ஞாயிறு, 21 ஏப்ரல், 2013

தமிழ்நாட்டின் உண்மையான வரலாற்று பதிவு : நக்கீரன் -25’ ஆவணப்பட வெளியீட்டு



நக்கீரன்… இது வெறும் பெயரல்ல. 25 ஆண்டுகால தமிழகத்தின் வரலாறு என்ற முன்மொழிவுடன் வெளியி டப்பட்டிருக்கிறது நக்கீரன்25 என்ற ஆவணப்படம். ஒன்றரை மணிநேரம் அளவிலான இந்த ஆவணப்படத்தின் வெளியீட்டு விழா, நக்கீரன் தனது 25ஆவது ஆண்டை நிறைவு செய்யும் நாளான 20-4-2103 அன்று சென்னை வடபழனியில் உள்ள ஆர்.கே.வி. ஸ்டுடியோ அரங்கில் வெளியிடப்பட்டது. 
ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு இந்த ஆவணப்பட குறுந்தகட்டை வெளியிட, எழுத்தாளரும் பேச்சாளருமான திருச்சி செல்வேந்திரன் பெற்றுக்கொண்டார். கல்கண்டு ஆசிரியர் லேனா தமிழ்வாணன், கவிஞர் மனுஷ் யபுத்திரன், கவிஞர்  தமிழச்சி தங்கபாண்டியன், பத்திரிகையாளர் இரா.ஜவஹர், வழக்கறிஞர் பி.டி.பெருமாள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
ஆவணப்படத்தை எழுதி-இயக்கிய இரா.வி.பிரபாவதி (நக்கீரன் ஆசிரியரின் மகள்) மற்றும் அவரது குழுவைச் சேர்ந்தவர்கள் விழா மேடையில் சிறப்பு செய்யப்பட்டனர்.

நீதியரசர் சந்துரு பேசும்போது, இந்த ஆவணப்படத்தைப் பார்க்கும்போது நக்கீரன் என்ற பத்திரிகை தமிழகத்தில் எவ்வளவு சாதனைகளைப் படைத்திருக்கிறது என்பது தெரிகிறது. எனினும் இது முழுமையான ஆவணப்படம் என்று சொல்லமுடியாது. ஏனென்றால் 2012ல் நக்கீரன் அலுவலகம் மீது நடந்த தாக்குதல் இதில் சரியாகப் பதிவாகவில்லை. ஒருவர் மரக்கறி சாப்பிடுகிறவரா, மாட்டுக்கறி சாப்பிடுகிறவரா என்பது பற்றி நிறைய தகவல்கள் உள்ளன.

மாட்டுக்கறி சாப்பிடும் பழக்கம் பற்றி புத்தகங்களே எழுதப்பட்டுள்ளன. அதைப் பற்றி ஒரு செய்தியை நக்கீரன் வெளியிட்டது. அது தவறு என்றால், தங்கள் உரிமையைப் பாதிக்கிறது என்றால் அதற்கு மறுப்புச் செய்தியை சம்பந்தப்பட்டவர்கள் வெளியிடலாம். ஆனால், அந்த செய்திக்காக அமைச்சர்களாக இருப்பவர்களே களமிறங்கித் தாக்குதல் நடத்தியது என்பது மோசமான நடவடிக்கை. ஜனநாயகத்திற்கு விரோதமானது. அந்த நிகழ்வையும் இதில் சேர்க்க வேண்டும். இந்த ஆவணப்படம் தமிழகம் முழுவதும் திரையிடப்படவேண்டும் என்றார்.

திருச்சி செல்வேந்திரன் தன்னுடைய உரையில்,நக்கீரனில் உள்ள எல்லோருமே இந்த நிறுவனத்திலேயே உருவாக்கப்பட்ட கருவிகள். அதனால்தான் சிறப்பான முறையிலே செயல்படுகிறார்கள். ஒரு தவறு நேர்ந்தாலும் அதற்கானப் பொறுப்பைத் தட்டிக்கழிக்காமல் ஏற்றுக்கொள்பவர்  நக்கீரன் கோபால். எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் தவறுகளை சுட்டிக்கட்டும் துணிவு நக்கீரனுக்கு உண்டு. இந்த ஆவணப்படம் பாராட்டுக்குரியதல்ல. பெருமைக்குரியது. இதை இயக்கியவரின் பெயரே பிரபாவதி. ஒரு மாபெரும் தலைவனின் (பிரபாகரன்) பெண்பாற் பெயரை அவருக்கு சூட்டியிருக்கிறார் அவரது தந்தை. அதற்கேற்ப அவருடைய ஆற்றல் இருக்கிறது எனத் தெரிவித்தார்.



கவிஞர்  தமிழச்சி தங்கபாண்டியன் பேசுகையில், பத்து ஆண்களின் பார்வையைவிட ஒரு பெண்ணின் இதயம் ஆழமாகப் பார்க்கக்கூடியது. நக்கீரனின் 25ஆண்டுகால வரலாற்றை ஒரு பெண்ணாக- பெண்ணின் பார்வையில் மிகச்சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறார் பிரபாவதி. Gone with the wind என்ற ஆங்கிலப்படத்தில் ஒரு துணைநடிகை, போர்வீரன் ஒருவருக்கு கட்டுப்போடுவது போன்ற காட்சி தொடங்கும். கேமரா கோணம் விரிவடையும்போது அங்கே நூற்றுக்கணக்கான போர்வீரர்கள் கிடப்பார்கள். அவர்களுக்கு சிசிச்சையளிக்கும் காட்சி தெரியும். ஒரு கேமராவின் பார்வை எத்தனை வலிமையானது என்பதைச் சொல்லும் காட்சி இது. அதுபோல இதில் நக்கீரன் அலுவலகத்தைக் காட்டும்போது ஒரு தூக்கணாங்குருவி கூட்டிலிருந்து அந்தக் காட்சி விரிகிறது. இது புதியவர் ஒருவர் எடுத்த ஆவணப்படம் போலத்  தெரியவில்லை. தேர்ந்த படைப்பாளியின் ஆவணப்படமாக இருக்கிறது என்றார்.

கவிஞர் மனுஷ்யபுத்திரன் தன்னுடைய உரையில், நக்கீரனின் 25 ஆண்டுகால பயணம் என்பது தமிழக அரசியல்-சமுதாய வாழ்வின்  கால்நூற்றாண்டு வரலாறு. அதை இந்த ஆவணப்படம் மிகச்சிறப்பாக பதிவு செய்திருக்கிறது. இதில் பதிவு செய்யப்படாத சம்பவங்களும் உண்டு. காதலித்த ஜோடிகளுக்கு விஷம் கொடுத்துக் கொன்ற சம்பவத்தை முதலில் வெளிக்கொண்டு வந்தது நக்கீரன்தான். இப்படி எத்தனையோ செய்திகள் என் மனதில் தோன்றுகின்றன. இந்த ஆவணப்படத்தை முழுத் திரைப்படமாக எடுக்கவேண்டும். அந்தளவுக்கு செய்திகள் இருக்கின்றன. நக்கீரன் கோபாலை யாரும் விலை  கொடுத்தோ, மிரட்டியோ, பத்திரிகைக்கு விளம்பரம் கொடுத்தோ வாங்கிவிட முடியாது. அவரும்  நக்கீரன் குடும்பத்தினரும் எத்தகைய உறுதிமிக்கவர்கள் என்பதை இந்த ஆவணப்படம் எடுத்துக் காட்டுகிறது என்றார்.
லேனா தமிழ்வாணன் தன்னுடைய உரையில், நக்கீரனின் சாதனைகளைப் பட்டியலிட்டு இன்றும் சமுதாயத் திற்குத் தேவையான செய்திகளை வெளியிட்டு வருகிறது என்றார். பத்திரிகையாளர் இரா. ஜவஹர், விறுவிறுப்பான ஒரு ஆவணப்படமாக இது இருக்கிறது. மிகச்சிறப்பாக எடுக்கப்பட் டிருக்கிறது  என்றார்.
வழக்கறிஞர் பி.டி.பெருமாள் பேசும்போது, நக்கீரன் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்திய சட்டப்போராட்டத்தினால் கருத்து சுதந்திரம் பற்றிய சட்டத்திலேயே பல வளர்ச்சிகள் ஏற்பட்டுள்ளன. பெரிய பெரிய சட்ட நிபுணர்கள்கூட, நாங்கள் நக்கீரன்  சந்தித்த வழக்குகளில் உள்ள தீர்ப்புகளை முன்மாதிரியாகக்கொண்டுதான் நீதிமன்றத்தில் வாதாடுகிறோம் என்று சொல்கிறார்கள். அதற்கு காரணம், நக்கீரன் கோபாலின் உறுதிதான் என்றார்.
ஏற்புரை வழங்கிய ஆவணப்பட இயக்குநர் ஆர்.வி.பிரபாவதி, 25ஆண்டுகால வரலாற்றை ஆவணமாக எடுப்பதற்கே இத்தனை சிரமம் இருக்கிறதே, 25 ஆண்டுகாலம் நக்கீரனை நடத்த எத்தனை சிரமப்பட்டி ருப்பார்கள்? நக்கீரன் சந்தித்த போராட்டங்களுக்கு அதன் ஊழியர்கள் எப்படி துணை நின்றார்களோ அதுபோலவே ஊழியர்களின் குடும்பத்தினரும் துணை நின்றார்கள். நக்கீரனில் உள்ள என் மாமாக்களுக்கும் அத்தைகளுக்கும் மிகவும் நன்றி. என்னுடன் பணியாற்றிய ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், இசையமைப்பாளர் உள்பட எல்லோருமே நக்கீரன் குடும்பத்தினராக மாறி இரவு பகல் பாராமல் உழைத்தார்கள். அதனால்தான் இதனை சாதிக்க முடிந்தது என்றார்.
ஒன்றரை மணி நேரம் அளவிலான நக்கீரன் 25 ஆவணப்படத்தில் நக்கீரன் சாதித்த சாதனைகள், சந்தித்த சோதனைகள், எதிர்கொண்ட நெருக்கடிகள், துன்பங்கள், அதனைக் கடந்த வெற்றிகள் அனைத்தும நேர்த்தியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

- கோவி லெனின்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக