புதன், 24 ஏப்ரல், 2013

பிரான்சில் ஓரின சேர்க்கையாளர் திருமண சட்டம் நிறைவேற்றம் ஜூன் மாதத்தில் முதல் கல்யாணம்

பாரிஸ்: ஓரின சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்ள அனுமதி
அளிக்கும் சட்டம் பிரான்சில் நிறைவேற்றப்பட்டது. வரும் ஜூன் மாதம் ஓரின சேர்க்கையாளர் முதல் திருமணம் நடக்கிறது.பிரான்சில் ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்ளவும், குழந்தையை தத்தெடுத்து வளர்க்கவும் ஒப்புதல் அளிக்கும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள சட்டமசோதாவுக்கு பிரான்ஸ் செனட் கடந்த 12&ம் தேதி ஒப்புதல் அளித்தது. பிரான்சில் நடந்த செனட் உறுப்பினர்கள் கூட்டத்தில் இதற்காக வாக்கெடுப்பு நடந்தது. 179 உறுப்பினர்களை கொண்ட செனட்டில் 157 பேர் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இதற்கிடையில், ஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கு நாடு முழுக்க கத்தோலிக்க கிறிஸ்தவ அமைப்பை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.ஓரின சேர்க்கையாளர் திருமணத்தை அங்கீகரித்து சட்டம் கொண்டுவரவேண்டும் என்றும் ஆதரவாளர்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வந்தனர். கடந்த மார்ச்சில் நடந்த போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். 12 பேர் கைது செய்யப்பட்டனர்.இந்நிலையில் பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணம் சட்டத்துக்கு ஒப்புதல் அளிப்பதற்கான கடைசிகட்ட வாக்கெடுப்பு நேற்று நடந்தது. இதில் ஓரின சேர்க்கை திருமணத்துக்கு ஆதரவாக 321 பேரும் எதிர்த்து 225 பேரும் வாக்களித்தனர். இதையடுத்து, சட்டம் நிறைவேற்றப்பட்டது.

திருமண சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்ப்பாளர்கள் மிகப்பெரிய போராட்டம் நடத்துவார்கள் என கருதி நாடாளுமன்றத்தை சுற்றிலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். ஆனால் அசம்பாவிதங்கள் எதுவும் நடக்கவில்லை. சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கானவர்கள் நேற்று அமைதி பேரணி நடத்தினர்.சட்டம் குறித்து நீதித்துறை அமைச்சர் கிறிஸ்டியன் டாபிரா கூறுகையில், ‘நாடாளுமன்ற வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதை தொடர்ந்து ஓரின சேர்க்கையாளர் திருமண சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. முதல் ஓரின ஜோடி திருமணம் வரும் ஜூன் மாதம் நடக்கும்’ என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக