ஞாயிறு, 21 ஏப்ரல், 2013

டெல்லி 5 வயது சிறுமி பலாத்காரத்தில் கும்பல் தொடர்பு அம்பலம்

டெல்லியில் 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்தது தொடர்பாக கைது
செய்யப்பட்ட வாலிபரின் நண்பரை தேடி போலீசார் பீகார் விரைந்துள்ளனர். குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வலியுறுத்தி பல இடங்களில் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. இதனால் டெல்லியில் பதற்றம் நிலவுகிறது.கிழக்கு டெல்லி காந்தி நகரை சேர்ந்த 5 வயது சிறுமி, கடந்த 15ம் தேதி திடீரென காணாமல் போனாள். அவளை காணவில்லை என போலீசில் பெற்றோர் புகார் கொடுத்தனர். போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று முன்தினம், வீட்டின் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் கீழ்தளத்தில் உள்ள அறையில் சிறுமி அடைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த அறையில் தங்கியிருந்த மனோஜ் குமார் என்ற 22 வயது வாலிபர், சிறுமியை கடத்தி அவளை கொடூரமாக பலாத்காரம் செய்து வந்தது தெரிய வந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சிறுமி, எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள்.


டெல்லியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஓடும் பஸ்சில் கும்பலால் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்ட மருத்துவ மாணவி பலியான சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. டெல்லியில் பெரியளவில் போராட்டங்கள் நடந்தன. இந்நிலையில், 5 வயது சிறுமி கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டதால் மக்கள் மீண்டும் ஆவேசமாகி உள்ளனர். டெல்லியில் பல இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகிறது.

சிறுமியை பலாத்காரம் செய்த மனோஜ் குமார், சொந்த ஊரான பீகார் மாநிலம் முசாபர்பூருக்கு தப்பியது தெரிய வந்தது. நேற்று முசாபர்பூர் சென்ற போலீசார் அவரை கைது செய்து டெல்லி அழைத்து வந்து விசாரித்தனர். பலாத்காரத்தில் அவரது நண்பர் பிரதீப்குமார் என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அவரை தேடி தனிப்படை போலீசார் மீண்டும் பீகார் விரைந்துள்ளனர். சிறுமி பலாத்காரத்தில் கும்பல் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். பலாத்காரத்தில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்று விசாரணையை முடுக்கி உள்ளனர்.

இந்நிலையில், மனோஜ் குமாரை கர்கர்டுமா கோர்ட்டில் போலீசார் இன்று ஆஜர்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் சிறுமி பலாத்கார சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அரசியல் தலைவர்கள், குற்றவாளிக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். மேலும், பல்வேறு அமைப்பினர், பொதுமக்கள் டெல்லியில் பல இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லி போலீஸ் தலைமை அலுவலகம், காந்தி நகர் போலீஸ் நிலையம், எய்ம்ஸ் மருத்துவமனை, உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே வீடு உள்பட பல இடங்களில் நேற்று போராட்டம் நடந்தது. அப்போது பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் மோதல் வெடித்தது.
போலீசாரை கண்டித்து நேற்று முன்தினம் நடந்த போராட்டத்தின் போது பெண் ஒருவர் உதவி கமிஷனர் பி.எஸ்.அலாவத்தால் தாக்கப்பட்டார். இந்த காட்சிகள் மீடியாக்களில் வெளியானதை தொடர்ந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆனால் அவரை கைது செய்ய வேண்டும் என போராட்டக்காரர்கள் கூறியுள்ளனர். இதை வலியுறுத்தி இன்று பல்வேறு போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளதால் தலைநகரில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக