வியாழன், 4 ஏப்ரல், 2013

அ தி.மு.க கிண்டல் பேச்சுக்கு துரைமுருகன்மீது ‘நில அபகரிப்பு’ வழக்குகள்? என்ன பாடு படப்போகிறாரோ

தி.மு.க., பேச்சால் செல்வாக்கு பெற்ற கட்சி. மேடைப் பேச்சுக்களில்
சுவாரசியம் காட்டுவதில் அவர்களை அடிக்க ஆளில்லை.
அது புரிந்துதானோ, என்னவோ, தற்போதைய ஆட்சியில் தி.மு.க.-வில் யார் ஒருவரின் ‘கிண்டல்’ மேடைப் பேச்சுகள் சற்றே அதிகமாக போனால், அவர்மீது ‘நில அபகரிப்பு’ வழக்குகள் வேகம் எடுக்கும் என்று பரவலாக பேசப்படுகிறது.
இந்த நிலையில், தி.மு.க.வின் துரைமுருகன் சமீபத்தில் மதுரையில் பேசிய மேடைப்பேச்சு இது. சுவாரசியமாக உள்ளது, படித்துப் பாருங்கள்:
முதுகு தேய்த்த எருமை மாடு!
தமிழக சட்டசபைக்கு உள்ளே யார் எந்தக் கேள்வியைக் கேட்டாலும் சரி, கருணாநிதியை சீண்டாமல் பேசவே மாட்டார்கள். தொழுவத்தில் இருந்து அவிழ்த்து​ விடப்படும் ஒவ்வொரு எருமையும் தூணில் ஒரு தேய் தேய்த்துவிட்டுத்தான் போகும். அப்படித்தான் இவர்கள் கருணாநிதி மீது உரசுகிறார்கள்.

இப்போதெல்லாம் சபையில் நான் பேசுறதே இல்லை. என்னத்தைப் பேச?
நாம ஒரு வார்த்தை சொல்லி முடிக்கறதுக்குள்ள, எட்டு மந்திரிங்க எந்திருக்​கிறாங்க. கரன்ட் பிரச்சனையைப் பற்றிப் பேசுறதுக்கு எழுந்தாரு எ.வ.வேலு. உடனே, அந்தத் துறை மந்திரி எழுந்து 15 நிமிஷம் நிறுத்தாமப் பேசினார்.
எதுவுமே புரியலை.
அந்தாளு அடுத்த இன்னிங்ஸ் ஆடறாரு!
கிடைச்ச கேப்ல வேலு பேச ஆரம்பிக்க, அந்த மந்திரி மறுபடியும் 15 நிமிஷம் வளவளன்னு ஆரம்பிச்சுட்டாரு. அதுவும் புரியலை.
அதுக்குள்ள சபாநாயகர், “வேலு உங்க டைம் முடிஞ்சி போச்சு..  உட்காருங்க”னு சொல்லிட்டாரு.
உடனே, நான் கையைத் தூக்கினேன். சபாநாயகர் “என்ன?”ன்னாரு.
அண்ணே.. நம்மாளுக்கு அட்வைஸூ சொல்லவா?
“உங்களை எந்தக் குறையும் சொல்லப் போறது இல்லை சார். எங்க கட்சி உறுப்பினர் வேலுவுக்கு சில அறிவுரைகளைச் சொல்ல விரும்புறேன். அவ்வளவுதான்”னேன்.
சபாநாயகர் சந்தோஷமா, சரின்னாரு.
நான் எழுந்து, “வேலு அவர்களே, 18 மணி நேரம் என்ன? 24 மணி நேரமும் மின்தடை ஏற்படட்டும். தமிழ்நாடே இருள்ல மூழ்கட்டும். அந்தக் கொடுமையைக்கூடப் பொறுத்துக்கலாம். ஆனா, பதில் சொல்றேன்ற பேர்ல இந்த மந்திரிங்க கொடுக்கிற தொல்லையைப் பொறுத்துக்க முடியலை. தயவுசெய்து உட்காருங்க” என்றேன்.
சபாநாயகரே விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பிச்சிட்டாரு.
உங்கள மாதிரி வெபரம் கெட்டவன்..
“நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மூன்றே மாதத்துக்குள் மின் தட்டுப்பாட்டை ஒழிச்சிடு​வோம்னு சொன்னீங்களா? இல்லியா?”னு கேட்டோம்.
உடனே அவங்க அமைச்சர் எழுந்து, “யாராவது அப்படிச் சொல்லுவாங்களா? உங்களை மாதிரி எவனாச்சும் விவரம் கெட்டவன் சொல்லியிருப்பான்” என்றார்.
உடனே கடந்த ஆண்டு அவர்கள் தாக்கல் செய்த பட்ஜெட் அறிக்கையை எடுத்து, 42-ம் பக்கத்தைப் படிச்சுக் காட்டினோம். “இப்ப விவரம் கெட்டவர் நீங்களா? நாங்களா?”ன்னு கேட்டோம்.
சபையில மேஜையைத் தட்டுறதைத் தவிர, எதுவுமே அவங்களுக்குத் தெரியலை.
சிறுவிவசாயி இப்டின்னா.. செந்தோழன் அப்டி!!
சட்டமன்ற ‘சிறு விவசாயிகள்’ அ.தி.மு.க.காரன்​தான் இப்படின்னா, கம்யூனிஸ்ட்காரங்களும் அந்தம்மாவுக்கு சாமரம் வீசிக்கிட்டு இருக்காங்க. இவங்க இம்சை போதாதுன்னு, இன்னும் சிலர் இருக்காங்க. அவங்க எல்லாம் சட்டமன்றத்தின் சிறு விவசாயிகள்.
அவனுங்க ஒரு பக்கம் அந்தம்மா​வைப் பாராட்டுறேன்ற பேர்ல கொலையாக் கொல்றாங்க.
அந்தம்மா மைசூர்ல இருந்து கொண்டு வந்தாங்களா?
இப்ப புதுசா அந்தம்மாவை காவிரித்தாய்னு சொல்றாங்க. அந்தம்மா என்னமோ மைசூர்ல இருந்து காவிரியைக் கையோடு கொண்டுவந்தது மாதிரி.
காவிரிப் பிரச்னை இருநூறு, முந்நூறு வருஷமா இருக்கு. இந்தப் பிரச்னை பற்றி முதன்முதலில் கர்நாடக அரசோடு பேச்சுவார்த்தை நடத்தி மத்திய அரசின் கவனத்துக்குக் கொண்டு​போனவர் கருணாநிதிதான்.
காவிரியில் மொத்த தண்ணீர் எவ்வளவு? அதை எப்படிப் பங்கிடுவது? என்ற பிரச்சனை வந்தது. உடனே, தலைக்காவிரி முதல் கீழ் அணை வரை உள்ள தண்ணீரை அளப்பதற்காக ஃபேக்ட் பைண்டிங் குழுவை அமைத்தவரும் கருணாநிதிதான். அதன் மூலம் காவிரியில் மொத்தம் 750 டி.எம்.சி. தண்ணீர் இருப்பதை வெளிப்படுத்தியவரும் கருணாநிதிதான்.
பிள்ள பெத்தது நாங்க, பேரு வெச்சது நீங்க
இதன் பிறகு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது, காவிரி நடுவர் மன்றத்தை அமைத்தது, இடைக்கால உத்தரவு பெற்றது, காவிரி ஆணையத்தை அமைத்தது எல்லாமே கருணாநிதிதான். இந்த நீண்ட வரலாற்றில் எந்த இடத்திலாவது அந்த அம்மாவின் பெயர் வந்தி​ருக்கிறதா?
ஆக, பொண்ணு பார்த்து, பத்திரிகை அடிச்சி, கல்யாணம் பண்ணி, பிள்ளையப் பெத்தது நாங்க. பேர் வெச்சது மட்டும்தான் நீங்க. அதுக்கு காவிரித் தாயேன்னு பட்டம் என்றார்.
இந்தப் பேச்சுக்கு, துரைமுருகன் என்ன பாடு படப்போகிறாரோ… எத்தனை கோர்ட்டோ.. வெயிட் பண்ணி பார்க்கலாம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக