செவ்வாய், 23 ஏப்ரல், 2013

பிரிட்டனில் மிகப்பெரிய குதிரைப் பந்தய மோசடி

பிரிட்டனில் இதுவரை இல்லாத வகையில் குதிரைப் பந்தயப் போட்டிகளில்

மிகப் பெரும் மோசடி நடந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. இங்கே குதிரைப் பந்தயத்தின் தலைமையகம் என்று கருதப்படும் நாட்டின் கிழக்கேயுள்ள நியூ மார்க்கெட் பகுதியில் இருக்கும் கோடோல்ஃபின் குதிரை லாயத்திலுள்ள 11 குதிரைகளுக்கு ஊக்க மருந்து அளிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள 45 குதிரைகளில் பதினொன்றுக்கு ஊக்க மருந்து அளிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ள நிலையில், கோடோல்ஃபின் குதிரை லாயத்தின் பயிற்சியளர் மஹ்மூத் அல் ஜரூனி, பிரிட்டிஷ் குதிரைப் பந்தய விசாரணை ஆணையத்தின் முன்னர் ஆஜராகவுள்ளார். தடை செய்யப்பட்ட ஊக்க மருந்துகளை குதிரைகளுக்கு அளித்ததையும் அது மிகப் பெரும் தவறு என்பதையும் அல் ஜரூனி ஒப்புக்கொண்டுள்ளதாக கோடோல்ஃபின் இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது. 'துபாய் அரச குடும்பத்துடன் தொடர்பு' இந்தக் குதிரை லாயம் துபாயின் மன்னர் ஷேக் முகமதுக்கு சொந்தமானது. ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தை ஆளும் மக்தூம் குடும்பத்துக்கு சொந்தமான குதிரைகள் மட்டுமே கோடோல்ஃபின் லாயத்தின் பராமரிக்கப்படுகிறது. துபாய் மன்னர் ஷேக் முகமது< அந்தக் குதிரை லாயத்தில் நடைபெற்றுள்ள சம்பவங்கள் குறித்து தாங்கள் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும், இது ஒரு கறுப்பு தினம் என்றும் அந்த குதிரை லாயத்தின் மேலாளர் சைமன் கிறிஸ்ஃபோர்ட் கூறியுள்ளார்.

ஏப்ரல் மாதம் ஒன்பதாம் தேதி அல் ஜரூனி அவர்களால் நியூ மார்க்கெட் பகுதியிலுள்ள பேடாக்ஸ் குதிரை லாயத்திலுள்ள 45 குதிரைகளிடமிருந்து சோதனைகளுக்காக சிறுநீர் பெறப்பட்டது என்றும், அதை பரிசோதித்தபோது தடைசெய்யப்பட்ட ஊக்க மருந்து பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது என்றும் குதிரைப் பந்தய தடயவியல் ஆய்வுக் கூடம் தெரிவித்துள்ளது. பல நாடுகளில் குதிரைப் பந்தயம் பிரபலமாக உள்ளது பரிசோதனைகளின் போது 11 குதிரைகளில் சிறுநீரில் தடைசெய்யப்பட்ட ஊக்க மருந்துகளான ஸ்டேனசோலால் மற்றும் எதில்ஸ்ட்ரெனொலால் ஆகியவை இருந்தது தெரிந்தது என்று சோதனைக் கூடத்தின் தலைவர் ஆடம் பிரிக்கெல் பிபிசியிடம் தெரிவித்துள்ளார். இந்தக் குதிரை லாயத்தில் இருந்த ரிவில்டிங் எனும் பெயருடைய குதிரை பிரிட்டனில் மிகவும் பிரபலமான ராயல் ஆஸ்காட் பந்தயத்தில் வென்ற குதிரை ஆகும்.
மொண்டேரோஸோ எனும் குதிரை உலகிலேயே மிகவும் அதிகமான பரிசுத் தொகையை அளிக்கும் துபாய் உலகக் கோப்பையை கடந்த ஆண்டு மார்ச் மாதம் வென்றது என்பதும் குறிப்பிடத்தகுந்தது.
தனக்கு சொந்தமான குதிரை லாயத்தில் இருக்கும் குதிரைகளுக்கு ஊக்க மருந்து கொடுக்கப்பட்டுள்ளதை கேட்டு தான் அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளதாகவும், இதனை சிறிதும் சகித்துக்கொள்ள முடியாது என்றும் துபாயின் அரசர் ஷேக் முகமது தெரிவித்துள்ளதாக அந்த குதிரை லாயத்தின் போட்டிகளுக்கான் மேலாளர் கிறிஸ்ஃபோர்ட் கூறியுள்ளார்.
தமது லாயத்தில் உள்ள நடைமுறைகள் மற்றும் கட்டுபாடுகளை உடனடையாக மீளாய்வு செய்யுமாறும் ஷேக் முகமது தனக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் சைமன் கிறிஸ்ஃபோர்ட் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக