவொரு அரசாக உருவெடுத்தது. அமெரிக்க வெள்ளை மாளிகையின் பூட்டிய அறைகளிலேயே ஆப்கானிஸ்தானின் தலையெழுத்து நிர்ணயிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தானின் புதிய அரசியலமைப்புச் சட்டத்தினை உருவாக்குகிற பொறுப்பினை, 502 உறுப்பினர்கள் கொண்ட "லோயா ஜிர்கா" என்கிற பெயரில் அமைக்கப்பட்ட குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆப்கான் மக்களை அந்தந்த ஊர்களில் அடிமைப்படுத்தி வைத்திருந்த "சிறு சிறு ஆயுதக்குழுக்களின் தலைவர்கள்" தான் பெரும்பாலும் அக்குழுவில் இடம்பெற்றிருந்தனர். ஆப்கானிஸ்தானை யாரெல்லாம் போர்க்களமாக மாற்றினார்களோ, யாரெல்லாம் தாலிபான்களுடனோ அல்லது அமெரிக்கப் படையினருடனோ இணைந்திருந்து அப்பாவி மக்களை கொன்றுகுவித்தார்களோ, அவர்களே அக்குழுவில் பெரும்பான்மையினராக இருந்தனர். குழுவின் தலைவரான செபகத்துல்லா மொஜெட்டிடியும் ஒரு முன்னாள் முஜாகிதீன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

குழுவின் உறுப்பினர்கள் ஒன்றுகூடி விவாதித்த கூட்டத்தில், 25 வயதேயான மலாலாய் சோயாவும் இடம்பெற்றிருந்தார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அக்குழுவில் இடம்பிடித்த மிகச்சிலரில் அவரும் ஒருவர். இளம் உறுப்பினர்களுக்கு தங்களது கருத்தினை சொல்ல வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்று வாதாடி உரிமை பெற்றார். கூட்டம் துவங்கிய மூன்றாவது நாளில், உறுப்பினர்கள் அனைவரும் கூடியிருந்த அறையினில் அவருக்கு பேச வாய்ப்பு அளிக்கப்பட்டது.
மலாலாய் சோயா: "என்னுடைய பெயர் மலாலாய் சோயா. இங்கு கூடியிருக்கும் உறுப்பினர்களின் அனுமதியுடன், ஒரு சில நிமிடங்கள் நான் பேச விரும்புகிறேன். நம்முடைய நாட்டினை இந்த நிலைக்கு கொண்டுவந்த ஆயுதக்குழுக்களின் தலைவர்களும் போர்க்குற்றவாளிகளும் தான் இக்குழுவில் அதிகமாக இடம்பெற்றிருக்கிறார்கள் என்பதுதான் என்னுடைய மிகமுக்கியமான குற்றச்சாட்டு. அரசியலமைப்புச் சட்டத்தினை அமைக்கிற முயற்சியில் இருக்கிற அனைத்து குழுக்களின் தலைவர்களையும் ஏற்கனவே முடிவு செய்துவிட்டுதான் இங்கே வந்திருக்கிறீர்கள் அவர்கள் அனைவரும் கிரிமினல் குற்றவாளிகள். இவர்கள்தான் நம்முடைய நாட்டினில் நடந்துகொண்டிருக்கிற உள்நாட்டு மற்றும் சர்வதேச போர்களுக்குக் காரணமானவர்கள். சமூகத்தில் பெண்ணுரிமைக்கு எதிராகச் செயல்படுகிறவர்களும் இவர்கள்தான். ஏற்கனவே நாமறிந்த மோசமான குற்றவாளிகளிடமே நம்முடைய நாட்டினை மீண்டும் ஒப்படைக்கிறோம். இவர்கள் பதவிகள் தரப்படவேண்டியவர்களல்ல, தேசிய மற்றும் சர்வதேசிய நீதிமன்றங்களில் குற்றவாளிகளாக நிறுத்தப்படவேண்டியவர்கள். இவர்களின் செயல்களை நாம் மன்னித்தால், வரலாறு நம்மை ஒருபோதும் மன்னிக்காது."
மலாலாய் சோயாவின் இவ்வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உரையினால், "லோயா ஜிர்கா" கூட்டத்திலிருந்த அனைவரும் கொத்தித்தெழுந்தனர். உடனடியாகவே மலாலாய் சோயாவை, அக்குழுவிலிருந்து வெளியேற்றினார் குழுவின் தலைவரான செபகத்துல்லா மொஜெட்டிடி. காவலர்களை வரவழைத்து, அவரை கூட்ட அறையிலிருந்து வெளியேற்றுமாறு ஆணையிட்டார். குழுவிலுள்ள பலரும், மலாலாய் சோயாவைக் கொல்லவேண்டும் என்று குரலெழுப்பினர்.

இந்நிகழ்வுக்குப் பின்னர், தாலிபான்களின் கண்களில் படாமலும், அமெரிக்காவிற்கு ஆதரவாக செயல்படுகிற உள்ளூர் ஆயுதக்குழுக்களிடமிருந்தும் தப்பித்தும், தலைமறைவு வாழ்க்கை வாழத்துவங்கினார் மலாலாய் சோயா. ஆனால் சமூக மாற்றமும் அரசியல் மாற்றமும் நிகழவேண்டும் என்பதற்காக மக்களிடையே தொடர்ந்து பிரச்சாரமும் மேற்கொண்டு வந்தார்.

தேர்தல் களம் (2005) :

35 ஆண்டுகளுக்குப் பின்னர், முதன்முறையாக 2005 செப்டம்பர் 18 ஆம்தேதி ஆப்கன் பாராளுமன்றத்திற்கு தேர்தல் நடைபெறுமென்று அறிவிக்கப்படுகிறது. ஈரானுக்கு மிக அருகிலிருக்கும் பரா என்கிற மிகவும் பின்தங்கிய, ஏழ்மையான தன்னுடைய சொந்த ஊரிலேயே பாராளுமன்றத் தேர்தலில் மலாலாய் சோயாவும் போட்டியிட முடிவெடுக்கிறார். அவர் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்ததிலிருந்தே அவருக்கு மிரட்டல்களும் அச்சுறுத்தல்களும் முன்பைவிட மிக அதிகமாகவே வரத்துவங்கின. தேர்தல் வேலையாக அவரை சந்திக்க வருவதாகக்கூறிக்கொண்டு, அவரை மிரட்டி எழுதப்பட்ட துண்டுப்பிரசுரங்களை விட்டுச்சென்றனர். தொடர் பயமுறுத்தலின் மூலமாக, அவரது நம்பிக்கையினையும் குலைக்கும் முயற்சியாகவும் இதனைச்செய்தனர். மலாலாய் சோயா தங்கியிருந்த இடத்திற்கு அருகிலிருக்கும் சிவான் பகுதியிலேயே அவரைக் கொல்வதற்கான சதித்திட்டங்கள் தீட்டப்பட்ட செய்திகளும் வெளியாயின.
மலாலை சோயா: "இவ்விடத்தில் நான் தொடர்ந்து இருப்பது ஆபத்தானது. அருகில் வசிக்கும் மக்களிடம் என்னுடைய நடவடிக்கைகள் குறித்து விசாரிக்க ஆரம்பித்துவிட்டனர். அதனால் வேறு இடத்திற்கு செல்லப்போகிறேன். புர்கா என்கிற ஆடையினை நான் வெறுக்கிறேன். என்னுடைய ஆலோசனையின் பேரில் ஏராளமான பெண்கள் அதனை அணிவதை நிறுத்திவிட்டனர். ஆனால் அதுதான் இப்போது "வார்லார்ட்ஸ்"களிடமிருந்து என்னை காப்பாற்றுகிறது. புர்காவில் நான் எங்கு சென்றாலும் என்னை அடையாளம் காணமுடியாது என்பதுதான் எனக்கு சாதமாக இருக்கிறது"

இன்னும் இரண்டே வாரத்தில் தேர்தல் வரவிருப்பதால், தினமும் தொடர்ந்து மக்களை சந்தித்துக்கொண்டே இருந்தார் மலாலாய் சோயா. மக்கள் தங்களுடைய ஆதரவினை நல்கியும் பெண்கள் தங்களுடைய பிரச்சனைகளைத் தீர்க்கவேண்டியும், மலாலாய் சோயாவை தேடிவந்து பார்த்தனர்.

ஹாஜி அப்துல் ஆசிஸ் என்பவர் மலாலாய் சோயாவை சந்திக்கவருகிறார்.

மலாலாய் சோயா: "என்னைப் பற்றி எப்படி கேள்விப்பட்டீர்கள்?"
ஹாஜி அப்துல் ஆசிஸ்: "வெளியே மக்கள் உங்களைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள். நான் மற்றும் எங்கள் ஊரைச்சேர்ந்த 130 ஓட்டுகளும் உங்களுக்குத்தான் என்று சொல்வதற்காகவே இங்கே வந்தேன். உங்களைத்தோற்கடிக்க மற்ற வேட்பாளர்கள் அனைவரும் ஏராளமாக பணத்தினை மக்களுக்கு வாரிவழங்குகிறார்கள். ஒரு ஓட்டிற்கு 2000 ரூபாய்க்கும் மேல் கொடுக்கிறார்கள். ஆனால் பலரும் உங்களை அறிந்து வைத்திருப்பதால், பெரிய அளவிற்கு பிரச்சனை இருக்காது."
மலாலாய் சோயா: "மிக்க மகிழ்ச்சி"

100 வயதான ஷெரீன் என்கிற முன்னாள் முஜாஹிதீனும், தாலிபான்களின் கண்களில் படாமல் இரண்டு மணிநேரம் நடந்துவந்து தன்னுடைய ஆதரவினை மலாலாய் சோயாவிற்கு நல்குகிறார்.
ஷெரீன்: "உன்னைப்பற்றி கேள்விப்பட்டதும், உடனே உன்னைக் காணவேண்டுமென்று புறப்பட்டு வந்தேன். நீ சரியான பாதையில் செல்கிறாய். மக்களை மதிக்கிறாய். அதனால் எங்களுடைய கிராம மக்கள் அனைவரும்  உனக்குதான் ஓட்டுப் போடுவோம்."
மலாலாய் சோயாவை வெற்றிபெறாமல் செய்ய, தாலிபான்கள் ஒரு புறமும் அமெரிக்கா மறுபுறமும் இருவேறு விதமாக முயற்சியெடுத்தனர். வாக்குச்சாவடிகளை கிராமங்களிலிருந்து தொலைதூரத்தில் அமைத்தது ஐ.நா.வின் தேர்தல் கண்காணிப்பு ஆணையம். அவ்வளவு தூரம் சென்று வாக்களிக்க பெண்களை ஆண்கள் அனுமதிக்கமாட்டார்கள் நிலை இதனால் உருவாயிற்று. மறுபுறம், ஆங்காங்கே குண்டுகளை வீசி மக்களை பீதியடைச் செய்துவந்தது தாலிபான். இதனால் ஓட்டுப் போடுவதற்கு மக்கள் அஞ்சுவார்கள் என்பது அவர்களது கணிப்பு.

இவற்றையெல்லாம் உற்று கவனித்துவந்த மலாலாய் சோயா, பல கிராமங்களுக்கு நேரடியாக பயணிக்க முடிவெடுத்தார். பல பாதுகாப்புகளையும் மீறி, கிராமங்களுக்குள் அவர் நுழைந்தார். ஆப்கான் பெண்களுக்கு இந்தத் தேர்தல் எவ்வளவு முக்கியமானது என்பதனை நன்கு அறிந்துவைத்திருந்தார் மலாலாய் சோயா. நாடுமுழுவதிலுமுள்ள 249 தொகுதிகளுக்கான தேர்தலில் 2700 வேட்பாளர்கள் களத்தில் இருக்கின்றனர். அதில் 8இல் ஒருவர் பெண் வேட்பாளர்.
மலாலாய் சோயா: "கவனியுங்கள் சகோதரிகளே! நான் உங்களிடம் முக்கியமான ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். இதுதான் நமக்கு இப்போதைக்கு இருக்கிற கடைசி வாய்ப்பு. தேர்தலுக்கு இன்னும் 8 நாட்களே உள்ளன. ஆப்கானிஸ்தானின் எதிரிகளையும், பெருமைக்கு எதிரானவர்களையும், அமைதியினைக் கெடுத்து நம்முடைய மகிழ்ச்சியினை பறிப்போரையும், அடையாளம் காட்டவே இத்தேர்தலில் நான் போட்டியிடுகிறேன். நம்முடைய, நம்முடைய குழந்தைகளின் எதிர்காலத்தினை நாமே தீர்மானிப்போம். எனக்கு ஓட்டுப் போடுங்கள் என்று நான் கேட்பதற்காக நான் இங்கே வரவில்லை. இரத்தக்கறை படியாத கைகளுக்குச் சொந்தக்காரர்களுக்கும், பெண்ணுரிமையினை மதித்து அங்கீகரிப்போருக்குமே உங்களது ஓட்டினை போடுங்கள். தேர்தல் நாளில் உங்களது வேலைக்கு விடுப்பு எடுங்கள். இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும். ஆப்கானிஸ்தானின் வரலாற்றில் இடம் பெறுவோம்."

தேர்தலுக்கு இன்னும் ஆறு நாட்களே உள்ள நிலையில், பாதுகாப்பான தன்னுடைய வீட்டினை விட்டு வெளியே பிரச்சாரம் செய்வதற்கு எப்போதும் செல்லமுடியவில்லை. எதிரிகள் கைகளில் ஆயுதங்களும், தன்னுடைய கைகளில் நம்பிக்கையுமே இருப்பதனால், பல்வேறு மாற்று வழிகளில் பிரச்சாரம் செய்தார் மலாலாய் சோயா. தன்னுடைய பிரச்சார உரையினை ஒரு ஒலிநாடாவில் பதிவு செய்து, அதனை ஒரு வாகனம் மூலமாக ஊர் ஊராகச் சென்று ஒலிபெருக்கியில் ஒலிபரப்பினார்.
"உங்களை எல்லாம் நேரில் வந்து சந்தித்து ஓட்டு கேட்கமுடியாத என்னுடைய நிலைக்கு முதலில் நான் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். பாதுகாப்புக் காரணங்களால் இப்போதைக்கு உங்களுடைய முகங்களை என்னால் பார்க்கமுடியவில்லை. பாராளுமன்றம் என்பது மக்களாட்சியில் ஒரு முக்கியமான அடித்தளமாகும். அதனால்தான் நாம் சரியானவர்களைத் தேர்ந்தேடுக்கிறபோது அதிக கவனம் செலுத்தவேண்டியிருக்கிறது. 'லோயா ஜிர்கா'வில் என்னுடைய உரையினைத் தொடர்ந்து, இன்றுவரை அதிகாரத்தில் அமர்ந்திருக்கும் போர்க்குற்றவாளிகளை எதிர்த்து நான் தொடர்ந்து குரல் கொடுத்துவருகிறேன். நம்முடைய நாட்டினில் நிலையற்ற தன்மையினை உருவாக்குவோரை இல்லாமல் செய்து, ஆயுதங்களின் நிழலை அழித்துவிடும் நாள் வெகுவிரைவில் வருமென்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது"
தேர்தல் நாள் நெருங்கி வர, மலாலாய் சோயாவை தாக்குவதற்கு எதிரிகள் திட்டங்கள் பல தீட்டுவது தெரியவருகிறது. எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்று தெரியாமல் மிகப்பெரிய நெருக்கடியான சூழலில்தான் தன்னுடைய பிரச்சாரத்தைத் தொடர்ந்தார். அவருடைய பாதுகாப்பு குறித்து, நெருங்கிய நண்பர்களும் பொதுமக்களும் மிகுந்த வருத்தம்கொண்டிருந்தனர். 
தோழி: "உன்னை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். நீ நிச்சயமாக வெற்றிபெறப்போகிறாய் என்பது எனக்குத் தெரியும். மக்களின் ஆதரவும் உனக்கு இருக்கிறது. இரண்டாண்டுகளுக்கு முன்பு, 'லோயா ஜிர்கா'வில் நீ பேசியதிலிருந்தே உன்னுடைய உயிருக்கு எப்போதும் ஆபத்து இருந்து கொண்டே இருக்கிறது. என்னவாகுமோ என்கிற பயம் வேறு. ஒருபுறம் உன்னை நினைத்து பெருமைப்பட்டாலும், மறுபுறம் உன்னை நினைத்து பதட்டமாகவே இருக்கிறது."

தேர்தலுக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், மலாலாய் சோயாவிற்கு தொலைக்காட்சியில் பேசுகிற வாய்ப்பு கிடைக்கிறது.
"என்னுடைய பெயர் மலாலாய் சோயா. நான் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறேன். மக்கள் கடுமையாக தாக்கப்பட்டது, துப்பாக்கி குண்டுகளுக்கு இரையானது, பெண்களின் மார்பகங்கள் வெட்டப்பட்டது, சிறுமிகள் முதல் பாட்டிகள் வரையிலும் பாலியல் வன்புணர்ச்சிக்குள்ளாக்கியது, மக்கள் உயிரோடு கொளுத்தப்பட்டது, காபுலில் மட்டுமே 65000 அப்பாவி மக்கள் கொள்ளப்பட்டது, இன்னும் எண்ணிலடங்கா ஆயிரமாயிரம் குற்றங்கள் நிகழ்ந்தது, ஆகியவைதான் நமக்கு கடந்தகால மறக்கமுடியாத நிகழ்வுகள். இக்குற்றங்களையெல்லாம் நிகழ்த்திய போர்க்குற்றவாளிகளும் தாலிபான்களும் பாராளுமன்றத்திற்குள் நுழையும்பட்சத்தில், அவர்கள் நிச்சயமாக மக்கள் விரோத திட்டங்களைத்தான் தீட்டுவார்கள். அப்போது, என்னுடைய குரல் மக்களின் குரலாக பாராளுமன்றத்தில் ஒலிக்கும். அவற்றையெல்லாம் மக்களாகிய உங்களிடத்திலும் அம்பலப்படுத்துவேன். ஆயிரக்கணக்கான முறை நான் அச்சுறுத்தப்பட்டிருந்தாலும், நாட்டின் விடுதலைக்காகவும் ஜனநாயகத்தையும் ஆண்-பெண் சமவுரிமையினைப் பேணிக் காப்பதற்கும் தொடர்ந்து போராடுவேன் என்று உறுதிகூறுகிறேன்."

தேர்தல் நாளில், பாராளுமன்றத்தைத் தேர்ந்தெடுக்க 1.2 கோடி மக்கள் வாக்களித்தனர். தேர்தலுக்குப் பின்னர், வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகளும் அறிவிக்கப்பட்டது. பெரும்பாலான இடங்களில், "சிறு ஆயுதக்குழுக்களின் தலைவர்களே" வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டனர். 249 இடங்களில், 28% பெண்கள் வெற்றிபெற்றனர். அதில் மலாலாய் சோயாவும் ஒருவர். ஆப்கானிஸ்தானிலேயே மிகப்பெரிய அளவிலான ஓட்டுகள் பெற்று வெற்றிபெற்றார். ஆப்கானிஸ்தானின் இளவயது பாராளுமன்ற உறுப்பினர் என்கிற பெருமையினையும் பெற்றார்.
பாராளுமன்ற உறுப்பினரான பின்னர், அவருக்கு மேலும் பல அதிர்ச்சிகள் காத்துக்கொண்டிருந்தன. பாராளுமன்றத்தில் பேசுவதற்கான வாய்ப்புகளும் சரியாக கொடுக்கப்படவில்லை. பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள், "ஆயுதக்குழுக்களின் தலைவர்களாக" இருந்தமையால், மக்களுக்கான அரசியலே பாராளுமன்றத்தில் பேசப்படவுமில்லை.

2007 மே மாதத்தில், "மிருகங்கள் நிறைந்த இடம்தான் பாராளுமன்றம்" என்று ஒரு தொலைக்காட்சி பேட்டியில் சொல்லியிருந்தார். நேரம் பார்த்துக் காத்துக்கொண்டிருந்த கர்சாய் அரசு, மலாலாய் சோயாவிடம் எவ்வித விளக்கத்தையும் கேட்காமல் அவரை பாராளுமன்றத்திலிருந்தே நீக்கிவிட்டனர்.

அதன்பிறகு பத்திரிக்கையாளர்களை சந்தித்தபோது,
"பாராளுமன்றத்தில் மிருகங்கள் இருக்கின்றன என்று சொன்னது தவறு. அங்கே கிரிமினல் குற்றவாளிகள்தான் இருக்கிறார்கள். ஏராளமான முறை எனக்கு கொலைமிரட்டல் விட்டிருக்கிறார்கள். பாராளுமன்றத்திலேயே, 'தற்கொலைப்படையினை வைத்தாவது மலாலாய் சோயாவைக் கொல்லவேண்டும்' என்று உரக்கக் குரல் கொடுக்கிறார்கள்"
என்றார் மலாலாய் சோயா.

பாராளுமன்றத்திற்கு வந்து, எல்லோரிடமும் மன்னிப்புக் கேட்டால் மீண்டும் உறுப்பினராகத் தொடரலாம் என்றொரு வாய்ப்பு வழங்கப்பட்டது மலாலாய் சோயாவிற்கு. ஆனால் தன்னுடைய கருத்தினில் எந்தப்பிழையும் இல்லை என்றும், அதற்காக மன்னிப்புக்கோரியெல்லாம் கிரிமினல்களின் கட்டிடமான பாராளுமன்றத்திற்கு நுழையமாட்டேன் என்று மறுத்துவிட்டார் மலாலாய் சோயா.


மலாலாயும் ஆப்கானிஸ்தானும் - இன்று....

பாராளுமன்றத்தினை மேலிருந்து கர்சாய் வழியாக இயக்குகிற அமெரிக்க அரசும் சரி, கீழிருந்து அதற்கு உதவிபுரிகிற ஆயுதக்குழுத்தலைவர்களான பாராளுமன்ற உறுப்பினர்களும் சரி, மற்றொரு திசையில் பாராளுமன்றத்திற்கு வெளியே மக்களுக்குத் தொல்லைகொடுத்துக்கொண்டிருக்கிற தாலிபான்களும் சரி, எவரொருவரும் ஆப்கானிஸ்தான் மக்களின் நலனில் அக்கறை இல்லாதவர்கள் என்பதனை நன்கு புரிந்துகொண்டார் மலாலாய் சோயா.

ஆப்கானிஸ்தானில் ஒரு மாற்றம் நிகழவேண்டுமேன்றால் அது மக்களிடமிருந்து மக்கள் எழுச்சியாகத்தான் வரமுடியும் என்பதில் தெளிவடைந்தார். அதனால் மக்களை ஒன்று திரட்டுவதிலும், சமூகத்தில் நிறைந்திருக்கும் பெண்ணடிமைத்தனம், மத அடிப்படைவாதம் போன்றவற்றை எதிர்ப்பதிலும் மிகத்தீவிரமாக ஈடுபடத்துவங்கினார்.

அமெரிக்காவும் நேட்டோவும் ஆப்கானிஸ்தானில் பொழிந்து வரும் குண்டுமழையினை எதிர்த்து, மலாலாய் சோயா ஒரு அறிக்கை வெளியிட்டார். உலகெங்கிலுமுள்ள போர் எதிர்ப்பாளர்களிடம் ஆதரவு திரட்டுவதாகவும் இருந்தது அவ்வறிக்கை.

"என் மதிப்பிற்குரிய நண்பர்களே,

பத்து ஆண்டுகளுக்கு முன்னர், 'பெண்ணுரிமை, மனிதவுரிமை மற்றும் ஜனநாயகத்தை காப்போம்' என்று சொல்லிக்கொண்டு, அமெரிக்காவும் நேட்டோ படையும் எங்களது ஆப்கான் நாட்டை படையெடுத்து வந்தார்கள். ஆனால் பத்தாண்டுகள் ஆகியும், நிலைமை சரியாகவில்லையென்பதை விட போரினால் மிகவும் மோசமடைந்து ஊழல் மலிந்த நாடாகத்தான் ஆகியிருக்கிறது ஆப்கானிஸ்தான். கடுமையான குற்றங்களும், காட்டுமிராண்டித்தனமான செயல்களும், மனிதவுரிமை மற்றும் பெண்ணுரிமை மீறல்களும் தான் இப்போர் எங்களுக்குத் தந்திருக்கிறது. எங்களது துயரங்களையும் துன்பங்களையும் இது இரட்டிப்பாக்கியிருக்கிறது.

இக்குரூரமான காலங்களில், அமெரிக்க ஆக்கிரமிப்பு படைகளும் உள்நாட்டுத் தீவிரவாத குழுக்களாலும், போருக்கு சற்றும் தொடர்பில்லாத பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். ஒபாமா 2008 இல் பதிவேற்றபின்னர், எங்களது நாட்டின்மீதான போரினை நிறுத்துவதற்கு பதிலாக, அதனை மேலும் வீரியப்படுத்தினார். அதனால் அதன்பிறகு, பொதுமக்களின் சாவு எண்ணிக்கை 24 % அதிகரித்தது. ஆக்கிரமிப்பு படைத்துருப்புகளின் எண்ணிக்கையினை அதிகரித்தமையால், குற்றங்களும் கொடூரத்தாக்குதல்களும் கொடுமைகளும் வலியும் ஆப்கான் மக்களாகிய எங்களுக்கு கூடியது. ஜார்ஜ் புஷ்ஷைவிடவும் ஆபத்தானவராக எங்களுக்குத் தென்படுகிறார்.

2010 இல் மட்டும் ஒரு நாளைக்கு சராசரியாக 7 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர் என்று 'ஆப்கானிஸ்தான் உரிமைகள் கண்காணிப்பு ஆணையத்தின்' ஆய்வறிக்கை சொல்கிறது. 2014 இல் ஆப்கானை விட்டு வெளியேறுவோம் என்று அமெரிக்கா மற்றும் நேட்டோ அறிவித்திருக்கின்றன, ஆனால் அமெரிக்காவோ சத்தமில்லாமல் ஆப்கானிஸ்தானில் நிரந்தரப் படைத்தளங்களை அமைத்துவருகிறது. அமெரிக்க-ஆப்கான் அரசுகளிடையே 2024 வரையிலான பாதுகாப்பு ஒப்பந்தங்களும் போடப்பட்டிருக்கின்றன. இதிலிருந்து, எங்களது நாட்டை விட்டு விரைவில் வெளியேறும் எண்ணமே அவர்களுக்கு இல்லை என்பது தெளிவாகிறது. ஆப்கானிஸ்தானின் பூகோள முக்கியத்துவத்தை பயன்படுத்தி, சீனா உள்பட ஆசியநாடுகளைக் கண்காணிக்கிற கட்டுப்பாட்டுத் தளமாக்கத்தான் முனைகிறது அமெரிக்கா. இதனைச் செய்துகொண்டே எங்களது நாட்டின் எண்ணைவளம், கனிமவளம் உள்பட அனைத்தையும் அவர்கள் சுரண்டிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆப்கான் மக்களை மட்டுமல்லாமல், அவர்களது சொந்தநாட்டு மக்களையும் சேர்த்தேதான் ஏமாற்றுகிறார்கள். மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்களுக்கு உதவுகிற வகையிலும், ஆப்கானின் தீவிரவாத குழுக்களுக்கு உதவுகிறவகையிலும், மேற்குலக நாட்டு மக்களின் வரிப்பணத்தையும் இராணுவ வீரர்களின் இரத்தத்தையும் அவ்வரசுகள் பயன்படுத்தி வருகின்றன.

இராணுவ படையெடுப்பின் மூலமாக ஜனநாயகத்தை எப்போதும் உருவாக்கிவிடமுடியாது என்றே நான் நினைக்கிறேன். சுதந்திரமும் நீதியும் நியாயமும் இல்லாத ஜனநாயகம் அர்த்தமற்றது தான். நாட்டு மக்களால்தான், விடுதலையினை தீர்மானிக்கமுடியும். அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள் வெளியேறினால்தான், மிகக்கொடுமையான சூழலிலிருக்கிற எங்களது நாட்டு விடுதலைக்காக எங்களால் சரியான திசையில் போராடமுடியும். அமைதிக்கான நியாயத்திற்கான எங்களது போராட்டத்தை அவர்களது இருப்பு மேலும் குழப்பத்திற்குள்ளாக்குகிறது. ஆப்கானைவிட்டு அவர்கள் வெளியேறிவிட்டாலே, தாலிபான் மற்றும் இன்னபிற மத அடிப்படைவாதக் குழுக்களின் அடித்தளம் நிச்சயமாக உடைந்துவிடும்.

2009 ஆம் ஆண்டு மே மாதம் ஃபரா என்கிற இடத்தில், நேட்டோ நடத்திய குண்டுவெடிப்புத் தாக்குதலில், போருக்கு எவ்வகையிலும் தொடர்பில்லாத 150 அப்பாவி பொதுமக்கள் ஒட்டுமொத்தமாக ஒரேயிடத்தில் கொல்லப்பட்டனர். பெரும்பாலும் பெண்களும் குழந்தைகளும் பெண்களுமே அக்குண்டுவெடிப்பில் இறந்தனர். இதுதான் ஆப்கானிஸ்தான் போரின் உண்மைநிலை. இதைத்தானே நேடோ படை உலகெங்கிலும் செய்துவருகிறது. ஆப்கானிஸ்தானில் அவர்களை தொடர அனுமதித்தால், மத்தியகிழக்கு நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள் என அவர்களது அட்டூழியம் தொடர்ந்துகொண்டேதான் இருக்கும்...

அடிப்படைவாதம், தாலிபான், முஜாகிதீன்கள் போன்ற பல பிரச்சனைகள் எங்களது நாட்டில் இருக்கின்றன. எங்களுக்கு சுதந்திரமும், சுயநிர்ணய உரிமையும் இருந்தால் இப்பிரச்சனைகளையெல்லாம் தீர்ப்பதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது. ஆப்கானிஸ்தானில் மட்டுமல்ல, உலகின் வேறெந்த நாட்டிலும் நேட்டோவின் குண்டுகளால் ஜனநாயகத்தை கொண்டுவந்துவிடமுடியாது.

பிற மத்திய கிழக்கு நாடுகளில் துவங்கியிருக்கிற எழுச்சியைப்போன்றே ஆப்கானிஸ்தானிலும் நிகழும் என்கிற நம்பிக்கை எனக்கிருக்கிறது. ஹெராத், நன்கர்கார், மாசர்-இ-ஷரிப், ஃபரா, காபுல் மற்றும் சில மாகாணங்களில் ஆங்காங்கே சிறியளவில் நடக்கிற மக்கள் எழுச்சிதான் ஆப்கானிற்கு ஒளிமயமான எதிர்காலம் காத்துக் கொண்டிருக்கிறதென்கிற நம்பிக்கையினை காப்பாற்றிவருகிறது.

அடிப்பதைவாதத்தையும் ஆக்கிரமிப்பையும் ஒருசேர எதிர்க்கும் எங்களது நாட்டின் ஜனநாயக விரும்பிகளுடன் கைகோர்க்குமாறு உலகெங்கிலுமுள்ள அமைதிவிரும்பிகள், போரெதிர்ப்பு இயக்கங்கள், ஜனநாயக விரும்பிகள் ஆகியோரை கேட்டுக்கொள்கிறேன்."
மக்கள் நலனுக்கு எதிரானவர்களின் முகத்திரையினை மக்கள்முன் கிழித்துக்காட்டினார் மலாலாய் சோயா. அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்து பொம்மை கர்சாய் அமைத்ததற்கு காரணங்களாக சொல்லப்பட்டவை  அனைத்தும் பொய்களே என்பதனையும் வெளிக்கொண்டுவந்தார்.

1. மத அடிப்படைவாதத்தை ஒழிக்கப்போகிறோம் என்று சொன்ன அமெரிக்க மற்றும் ஆக்கிரமிப்பு நாடுகள், இறுதியாக மத அடிப்படைவாதிகளான "வடக்குக் கூட்டணியை" ஆப்கானிஸ்தானின் ஆட்சியில் அமர்த்தியிருக்கின்றன. தாலிபான்களுக்கு சளைத்தவர்களல்ல அவர்கள்.

2. ஊழலை ஒழித்து ஆப்கானிஸ்தானை காப்பாற்றுவோம் என்று சொன்ன அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள், ஆக்கிரமிப்பிற்குப் பின்னரமைத்த பொம்மை கர்சாய் அரசானது ஊழலில் உலக சாதனைகளையெல்லாம் படைக்கத்துவங்கியது. கர்சாயின் சகோதரரான அகமது வாலி கர்சாய், ஆப்கானிஸ்தானில் ஒரு தனி இராஜாங்கத்தையே நடத்தத் துவங்கினார். அரசின் எல்லாவகையான உதவிகளோடும் எல்லாவிதமான சட்டவிரோத வியாபாரங்களையும் தலைநகரின் மையப்பகுதியிலேயே நடத்தினார்.

3. பெண்ணுரிமையினை  பேணிக்காப்பதற்குதான் ஆப்கானிஸ்தானிற்குள் நுழைகிறோம் என்று சொல்லிய அமெரிக்க மற்றும் நேட்டோ படைகளால், எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை பெண்களின் வாழ்வில். பொம்மை கர்சாய் அரசு, பெண்களுக்கு எதிரான ஏராளமான சட்டங்களை நிறைவேற்றியிருக்கிறது. உதாரணத்திற்கு சட்டப்பிரிவு 132 புதிதாக சேர்க்கப்பட்டது. அச்சட்டமானது, பெண்ணை வெறும் பாலியல் பொருளாக மட்டுமே சித்தரிக்கிறது. ஆணின் பாலியல் தேவையினை நிறைவேற்றுவது பெண்ணின் கடமை என்றும் கனவின் அத்தேவைகளுக்கு பெண்கள் கட்டுப்பட்டே ஆக வேண்டும் என்றும் அச்சட்டத்தில் எழுதியிருக்கிறது. பாராளுமன்றத்தில் வாசித்துக் காட்டாமலேயே, இச்சட்டத்தினை நிறைவேற்றினர். பாராளுமன்றத்தில் அரசிற்கு எதிராகவோ, பெண்ணுரிமையினை ஆதரித்தோ, பாராளுமன்றத்தில் எந்தப் பெண் உறுப்பினரேனும் குரல்கொடுத்தால், அவர்களது கணவர்கள் மூலமாக விவாகரத்து செய்யப்படுவார்கள் என்கிற மறைமுக மிரட்டல்களும் நடந்தன. இதுமட்டுமில்லாமல், கடந்தகாலங்களை விட மிக அதிக அளவிலான பெண்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். பெண்களை கடத்துதல், பாலியல் வன்புணர்ச்சிக்குள்ளாக்குதல் போன்றவை அதிகரித்துக்கொண்டே போகிறது. இவற்றையெல்லாம் தாலிபான்கள் மட்டுமல்ல, அரசின் அங்கத்தினரும் ஏராளமானோர் செய்கிறார்கள். புர்கா அணிந்த பெண்கள் அணியாப் பெண்கள் என்கிற பேதமின்றி, பெண்கள் கடத்தப்படுவதும் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாவதும் தொடர்கிறது. ஆப்கானிஸ்தானில், ஒவ்வொரு 28 நிமிடங்களுக்கும், ஒரு பெண் தன்னுடைய பிரவத்தின்போது இறக்கிறாள். பெண்களுக்கான மருத்துவ வசதிகளும் மறுக்கப்படுகிறது. மலாலாய் சோயா நடத்திவருகிற மருத்துவ மையத்தினையும் பல்வேறு வழிகளில் மூடிவிட முயற்சி எடுத்துக்கொண்டிருக்கிறது அரசு.

4. மக்களாட்சியினை நிறுவதற்காகத்தான் ஆப்கானிஸ்தானில் நுழைகிறோம் என்று கூறின அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள். ஆனால் அங்கே ஆட்சி செய்வது ஆயுதக்குழுக்களின் தலைவர்கள் மற்றும் மத அடிப்படைவாதிகளாலான அமெரிக்க பொம்மை அரசுதான். 
மலாலாய் சோயா: "துப்பாக்கிகளும், ஆயுதக்குழுக்களும்,  போதைப்பொருள் கடத்தல்காரர்களும், ஊழல்வாதிகளும், ஆக்கிரமிப்பாளர்களும் நடத்துகிற தேர்தல்களில் என்ன நியாயத்தை எதிர்பார்க்கமுடியும். யார் ஓட்டுப்போடுகிறார்கள் என்பதனைவிட , யார் ஓட்டை எண்ணுகிறார்கள் என்பதுதான் முக்கியம்"
பல ஊர்களில், வாக்காளர்களின் எண்ணிக்கையினைவிட தேர்தலில் பதிவான வாக்குகள் அதிகமாக இருந்தன. பக்டிகா என்கிற மாவட்டத்தில், வாக்காளர்களை விட 626% அதிகமான வாக்குகள் பதிவாகியிருந்தன.

5. போதைப்பொருள் உற்பத்தியையும், கடத்தலையும் ஆப்கானிஸ்தானிலிருந்து ஒழிக்கவே வந்திருக்கிறோம் என்று சொன்ன அமெரிக்காவின் வார்த்தைகளில் பொய்யைத்தவிர வேறொன்றுமில்லை. ஆப்கானிஸ்தானை அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள் ஆக்கிரமிப்பதற்கு முன்பு 204 டன்னாக இருந்த அபின் உற்பத்தி இன்று அமெரிக்காவின் ஆதிக்கத்தில் நடக்கிற ஆட்சியில், 8200 டன்னாக உயர்ந்திருக்கிறது. அதிபர் கர்சாயின் குடும்பத்தினரே, மிகப்பெரிய அபின் விற்பனையாளர்களாக இருக்கிறார்கள். வியாபார போட்டியினாலேயே, கர்சாயின் சகோதரர் அகமது வாலி கர்சாயை தாலிபான்கள் சுட்டுக்கொன்றனர்.

தாலிபான்கள் மோசமானவர்கள், மனிதநேயமற்றவர்கள் என்கிற கருத்தை மட்டுமே உலக மக்களிடம் நிறுவ முயற்சிக்கும் மேற்குலக நாடுகளின் தந்திரத்தை நாம் புரிந்துகொள்ளவேண்டும். அதனைக் காரணம் காட்டியே, ஆப்கானிஸ்தானில் நிரந்தரமாகக் கூடாரங்கள் போடுகிற, மற்ற தீவிரவாதக் குழுக்களான அமெரிக்க மட்டும் நேட்டோ படைகளையும் தாலிபான்களின் வரிசையில் வைத்தே நாம் ஆப்கானிஸ்தானின் நிலையினை அறிந்துகொள்ளவேண்டும். மலாலாய் சோயா சொன்னது போல, ஆப்கானிஸ்தானிற்கான மாற்றத்தினை அம்மக்களன்றி வேறு ஒருவராலும் கொண்டுவந்துவிட முடியாது. நேட்டோவின் குண்டுகளாலோ, தாலிபான்களின் துப்பாக்கிகளாலோ, மத அடிப்படைவாதிகளின் பிற்போக்கு சட்டங்களாலோ ஆப்கானிஸ்தானை முன்னோக்கி வளர்ச்சிப் பாதையில் ஒருபோதும் அழைத்துச் செல்லமுடியாது. அதனால் மலாலாய் சோயா போன்ற போராளிகளின் குரலினை உலகறியச்செய்வதும், அவர்களின் கோரிக்கைகளை ஆதரிப்பதும் உலகின் குடிமக்களாகிய நம்முடைய கடமை.

-இ.பா.சிந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக