வியாழன், 4 ஏப்ரல், 2013

ஆ.ராசாவுடன் பேசியது நிஜமா? நேரில் ஆஜராகி சொல்ல மறுத்தார் பிரதமர் மன்மோகன்!

தி.மு.க. முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, “ஸ்பெக்ட்ரம் உரிமங்கள்
வழங்குவது குறித்து பல முறை பிரதமருடன் விவாதித்து இருக்கிறேன்” என்று கூறியது நிஜமா? இந்தக் கேள்விக்கான பதிலை, நாடாளுமன்ற கூட்டு குழு முன் ஆஜராகி செல்ல மறுத்திருக்கிறார், பிரதமர் மன்மோகன் சிங்.
மத்திய தொலை தொடர்புத்துறை அமைச்சராக ஆ.ராசா பதவி வகித்தபோது 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் வழங்கப்பட்டன. இந்த ஒதுக்கீட்டில், மத்திய அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த ஊழல் புகார் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி, ஆ.ராசா உள்ளிட்ட பலரை கைது செய்து வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு விசாரணை டெல்லியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. அத்துடன் இந்த முறைகேடு குறித்து நாடாளுமன்ற கூட்டு குழுவும் விசாரணை நடத்தி வருகிறது.
“நாடாளுமன்ற கூட்டு குழு முன்பு ஆஜராகி எனது தரப்பு நியாயத்தை தெரிவிக்க வாய்ப்பு வழங்க வேண்டும்” என்ற ஆ.ராசாவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஆ.ராசாவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கேள்வி தொகுப்புக்கு பதில் அளித்து 17 பக்க கடிதம் ஒன்றை கூட்டு குழுவிற்கு அவர் அனுப்பிவைத்தார்.
அதில், “ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் வழங்குவது குறித்து பல முறை பிரதமருடன் விவாதித்து இருக்கிறேன்” என அவர், பிரதமரை காட்சிக்குள் இழுத்திருந்தார்.
இந்த (பிரதமருக்கு) சங்கடமான சூழ்நிலையில், நாடாளுமன்ற கூட்டு குழு உறுப்பினரும், பா.ஜ.க. மூத்த தலைவருமான யஷ்வந்த் சின்கா, ‘‘ஆ.ராசா எழுப்பிய குற்றச்சாட்டுகளில் இருந்து உங்களை விடுவித்துக் கொள்ள, கூட்டு குழு முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்கவும்’’ என்று தாம் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.
ஆனால், நாடாளுமன்ற கூட்டு குழு முன்பு ஆஜராக வேண்டும் என்ற யஷ்வந்த் சின்காவின் கோரிக்கையை பிரதமர் மன்மோகன்சிங் நிராகரித்து விட்டார்.
யஷ்வந்த் சின்காவுக்கு பிரதமர் எழுதிய பதில் கடிதத்தில், நாடாளுமன்ற கூட்டு குழுவில் ஆஜர் ஆக முடியாது என்பதை திட்டவட்டமாக தெரிவித்துள்ள மன்மோகன்சிங், இந்த விவகாரத்தில் தனக்கோ அல்லது மத்திய அரசுக்கோ மறைப்பதற்கு எதுவும் இல்லை என்று தொடக்கத்தில் இருந்தே கூறி வருவதாக குறிப்பிட்டு இருக்கிறார்.
பிரதமர் கடிதத்தில் எழுதுவதை, ஏன் கூட்டுக்குழு முன்னிலையில் கூறக்கூடாது?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக