திங்கள், 8 ஏப்ரல், 2013

ப.சிதம்பரம்: ராஜீவ்காந்தியை இழந்தோம்;அதற்கு யார் காரணம் என்பது உங்களுக்கே தெரியும்

 இலங்கை தமிழர்கள் பிரச்சினையில் இந்திரா காந்தி, ராஜீவ்காந்தி காலம் முதலே காங்கிரஸ் கட்சி உறுதுணையாக இருந்து வருகிறது. அதற்காக, விலை மதிப்பில்லாத மாணிக்கமான ராஜீவ்காந்தியை இழந்தோம்.
அம்பேத்கார் பிறந்தநாளையொட்டி, சென்னை சிந்தாதிரிப்பேட்டை சிங்கன்ன செட்டி தெருவில், காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டத்திற்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கூட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ. கு.செல்வப்பெருந்தகை தலைமை தாங்கினார். மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். கூட்டத்தில், தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் எம்.பி., கிருஷ்ணசாமி எம்.பி., முன்னாள் எம்.பி. வள்ளல் பெருமான், சேவாதள காங்கிரஸ் தலைவர் செல்வராஜ், முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன், கவுன்சிலர் தமிழ்செல்வன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.கூட்டத்தில் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் பேசியபோது, ’’மத்திய பட்ஜெட்டில் ஒடுக்கப்பட்ட மக்கள் நலனுக் காக இந்த ஆண்டு 41,561 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதேபோல் பழங்குடியின மக்களுக்காக 24,598 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி ஒதுக்கீட்டை வேறு திட்டங்களுக்காக செலவிடக்கூடாது என உத்தரவிடப் பட்டு ள்ளது.
தற்போதைய மத்திய பட்ஜெட் பெண்கள், இளைஞர்கள், ஏழை – எளிய மக்களை மனதில் வைத்து நிறைவேற்றப்பட்டது. இவர்களில் சாதி, மத பேதம் கிடையாது. இன்று ஆண்களுக்கு இணையாக பெண்கள் படித்திருந்தாலும் அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்படுவதில்லை.ஆனால், இந்த பட்ஜெட்டில் பெண்களுக்கான வங்கி தொடங்கப்படும் என்றும், அதற்காக ரூ.1000 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு தனது அறிக்கையை இம்மாதம் 30–ந் தேதிக்குள் தரும். அதன் மூலம் புது கம்பெனி ஒன்று தொடங்கப்படும். நவம்பர் மாதம் பெண்களுக்கான வங்கி தொடங்கப்பட்டு விடும்.நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு வேலை கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதை அவர்களுக்கு நாம் தரும்போது வளமான, வலிமையான நாடாக இந்திய வளரும். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில்தான் கல்வி கடன் திட்டம் கொண்டுவரப்பட்டது. 24 லட்சம் மாணவர்களுக்கு 50 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டது. நடப்பு ஆண்டில் 10 லட்சம் இளைஞர்களுக்கு கைத்திறன் தொழில் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு தேசிய அளவில் தேர்வு நடத்தி வெற்றிபெறும் மாணவர்களுக்கு ரூ.10000 வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இதேபோல், ஏழை – எளிய மக்களுக்கு வழங்கப்படும் உதவிப் பணம் அவர்களின் கையில் முழுமையாக போய் சேருவது கிடையாது. எனவே, உங்கள் பணம் உங்கள் கையில் திட்டத்தின் மூலம் கொடுக் கப்படுகிறது.

2014–ம் ஆண்டு மார்ச் 31–ந் தேதிக்குள் நாடு முழுவதும் இந்த திட்டம் கொண்டுவரப்படும். மேலும், பல துறைகளின் உதவி தொகையும் இந்த திட்டத்தின் மூலம் வழங்கப்படும். மேலும், கியாஸ் சிலிண்டருக்கான மானியமும் குடும்ப தலைவர் வங்கிக் கணக்கிலேயே நேரடியாக செலுத்தும் திட்டமும் கொண்டுவரப்படும்.இலங்கை தமிழர்கள் பிரச்சினையில் இந்திரா காந்தி, ராஜீவ்காந்தி காலம் முதலே காங்கிரஸ் கட்சி உறுதுணையாக இருந்து வருகிறது. அதற்காக, விலை மதிப்பில்லாத மாணிக்கமான ராஜீவ்காந்தியை இழந்தோம். அதற்கு யார் காரணம் என்பது உங்களுக்கே தெரியும்’’ என்று பேசினார் nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக