புதன், 3 ஏப்ரல், 2013

தமிழகத்தில் பயங்கரவாதம் பரவுகிறது? மாணவர்கள் காங்கிரஸாரை ‘லேசாக தட்ட’ முயற்சி

திருச்சியில் காங்கிரஸ் கட்சியினர் மாணவர்களை தாக்கியதன்
எதிரொலியாக, காங்கிரஸ் தமிழக தலைவர்கள் தமிழகத்தின் பகுதிகளில் ‘நடமாடுவது’ அவ்வளவு விவேகமானது அல்ல என முடிவாகியிருக்கிறது. கொதி நிலையில் உள்ள மாணவர்கள் காங்கிரஸாரை ‘லேசாக தட்ட’ முயற்சிக்கலாம் என்ற காரணத்தால், அவர்களது தமிழக சுற்றுப் பயணங்கள், பொதுக்கூட்டங்கள் கடகடவென ரத்தாகின்றன. மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், வாசன் ஆகிய இருவரும் பங்கேற்க இருந்த பொதுக்கூட்டங்கள் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் தலைமையில் நடைபெற இருந்த தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம் லோக்சபா தொகுதிகளின் ஆலோசனைக் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள், போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட நேரத்தில் திருச்சியில், காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு செல்லும் வழி நெடுகிலும் ஞானதேசிகன், வாசன் ஆகிய இருவரின் உருவப்படங்கள் கொண்ட வரவேற்பு பேனர்கள் அமைக்கப்பட்டிருந்தன. அந்த வரவேற்பு பேனர்களை கண்டு வெகுண்ட திருச்சி மாவட்ட மாணவர்கள், அவற்றை அடித்து நொறுக்கினர். தட்டிக் கேட்க சென்ற காங்கிரஸ் தொண்டர் ஒருவருக்கு, அடி உதை விழுந்தது.
இதையடுத்து, வீரச் செயல்களில் ஏற்கனவே ஆர்வமுள்ள காங்கிரசார் திரண்டு வந்து, உருட்டுக் கட்டைகளால், மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
இச்சம்பவம் தொடர்பாக, முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜசேகர் உட்பட, 20 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதையடுத்து, தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் காங்கிரசார் பொதுக்கூட்டங்களை நடத்தினால், மாணவர்கள் ‘நாலு சாத்து’ சாத்த தயாராக உள்ளார்கள் என்ற தகவல் காங்கிரஸ் தலைவர்களுக்கு கிடைத்துள்ளது.
எனவே, தமிழகம் முழுவதும் நடைபெற இருந்த காங்கிரஸ் பொதுக்கூட்டங்களை, தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் ரத்து செய்ய உத்தரவிட்டு உள்ளார்.
கடந்த, 30-ம் தேதி, மயிலை மாங்கொல்லையில் மத்திய அமைச்சர் சிதம்பரம் பங்கேற்க இருந்த பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டம் இரண்டாவது முறையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. கும்பகோணத்தில், 6-ம் தேதி வாசன் பங்கேற்க இருந்த பொதுக்கூட்டம் மற்றும் ஞானதேசிகன் பங்கேற்க இருந்த ஈரோடு, சேலம், நாமக்கல், லோக்சபா தொகுதிகளின் ஆலோசனைக் கூட்டங்களும் ரத்து செய்யப்பட்டு உள்ளன. நாளை (4-ம் தேதி) நடைபெற இருந்த தேனி, மதுரை, திண்டுக்கல் லோக்சபா தொகுதிகளின் ஆலோசனைக் கூட்டமும் தேதி மாற்றப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்று கொடுத்ததாக அவ்வப்போது கூறும் கட்சிக்கு, சொந்த நாட்டில் கதி இப்படியானதே!
என்ன கொடுமை சார் இது? சிங்கள டூரிஸ்ட் தமிழகத்தில் நடமாடுவதைவிட, காங்கிரசார் நடமாடினால் ஆபத்து அதிகமாக இருக்குமோ!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக